லாட்டரிச் சீட்டு – தென் ஆப்பிரிக்கச் சிறுகதை
வில்லியம் ஊஸ்துய்ஸென்

தமிழில்: தமிழில் – எம்.எஸ்.

ஜெரோமுக்கும் அவன் தம்பி லாயிடுக்கும் இப்போது வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலைWilliam வந்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை. அவர்கள் இருவரும் மீன் சந்தைக்குப் பின்னால் காற்றுக்கும் வழிப்போக்கர் பார்வைக்கும் ஒதுங்கி, சுவர் பக்கமாக அடுக்கி வைத்திருந்த பெட்டிகளின் அருகே இருந்தனர். ஜெரோம் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியின்மேல் உட்கார்ந்திருந்தான். லாயிடின் சக்கர நாற்காலி அவன் அருகே இழுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

ஜெரோமின் கழுத்து வலித்தது. அவன் பேசும்போது ரகசியக் குரல்போல் ஒலித்தது.

இன்னாரு தடவை நம்பரைப் படி. சற்று மெதுவாக.

ஜெரோம் தன் கையிலிருந்த துண்டு காகிதத்தைப் பத்திரமாகப் பார்த்து, கைவிரலால் ஒவ்வொரு நம்பரையும் தொட்டுக்கொண்டே போனான். அவன் உதடுகள் அசைந்தன. லாயிட் ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்த நம்பர்களை ஒவ்வொன்றாக உரத்துப் படித்தான்.

மூன்று, பதினைந்து, இருபது, முப்பத்தேழு…

ஜெரோம் தன் விரல்களை மூடி காற்றில் ஒரு குத்து குத்தினான்.

ஜெயித்துவிட்டோம்டா தம்பி. மூன்று பங்காக வைத்தாலும் நாம் லட்சாதிபதிகள்தாம்.

முன்னால் குனிந்து லாயிடின் தோள்களில் விளையாட்டாகக் குத்தினான். ஒரு லேசான தட்டுதான்.

பணம் மழையாகக் கொட்டிவிட்டது லோ. சீட்டை காசாக்கியதும் நாம் இந்த இடத்தையே காலிசெய்துவிட வேண்டும்.MS

லாயிடுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள் செல்வந்தர்களாகி விட்டார்கள். இனிமேல் இங்கே இருக்க வேண்டாம். வெள்ளைக்காரர்கள் இருக்கும் இடத்துக்குப் போய்விடலாம். அங்கே இரவில் துப்பாக்கிகளின் வெடி சப்தம் இரவில் உங்களைத் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்க வைக்காது. குப்பைப் பைகள் பாதையோரங்களில் சிதறிக் கிடக்காது. அவன் ஜெரோமைப் பார்த்தான்.

எப்போது?

என்ன எப்போது?

இந்த டிக்கெட்டை எப்போது காசாக்கப் போகிறோம்?

ஜெரோம் லாட்டரி டிக்கெட்டை சட்டைப் பையில் திணித்துக் கொண்டான். தம்பியின் பார்வையை அவன் தவிர்த்தான்.

விரைவில்

சை, லாட்டரி டிக்கெட் வாங்குவது பற்றி அவன் என்ன நினைத்திருந்தான்?

சுவரில் சாய்ந்து நின்றபடியே கையை உயர்த்தி லாயிடிடம் பேசாமல் இருக்கச் சைகை செய்தான். தான் நம்பக்கூடிய ஒரு ஆளைக் கண்டுபிடிக்க வேண்டும். வெயிலில் கண்கள் கூசின. தம்பியைப் பார்த்தான். முன்னைவிட தலையை வலித்தது. இடது கண்ணை மூடித் திறப்பது சிரமமாக இருந்தது.

நமக்குத் தெரிந்து யார் இருக்கிறார்கள்? நம்பிக்கைக்கு உரிய ஒரு ஆள்.

எதற்கு?

நமக்காக இந்தச் சீட்டை பணமாக்குவதற்குத்தான். யோசனை செய்து பார், லோ. நமக்குத் தெரிந்தவர் யாராவது …

லாயிட் தன் சக்கர நாற்காலியைத் திருப்பி அண்ணனைப் பார்த்தான். பயனற்ற அவனது கரங்கள் இருமருங்கும் அசைந்தன.

ஆன்டி எப்படி?

ஜெரோம் தலையை அசைத்தான். இல்லை. ஆன்டி பணத்தை எடுத்துக் கொண்டுவிடுவாள். அவளும் அவளுடைய அந்த உதவாக்கரை தேவடியா மகன் ஜானி கார்ஸ்டனுமாக சேர்ந்து அத்தனைப் பணத்தையும் குடித்துத் தீர்ததுவிடுவா£கள். அந்தப் பணம் எல்லாமே தன் தங்கைக் குழந்தைகளை வளர்ப்பதற்காகக் கடவுளாகத் தனக்கு அளித்தது என்று கூறிவிடுவாள். அபபுறம் அதில் ஒரு பைசாகூட அவனும் லாயிடும் கண்ணால் பார்க்கவே முடியாது.

வேறு யார்?

லாயிட் தோள்களைக் குலுக்கினான். ஜெரோமுக்குக் கோபம் வந்தது. எனினும் அடக்கிக் கொண்டான். உள் ஜேபியிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்தான்.  முந்திய நாள் ஆன்டியின் கைப்பையில் இருந்து திருடியது அது. அதைப் பற்ற வைத்து, இரண்டு தடவை புகையை உறிஞ்சிய பிறகு மீண்டும் தன் தம்பியைப் பார்த்தான்.

சொல்லு லாயிட். நம்பிக்கையான ஒரு ஆள் இப்போது நமக்குத் தேவை. உடனே வேண்டும்.

அப்படிப்பட்ட ஆள் யாரையும் எனக்குத் தெரியவில்லையே.

ஜெரோம் தன் கையால் கட்டை தலைமுடியைத் தேய்த்து விட்டான். பின் மெதுவாகக் கூறினான்.

எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும் நாய்க்குப் பிறந்த ஒரு ஆள்கூட நம்பும்படியாக இல்லையே.

அப்புறம் ஜெரோம் நினைக்கவே தயங்கிய அந்தக் கேள்வியைக் கேட்டான் லாயிட்.

யாருடைய உதவியும் நமக்கு வேண்டாமே. பணத்தை வேறு பங்கு போடவேண்டி வரும்.

ஒரு கூரிய வலி ஜெரோமின் தலை வழியே கண்களின் பின்னாலிருந்து பாய்ந்து சென்றது. கண்களை மூடிக்கொண்டான்.

யாருடனும் பணத்தைப் பங்கு போட்டுக்கொள்ள வேண்டாம். இது நம்முடைய பணம். ஒருத்தருக்கும் ஒரு பைசா கொடுக்கக்கூடாது.

தம்பியின் தோளைக் கெட்டியாகப் பிடித்துக் குலுக்கினான். விரல் நகங்கள் அவன் கையெலும்பை அழுத்தின.

நான் சொல்வதைக் கேள், லோ. இது நம்ம பணம். வேறு யாருக்கும் இதில் பங்கு இல்லை. இதைப் பற்றி வேறு யாரிடமும் மூச்சுவிடக் கூடாது. பரிசுச் சீட்டை எடுத்துக் கொள்வதற்காக நம்மை கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள். நான் சொல்வது புரிகிறதா உனக்கு?

லாயிடின் கண்கள் விரிந்தன. இரண்டு தடவை தலையை ஆட்டினான். கைவிரல்கள் வீல் செயரின் கைகளை அழுத்திப் பிடித்தன.

…..

இரவு தொடங்கியபோதே செய்தி மானன்பெர்க் தெருக்களிலும மதுக்கடையிலும் வேகமாகப் பரவி விட்டது.  ஒருவருக்கொருவர் அதைப் பற்றித்தான் பேசினார்கள்.

பரிசு விழுந்த சீட்டு இங்கேதான் விற்பனையாகியிருக்கிறது. மானன்பெர்கில் யாரோ வாங்கியிருக்கிறார்கள்.

எங்கே?

பத்திரிகையில் இது பற்றிய குறிப்பு இல்லை. மானன்பெர்கில் விற்கப்பட்டதாக மட்டும் தெரிகிறது.

மக்கள் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டனர்.

…..

வெளியே நன்றாக இருட்டிவிட்டது. ஆன்டி மற்றும் ஜானி கார்ஸ்டென் உடன் ஜெரோம் அடுக்களையில் உட்கார்ந்திருந்தான். ஒரே சிகரெட் புகை. மேஜைமேல் அரை புட்டி பிரான்டி இருந்தது. ஒரு தட்டில் சாப்பாட்டின் மிச்சம் இருந்தது.

கொஞ்சம் சிக்கனும் சிப்ஸும் இருக்கிறது. எடுத்துக் கொள்.

ஜெரோம் தலையை ஆட்டினான்.

எனக்குப் பசி இல்லை.

இடதுபுறமாகத் திரும்பி குறுகிய பாதை வழியே சென்று, படுக்கை அறைத் கதவைத் திறந்தான். ஆன்டியின் நான்கு குழந்தைகளும் லாயிடும் அவனுடன் அதை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தோள் பையைக் கீழே இறக்கிவிட்டு, தன் படுக்கையில் சாய்ந்து, கால்களை நீட்டிக் கொண்டான்.

ஜெரோம் உள்ளே நுழைவதைப் பார்த்தான் லாயிட். படித்துக் கொண்டிருந்த புத்ததகத்தை மடியில் போட்டான்.

ஏதாவது பிளான் உண்டா?

ஜெரோம் தலையை அசைத்தான்.

இதுவரை இல்லை. யோசித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் டைம் வேண்டும்.

தன் படுக்கையில் சாய்ந்து, கால்களை நாடிவரை உயர்த்தினான். கண்கள் சுவரில் தன் முகத்திற்கு சமீபம் உறைந்திருந்த ஒரு புள்ளியைப் பார்த்தபடி இருந்தன. தன்னை கேப் பிளாட்ஸிலிருந்து வந்த ஒரு கருப்பின பையனாக நினைக்க விரும்பவில்லை. அதற்குப் பணம் வேண்டும். இந்த நரகத்திலிருந்து தம்பி லாயிடையும் கொண்டுபோய் விடவேண்டும். நினைக்க சுகமாய்த்தான் இருக்கிறது. நடக்கக்கூடிய காரியமா?

…..

செவ்வாய் இரவு. அவன் உலகமே நொறுங்கப் போவதாகத் தோன்றியது. ஆன்டி அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். தோட்டத்து சிறிய கதவைத் திறந்துகொண்டு அவன் வீட்டை நெருங்கியபோது அவள் தன் பெரிய உடம்பால் வாசல் முழுவதையும் மறைத்துக் கொண்டு, ஒரு தோள் கதவுச் சட்டத்தில் சாய்ந்தபடி நிற்கிறாள். கையில் பாதி காலியான பீர் பாட்டில்.

எங்கே போயிருந்தாய்? உனக்காகக் காத்துக் ªகொண்டிருக்கிறேன்.

ஸாரி ஆன்டி. கொஞ்சம் வேலை …

உள்ளே வா.

அவளைத் தாண்டி உள்ளே நுழையும்போது ஜானி கார்ஸ்டென் அவனைத் தடுத்து நிறுத்தினான். குடித்திருந்ததால் அவன் குரல் கரகரத்தது.

உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும் ஜெரோம்.

அவன் இதயம் படபடத்தது. என்ன இது? லாயிட் விஷயத்தை கக்கிவிட்டானா?

உட்கார். நான் சொல்வதைக் கேள்.

ஜானி கார்ஸ்டெனுக்கு எதிரே கதவுக்கு வலது புறமாக உட்கார்ந்தான். கால் தரையை உரசியது. முழங்கையை மேஜைமேல் ஊன்றினான். தேவைப்பட்டால் ஓடிவிட வேண்டும். குடித்திருக்கிறார்கள். வயோதிகம் வேறு. அவர்களால் அவனைத் தடுக்க முடியாது. ஆனால் என்ன பயன்? லாயிடை எப்படி இங்கே விட்டுவிட்டு அவன் மட்டும் போகமுடியும்?

ஆன்டி பேசத் தொடங்கினாள். அவள் குரல் கரகரத்தது.

இன்றைக்கு நான் ஜமாலின் கடைக்குப் போயிருந்தேன். ஏதோ வாங்குவதற்காக. ஜமால் கேட்கிறான. உனக்கு லாட்டரியில் பரிசு விழுந்திருக்கிறதா என்று. இல்லையே, நான் ஒன்றும் அதிர்ஷ்டக்காரி இல்லை என்றேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா?

ஓரு மடக்கு பீரைக் குடித்துவிட்டு ஜெரோவைப் பார்த்தாள். அவன் அவள் பார்வையை சந்தித்தபோது அடுத்து என்ன வரப்போகிறது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

எல்லாமே வேடிக்கையாக இருக்கிறது என்றான் அவன். என்ன வேடிக்கை என்று கேட்டேன். ஜெரோம் ஒவ்வொரு சனிக்கிழமையும் உனக்கு லாட்டரி டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கிறானே என்றான். எனக்கு இப்போ ஒரே குழப்பம். என்னடா உளறுகிறாய் என்றேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் சின்னப் பிள்ளைகளுக்கு லாட்டரி டிக்கெட் விற்பதில்லை. ஆனால் ஜெரோம் ஒவ்வொரு தடவையும் ‘ஆன்டிக்கு’ என்று சொல்லித்தான் வாங்குகிறான். இப்படி ஒரு வருஷமாக உனக்கு லாட்டரி டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கிறான்.

ஜெரோம் தோளைக் குலுக்கினான்.

அதற்காக?

ஆன்டியின் கண்கள் இடுங்கின. அதற்காக நீ போன சனிக்கிழமை வாங்கின லாட்டரி டிக்கெட்டை நான் பார்க்க வேண்டும்.

ஓ, அதற்காகத்தான் இதெல்லாமா? நீ நினைக்கிறபடி…

அவன் மீண்டும் செயற்கையாகச் சிரித்துவிட்டு மேஜையிலிருந்து எழ முயன்றான். ஜானியின் முரட்டுக் கை அவன் தோளில் விழுந்து அழுத்தி அவனைப் பழையபடி உட்காரச் செய்தது.

ரொம்ப அவசரமா? ஆன்டி உன்னிடம் டிக்கெட்டைக் கேட்டாள் அல்லவா?

ஜெரோம் மீண்டும் தோள்களைக் குலுக்கினான்.

நான் அதைத் தூர எறிந்துவிட்டேன். அது பரிசு விழாத டிக்கெட். அதைக் கொண்டு ஒரு உபயோகமுமில்லை.

ஜானி கார்ஸ்டன் தன் மேல் உதட்டைச் சுட்டு விரலால் தடவினான். அவன் தலை இடது வலமாக அசைந்தது. ஆன்டியைப் பார்த்தான்.

இவன் இப்படித்தான் சொல்வான் என்று நான் சொன்னேன் அல்லவா?

அவள் பீர் பாட்டிலை மேஜை மேல் ஒதுக்கி வைத்தாள். வந்த ஏப்பத்தை மெல்லிய விரல்களால் மூடினாள்.

பொய் சொல்கிறாய் ஜெரோம். யாராவது பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்து விடுவேன்.

சத்தியமாய் சொல்கிறேன் ஆன்டி. நான் ஏன் பொய் சொல்லப் போகிறேன். லாட்டரி டிககெட்டை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய முடியும். ஒரு சிறுவனுக்காக யாரும் பரிசு விழுந்த சீட்டைப் பணமாக்கித் தரமாட்டார்கள். பரிசு விழுந்த சீட்டு என்னிடமிருந்தால் நேராக உன்னிடம்தானே ஆன்டி ஓடி வருவேன்.

பெரியவர்கள் நீண்ட நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். தான் ஒரு படி ஜெயித்துவிட்டதாக நினைத்தான் ஜெரோம். இப்போது தப்பித்துக் கொள்ள இது போதும்.  நாற்காலியை சற்றே பின்னுக்குத் தள்ளினான். இந்தத் தடவை ஜானி அவனைத் தடுக்கவில்லை. ஆன்டியை நெருக்கியபடி வெளியே வந்தான் ஜெரோம். அவர்கள் இனி தன்மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார்கள், அவனை சும்மா விட்டுவிடுவதற்கு இது ஒன்றும் சின்ன விஷயமல்ல.

…..

இரவில் படுக்கையில் போர்வையை முகவாய்வரை இழுத்துவிடடபடி ஜெரோம் பல வழிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். இந்தக் குழப்பத்திலிருந்து தப்பிக்கும் வழியொன்றும் புலப்படவில்லை. அங்கிருந்து மறையும்படி அவர்கள் விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் அறிய விரும்புவதை அவனும் லாயிடும் சொல்லத்தான் வேண்டி வரும். அவர்களைக் கண்டுபிடிக்க ஆன்டியே ஜானி கார்ஸ்டனை அனுப்புவாள்.  அப்புறம்?

தலையை சுவற்றின்மேல் மோதிக் கொண்டான். முட்டாள். ஓடிப் போவதா? என்ன நினைக்கிறான் அவன்? பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? ஒரு வீல் செயரில் தம்பியை வைத்து தள்ளியபடி எப்படி உன்னால் ஓடிப்போக முடியும்?

…..

கழுத்தில் ஏற்பட்ட வலி அவனை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்பியது. கண்களை அகலத் திறந்து பார்த்தான். பிறைச் சந்திரனின் மங்கிய ஒளியில் குனிந்தபடி தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் உருவம் தெரிந்தது. அவன் பேச வாயைத் திறக்கும் முன்பே ஜெரோமுக்கு அவன் யாரென்று தெரிந்துவிட்டது. அவன் மூச்சில் கலந்திருந்த பிராந்தியும்  ஆடையில் இருந்த மோட்டார் ஆயிலும் அவனை ஜானி கார்ஸ்டன் என்று அடையாளம் காட்டின.

அசையாதே.

கத்தியின் கூரிய முனை தோலை சற்றே கீறியபோது ஜெரோம் கத்துவதை அடக்கிக் கொண்டான்.

ஜானி சீறினான்.

படவா ராஸ்கல், சீட்டு எங்கே? எனக்கு வேண்டும் அது.

ஜெரோம் பேச முயன்றான்.

மாமா…நான்…தயவுசெய்து…

சமையலறையிலிருந்து சப்தம் கேட்டது. கத்தியின் அழுத்தம் தளர்ந்தது. பின் மறைந்துவிடடது. அவன் ஜெரோமின் முகத்தில் குனிந்தான். அந்த பருத்த உடம்பின் ஓரம் வழியே ஜெரோம் தன் முதுகுப் பையில் உள்ளவை எல்லாம் தரையில் கொட்டி சிதறிக் கிடப்பதைக் கண்டான்.

உன்னை வாச் பண்ணிக்கிட்டே இருப்பேன் ஜெரோம். விட்டுவிடுவேன் என்று நினைக்காதே.

…..

ஒரு வருடம் டைம் இருக்கிறது பரிசு டிக்கெட்டை மாற்றுவதற்கு. சீட்டின் பின்பக்கம் அச்சடித்திருந்த விதிகள் அப்படித்தான் கூறின.

குலுக்கல் தினத்திலிருந்து பன்னிரண்டு மாதங்களுக்குள் இந்த பரிசுச் சீட்டை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் இதன் மேல் எந்தப் பரிசும் கோர முடியாது…

ஆனால் அவ்வளவு நாள் காத்திருக்கவும் முடியாதே. பரிசுத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவனும் லாயிடும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மானன்பெக்கை விட்டு, ஆன்டியை விட்டு, ஜானியை விட்டு ஓடிவிடவேண்டும்.

…..

அதிகாலையில் அவன் வென்னீரில் காபிப் பொடியைக் கலந்துகொண்டிருந்தபோது ஆன்டி சமையலறைக்குள் புகுந்தாள். அவளது களைத்த கண்களை அவனால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.

மார்னிங் ஆன்டி.

ஜெரோம்.

அவள் மெதுவாக அவன் பக்கம் நகர்ந்தாள். எதற்கும் துணிந்துவிட்ட மாதிரி. பின் சட்டென்று மேஜைமீது சாய்ந்தபடி நின்றாள்.

ஜெரோம், நான் சொல்வதைக் கேள்.

என்ன ஆன்டி?

உன்னிடம் அந்த சீட்டு இருந்தால் …

ஆனால் ஆன்டி…நான்…

நிறுத்துடா. நான் என்ன சொன்னேன் – உன்னிடம் இருந்தால், அந்தப் பணம் நமக்குத் தேவை. காலம் கழிப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியுமல்லவா? எனவே …

அவன் அவளை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அப்புறம் தலையை அசைத்தான்.

ஆன்டி, நான்தான் சொன்னேனே, என்னிடம் அந்தச் சீட்டு இருந்தால் எப்போதே அதை உன்னிடம் தந்திருப்பேனே, தெரியுமல்லவா உனக்கு…

காப்பியை மடக்கென்று குடித்துவிட்டு அறையைவிட்டு பின்வாசல் வழியே வேகமாக வெளியேறினான்.

…..

ஒரு வாரம் ஆயிற்று. பிரச்சினையைச் சமாளிக்க வழியொன்றும் தென்படவில்லை. பள்ளிக்கூட நோட்புக்கில் எழுதியிருந்த பெயர் பட்டியலை ஒவ்வொன்றாக அடித்துவிட்டான். ரொம்ப நிதானமாக யோசித்தப் பின் அவர்கள் யாரையுமே நம்புவதற்கில்லை என்ற முடிவுக்கு வந்தான்.

ஆன்டியின் வீட்டுக்குப் போகும் வழியில் பரந்த வயல் வெளியைக் கடக்க வேண்டியிருக்கிறது. கைநிறைய சிறு கற்களை எடுத்து வைத்துக்கொண்டு வழியில் ஆங்காங்கே கிடந்த காலி பாட்டில்களை குறிவைத்து எறிந்துகொண்டே போனான். கண்ணாடி சிதறும் போதெல்லாம்அவன் கோபம் எழும்பியது.

இது நியாயம் அல்ல. சரி அல்ல.

இந்த பெரிய பிரச்னையைத் தீர்த்துக் கட்டுவதற்காக அந்த  சீட்டையே கிழித்தெறிந்து விடலாமா என்று நினைத்தான்.  அப்புறம் பரிசாவது மண்ணாங்கட்டியாவது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்து விடலாம். அல்லது வேறு வழி ஏதாவது இருக்கிறதா? லாயிடைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே.  தனக்கு  ஏதாவது நேர்ந்துவிட்டால் ஆன்டி லாயிடை எங்காவது அனாதை விடுதிக்கு அனுப்பிவிடுவாள். ஒரு நொண்டிப் பையனை யார்தான் கவனித்துக்கொள்ள விரும்புவார்கள்? அவள் சகோதரியின் பிள்ளையாகத்தான் இருக்கட்டுமே. ஆனால் அந்த தொகை மட்டும் கிடைத்துவிட்டால் லாயிடுககு எந்த கவலையும் இருக்காது – அவன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தாலும்.

…..

ஞாயிற்றுக் கிழமை. பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸின் சதை தொங்கிய முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. பல்பிட்டில் இருந்து பேசும்போது லாட்டரி சீட்டு வாங்கிய பாவிகளை மன்னிக்கும்படி வேண்டிக்கொணடார்.

ஆண்டவன் சதையைப் படைததார். சதையின் பலவீனத்தை அவர் அறிவார்.

ஆனால் மன்னிப்புக்கு எப்போதும் ஒரு விலை உணடு. இந்தத் தடவையும் அப்படித்தான். பாவம் செய்த நபர் பரிசுத் தொகையில் பத்தில் ஒரு பங்கு சர்ச்சுக்கு நன்கொடையாக அளித்துவிட வேண்டும்.

இறைவன் தன் பங்கைக் கோருகிறான். புனித நூற்களில் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.

பாஸ்டர் அந்த பாவம்செய்த நபரை முன்னால் வரும்படி அழைத்தார். அது ரகசியமாகவே வைக்கப்படும்.  பரிசுச் சீட்டு வாங்கி பாவம் செய்தவர் யார் என்பது ஒருவருக்கும் தெரிய வராது.

பாஸ்டர் கூறியதைப் பற்றி மக்கள் பேசிக்கொள்வதை ஜெரோம் கேட்டுக் கொண்டிருந்தான். பின் கதவு சிறிது திறந்து கொள்வதைக் கவனித்தான். அந்த மெல்லிய ஒளிக்கீற்று அவனைத் தன் அருகே வரும்படி அழைத்தது.

…..

படுக்கையறைக் கதவின்மேல் சாய்ந்தபடி பாதையைப் பார்த்தான் ஜெரோம். பிறகு தன் தம்பியை நோக்கினான்.

என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது.

லாயிட் அண்ணனை ஏறிட்டுப் பார்த்தான்.

சொல்லு.

ஜெரோம் கதவைச் சாத்திவிட்டு லாயிடின் அருகே படுக்கையில்  அமர்ந்தான்.

இதற்குக் கொஞ்சம் செலவாகும். ஆனால் வேறு வழியில்லை. அதாவது …

…..

சர்ச்சின் பின்பக்கம் சிறிய ரெக்டரியின் கதவருகே நின்றுகொண்டிருந்தனர். ஜெரோம் ஒரு நீலநிற ஜீன்ஸும் சிவப்பு டி-ஷர்ட்டும் அணிந்திருந்தான். லாயிட் தனது வீல் செயரில் சாய்ந்திருந்தான். அவன் விரல்கள் வீல் செயரின் தேய்ந்துபோன ரப்பர் சக்கரங்களைப் பற்றியிருந்தன. ஜெரோம் தம்பியைக் குனிந்து பார்த்தான்.

ரெடி?

லாயிட் தலையை ஆட்டினான்.

ஜெரோம் ஒரு தடவை, இரு தடவை கதவைத் தட்டிவிட்டு பின்னால் நகர்ந்து காத்திருந்தான். ஒரு நிமிடம் எதுவும் நிகழவில்லை. மீண்டும் தட்டினான். இப்போது உள்ளேயிருந்து ஒரு அடங்கிய குரல் கேட்டது.

வரேன்.

கதவு திறந்தது. பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் அவர்கள் எதிரே நின்றார்.

நீங்கள் யார் என்று தெரியவில்லையே?

ஜெரோம் சிரித்துக்கொண்டே வீல் செயரை சற்று முன்னால் தள்ளினான்.

உள்ளே வரலாமா அங்கிள்?

அந்தக் குண்டு மனிதர் அவர்களை சந்தேகத்துடன் பார்த்தார்.

எதற்காக?

ஜெரோம் தன் கையை உயர்த்தி விரல்களை விரித்துக் காட்டினான்.

என்னிடம் ஒரு நல்ல செய்தி இருக்கிறது.

அவர் முகம் சுருங்கியது. ஒரு வினாடி தயங்கினார். பின் வீல் செயர் நுழையும் அளவுக்கு விலகி நின்றார். உள்ளே நுழைந்ததும் ஜெரோம் படுக்கையில் ஏறி அமர்ந்தான். அவன் கை வீல் செயரைப் பற்றியிருந்தது.

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் இன்னொரு படுக்கையில் தொப்பென்று அமர்ந்து இருவரையும் பார்ததார்.

சரி, அந்த முக்கிய செய்தி என்ன?

ஜெரோம் யோசித்தபடி சுற்றுமுற்றும் பார்த்தான். தரை விரிப்பு கிழிந்து நூல்கள் தெரிந்தன. கூரையில் தண்ணீர் கறை. அவன் நினைத்தபடிதான். பாஸ்டர் ஏழ்மை நிலையில்தான் இருந்திருக்கிறார். கேப் பிளாட்ஸ் சர்ச்சில் பணிபுரிந்துகொண்டு அதிகம் ஒன்றும் சம்பாதித்துவிட முடியாது.

லாட்டரியில் ஜெயித்தவர் தம் பணத்தில் கொஞ்சம் சர்ச்சுக்கும் கொடுக்க வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா?

பாஸ்டர் சற்று முன்னே குனிந்தார்.

ஆமாம், அதற்கு…

லாயிட் குறுக்கிட்டான்.

உங்கள் உதவி எங்களுக்குத் தேவை.

குண்டரின் பார்வை வீல் செயரில இருந்த  பையன் மேல் பதிந்தது. சிறிய ஜன்னல் வழி வந்த வெளிச்சம் அவர் கண்களில் விழுந்தது.

எனது உதவியா?…கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு.

எங்களிடம் அந்தப் பரிசு சீட்டு இருக்கிறது.

ஜெரோம் தன் சட்டைப் பையில் கையை நுழைத்துவிட்டு, கையை வெளியே எடுத்தான். குண்டு மனிதருக்கு அந்த சீட்டு பற்றி நம்பிக்கை ஏற்படட்டுமே.

உங்களிடம் பரிசுச் சீட்டு இருக்கிறதா?

ஜெரோம் தலையை ஆட்டினான்.

ஆனால் அதை பணமாக்க எங்களுக்கு ஒரு பெரியவரின் உதவி தேவை. நாங்கள் நம்பக்கூடிய ஒருவர்.

இப்போது பாஸ்டரின் முகம் வெளுத்திருந்தது.

உங்களிடம் பரிசுச் சீட்டு இருக்குமானால்…நான் உங்களுக்கு உதவ முடியும்…நான் கடவுளின் ஊழியன்.

ஜெரோம் சிறிதாகச் சிரிததான்.

அதனால்தான் உங்களிடம வந்திருக்கிறோம். நாங்கள் நம்பக்கூடிய ஒரே மனிதர் நீங்கள்தான்.

சற்று நிறுத்திவிட்டு இரண்டு விரல்களால் மார்புப் பகுதியில் இருந்த சட்டைப் பையைத் தொட்டுக்காட்டினான்.

உங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும்.

பாஸ்டர் தன் வலையில் விழுந்துவிட்டது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவர் நாக்கு சற்றே வெளியே வந்து, உலர்ந்த உதடுகளை நக்கியது. கைகள் அசைந்தன. விரல்கள் ஒன்றோடொன்று இணைந்தன.  அவரைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் ஜெரோம்.

நீங்கள் எங்களுக்கு உதவினால் பரிசுத் தொகையில் ஐம்பதினாயிரம் உங்களுக்குக் கிடைக்கும்.

அவன் நினைத்தபடியே ஆசை அவரை ஆட்கொண்டது. கண்கள் பளபளக்க சற்று முன்னால் சாய்ந்தார்.

ஐம்பதினாயிரம் தானா…?

ஜெரோம் கையை உயர்த்தினான்.

உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால்…

ஓ…நான்…சும்மா…

ஐம்பது. அதுதான் உங்கள் பங்கு.

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் படுக்கையில் சற்று சாய்ந்து கொண்டார்.

நல்லது. நான் உங்களுக்கு உதவுகிறேன்…எங்கே அந்தப் பரிசுச் சீட்டு?

அவர் கையை நீட்டியபடி ஜெரோமைப் பார்த்தார். பின் லாயிடை. மீண்டும் அவர் பார்வை ஜெரோமிடம் சென்றது.

ஜெரோம் தலையை அசைத்தான்.

இப்போது வேண்டாம். நாம் இனனும் பேசவேண்டியிருக்கிறது.

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் கண்களை மூடினார். மீண்டும் அவர் பேசியபோது அவர் குரல் தளர்ந்திருந்தது.

வேறு யாருக்கெல்லாம் இது பற்றித் தெரியும்?

ஜெரோம் தோள்களைக் குலுக்கினான்.

வேறு யாருக்கும் தெரியாது. எங்கள் இருவருக்கு மட்டும். இப்போது நீங்கள்.

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் தலையை ஆட்டினார்.

அப்படியே இருக்கட்டும். வேறு யாருக்கும் தெரியக் கூடாது. உங்கள் பெற்றோருக்குக் கூட.

ஜெரோம் அலட்சியமாகக் கையை ஆட்டினான்.

எங்களுக்குப் பெற்றோர் இல்லை.

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் அதைக் கேட்டதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

நீங்கள் என்னிடம் வந்தது மிகவும் சரியான செயல்.

ஜெரோம் வீல் செயரின் பின் பக்கத்தைப் பிடித்துக் கொண்டான்.

அங்கிள், எங்களை ஏமாற்றி விடக்கூடாது.

ஏமாற்றவா? நான் கடவுளின் ஊழி…

ஒருவேளை நீங்கள் ஏமாற்றிவிட்டால், நீங்கள் என் தம்பியின் நிஜாரைக் கழற்றிவிட்டு அதைத் தொட்டது, பின் உங்கள் பான்டைக் கழற்றி எங்களை என்னவெல்லாமோ செய்யச் சொன்னது எல்லாவற்றையும் வெளியில் சொல்லிவிடுவோம்.

பாஸ்டரின் முகம் சிவந்தது. படுக்கையிலிருந்து எழு முயன்றார்.

என்னடா உளறுகிறாய்? போக்கிரிப் பன்றி…

சாரி அங்கிள். நிலைமை அப்படி. எங்களை ஏமாற்ற நினைத்தால் உங்களைப் பற்றிய எல்லாக் கதைகளையும் வெளியே சொல்லி விடுவோம்.

பாஸ்டர் அவர்களை நம்பிக்கையில்லாமல் பார்த்துவிட்டு பின் சிரிக்கத் தொடங்கினார்.

பொடிப் பயலே, நீ ஆள் பொல்லாதவன்தான்.

அவர் அமைதியாகும் வரை காத்திருந்தான் ஜெரோம்.

சரி அங்கிள். நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம்.

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் தலையை ஆட்டியபோது அவர் கன்னத்து சதைகள் துள்ளி ஆடின.

…..

அவர்கள் மீன் சந்தையில் தங்கள் வழக்கமான இடத்தில் அமாந்திருந்தனர். ஜெரோம் ஒரு சிகரெட்டை புகைத்தபடியிருக்க, லாயிட் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இனி என்ன?

ஜெரோம் ஒரு புகை மேகத்தை வெளியே விட்டான்.

ஹென்ட்ரிக்ஸ் பொறாமை பிடித்தவன். நாம் அவனை நம்புவதாக நினைத்துக் காண்டிருக்கிறான். நாம் இருவரும் முட்டாள் என்பது அவன் எண்ணம்.

நீ அவரை …

நான் அவரை என்ன?

நம்புகிறாயா?

ஜெரோம் தலையை அசைத்தபடி சிரித்தான்.

எல்லோரையும் போல்தான். காரியம் முடிந்ததும் நம்மை ஏமாற்றத்தான் செய்வார்.

ஒரு கார் பலமாக ஹார்ன் அடித்தபடி அவர்களைக் கடந்து சென்றது. லாயிட் அவசரமாக தன் வீல் செயரை சுழற்றித் தெருவைப் பார்த்தான்.

அப்புறம்?

பிறகு பேசலாம். இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

…..

மாலையில் அவன்  திரும்பியபோது வீடு அமைதியாக இருந்தது. வீட்டுக்குள் நுழைந்து தம்பியின் பெயரைச் சொல்லி அழைத்தான். பதில் இல்லை. மீண்டும் அழைத்தான்.  இடைவெளி வழி சென்று அறைக்குள் நுழைந்தான்.

லாயிட்?

தம்பி படுக்கையில் சுருண்டு கிடந்தான். பயனற்ற அவனது கால்கள் நெஞ்சில் பதிந்திருக்க, தோள்கள் குலுங்கின. படுக்கையின்அருகே தரையில் அமர்ந்தபடி லாயிடின் தலையைப் பிடித்துத் திருப்பினான்.

என்னடா இது? அழுகிறாயா?

லாயிட் முகத்தைத் திருப்ப முயன்றான். ஆனால் ஜெரோம் அதைப் பலமாகப் பிடித்துக்கொண்டான்.

சொல்லு லாயிட்.

சிறியவன் அழத் தொடங்கினான். அவனுக்கு மூச்சு வாங்கியது. சட்டை நுனியால் மூக்கைத் துடைத்துக்கொண்டு, நேரே உட்கார்ந்து ஜெரோமைப் பார்த்தான்.

ஸாரி ஜெரோம். எனக்கு இஷ்டமே இல்லை. கூடிய மட்டும் முயன்றேன். ஆனால் அவன் என்னை கட்டாயப்படுத்தினான்.

ஜெரோம் ஓர் அடி பின்னால் நகர்ந்து தம்பியை உற்றுப் பார்த்தான்.

என்னடா சொல்கிறாய் நீ?

ஜானி…அவர் என்னைக் கட்டாயப்படுத்தினான்.

எப்படிக் கட்டாயப்படுத்தினார்?

பரிசுக் சீட்டுபற்றி நான் சொல்லும்வரை.

சொல்லிவிட்டாயா?

ஸாரி ஜெரோம் …

ஜெரோம் கையால் சுவரில் அறைந்தான்.

நாசமாய்ப் போச்சு.

அவர் உன்னிடம் ஒரு செய்தி சொல்லச் சொன்னார்.

என்னது?

நீ பரிசுச் சீட்டைக் கொண்டு வராவிட்டால் அவர் என்னை சித்திரவதை செய்துகொண்டே இருப்பாராம்

சிறியவன் அழத் தொடங்கினான்.

வேறு…வேறு என்ன?

கொண்டு வராவிடடால் என்னைக் கொன்று போடுவாராம்.

ஜெரோம் உரக்கக் கத்தினான்.

ஆன்டி?

அவ்வளவு நேரமும் அவள் அங்குதான் இருந்தாள்…எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு.

ஜெரோம் சுற்றுமுற்றும் பார்த்தான்.

வா, நாம் இங்கிருந்து போய்விடலாம்.

லாயிட் தலையை அசைத்தான்.

வழியில்லை. ஜானி என் வீல் செயரை எடுத்துக்கொண்டு போய்விட்டான். இரண்டு பேரும் எங்கும் நகரமுடியாது என்று உன்னிடம் சொல்லச் சொன்னான்.

…..

அவர்களால் மெதுவாகவேச் செல்ல முடிந்தது. லாயிடை தன் முதுகில் ஏற்றிக்கொண்டான் ஜெரோம். லாயிடின் கைகள் அண்ணனின் தோளைக் கட்டிப் பிடித்திருந்தன. ஜெரோமின் கைகள் தம்பியின் கழுத்தைச் சுற்றியிருந்தன.

ஜெரோமின் தள்ளாடிய நடை சிறிது நேரத்தில் நேராயிற்று. கால்கள் சூம்பியிருந்தாலும் லாயிட் நல்ல கனமாகத்தான் இருந்தான்.

தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது மக்கள் அவர்களை விசித்திரமாகப் பார்த்தனர். ஜெரோம் அவர்களைக் கவனிக்கவே இல்லை. தம்பியிடம் ஏதோ மெதுவான குரவில் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டே நடந்தான்.

என்னைப் பிடித்துக்கொள் லாயிட்…கெட்டியாகப் பிடித்துக்கொள்.

…..

கைமுஷ்டியால் கதவைத் தட்டினான் அவன். சில வினாடிகள் பொறுத்து மீண்டும் தட்டினான். பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் ரெக்டரி கதவைத் திறந்ததும் ஜெரோம் உள்ளே தள்ளாடியபடி விழுந்தான். அவன் தோளிலிருந்து லாயிட் நழுவி தரையில் விழுந்தான். பலமாக மூச்சு விட்டபடி ஜெரோம் பாஸ்டர் தடுத்ததையும் பொருட்படுத்தாமல், கால் மூட்டுகளை பிடித்தபடி குனிந்து நின்றான். பின் நிமிர்ந்து லாயிடை இழுத்துக்கொண்டு போய் படுக்கையில் கிடத்தினான்.

ஸாரி அங்கிள். இன்னும் சற்று நேரம் நாங்கள் இங்கேதான் தங்கப் போகிறோம்.

பாஸ்டர் அவனை சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். பின் படுக்கையில் கிடக்கும் ஊனமுற்ற அவன் தம்பியைப் பார்த்தார்.

அவனுடைய வீல் செயர் எங்கே?

ஜேரோம் தோள்களைக் குலுக்கினான்.

அது ஒரு பெரிய கதை.

ஜன்னலின் திரைத் துணியை சற்று விலக்கி தெருவை நோட்டமிட்டான்.

சீட்டைக் காசாக்குவது வரை இங்கே இருப்போம். அப்புறம் போய்விடுவோம்.

பாஸ்டர் இதுபற்றி நீண்டநேரம் யோசித்தபடி இருந்தார். அப்புறம் கையை நீட்டினார்.

சீட்டு?

ஜெரோம் தலையை அசைத்தான்.

நாளை. நானும் நீங்களும் ஒன்றாய்ப் போய் அதைக் கொடுத்து பணத்தை வாங்கலாம்.

…..

ஒரு பழைய பெட்டியிலிருந்து பாஸ்டர் எடுத்துத் தந்த போர்வைகளைப் போர்த்தியபடி ஜெரோமும் லாயிடும் இரண்டு படுக்கைகளில் படுத்துத் தூங்கினர். பாஸ்டர் இன்னொரு சிறிய படுக்கை அறைக்குப போய்விட்டார். போகும்போது அவர் சொன்னது ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது.

சீட்டைக் காசாக்குவது வரைதான் நீங்கள் இங்கே தங்கலாம். எனக்கு இது ஒன்றும் பிடிக்கவே இல்லை.

பதில் சொல்ல ஜெரோம் சிரமப்படவில்லை. போர்வையை இழுத்து தலையை மூடியபடி உலகையே மறைத்துக் கொண்டான்.

…..

முன்பக்க வாசல் வழியாக பாஸ்டர் வெளியே செல்லும்போது ஜெரோம் விழித்துக் கொண்டான். தலையைத் திருப்பித் தம்பியைப் பார்த்தான். லாயிட் நன்றாகச் சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். போர்வையின் அடியிலிருந்து அவன் தலை வெளியே தெரிந்தது. ஜெரோம் தன் சட்டையின் மார்புப் பகுதி ஜேபியைத் தடவிப் பார்த்துவிட்டு அதை அழுத்தித் தேய்த்தான். சீட்டு பத்திரமாக இருக்கிறது.

இன்றுதான் அந்த நாள். அவர்களுக்கு வேறு வழி எதுவும் தென்படவில்லை. குண்டனை நம்ப வேண்டியதுதான். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் சேர்ந்து சீட்டைக் காசாக்கும் இடத்துக்குப் போகவேண்டும். பாஸ்டர்மேல் எப்போதும் ஒரு கண் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவர் அருகிலிருந்து விலகிவிடக்கூடாது.  அப்புறம் லாயிடைப் பார்க்க வரவேண்டும். இப்போது இவ்வளவுதான் நினைக்க முடிந்தது.

ஆனால் இருபது நிமிடங்களுக்குப் பிறகு பாஸ்டர் வீட்டுக்குள் வந்தபோது அவர் முகத்திலிருந்து வேறு புதிய சிக்கல்கள் தோன்றியிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது.

…..

பாஸ்டரின் கண்களில் பயம் தெரிந்தது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

நீங்கள் இங்கிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும்…உடனே.

ஜெரோம் அறையின் குறுக்கே நடந்து லாயிடின் முன் அவனுக்குப் பாதுகாப்பாக நின்றான்.

என்ன அங்கிள் இது? என்ன விஷயம்?

குண்டர் ஆழமாக மூச்சை இழுத்தார்.

ஊரெல்லாம் தெரிந்துவிட்டது. ஒரு கூட்டம் ஆட்கள் உங்களைத் தேடி அலைகிறார்கள். இவ்வளவு பெரிய தொகை என்றால் அவர்கள் எதையும் செய்யத் துணிந்து விடுளவார்கள். மிருகங்கள்…

காதுகள் ஓரமாக வலி பாய்வதை உணர்ந்தான் ஜெரோம். பார்வை மங்கிற்று. தம்பியின் தோள் எலும்பைப் பற்றியபடி கேட்டான்.

அவர்களுக்கு எப்படித் தெரியும்?

கடையிலிருக்கும் பெண் என்னிடம் சொன்னாள். நேற்று இரவு ஜானி கார்ஸ்டன்ஸ் நன்றாகக் குடித்துவிட்டு உளறியிருக்கிறான். தான் பணக்காரனாகப் போவதாகவும், உன்னிடம் லாட்டரி டிக்கட் இருப்பதாகவும், உன்னிடமிருந்து அதை வாங்கிப் பணமாக்கப் போவதாகவும் உளறியிருக்கிறான். இங்கே எல்லோருக்கும் செய்தி பரவிவிட்டது. உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜெரோமுக்குப் புரிந்துவிட்டது. நேற்று  ஒரு ஜானி கார்ஸ்டனிடமிருந்து தப்பி வந்துவிட்டான். இன்று நூறு ஜானிகள். முகம் அற்றவர்கள். பணத்துக்காக வேட்டையில் இறங்கிவிடுவார்கள். சீட்டைக் கைப்பற்றுவதற்காக கழுத்தை அறுததுவிட்டு அமைதியாக  மறைந்துவிடப் போகிறார்கள்.

உடனே இங்கிருந்து போய்விடுங்கள். நீங்கள் இங்கே இருப்பது தெரிந்தால் என்னையும் கொன்றுவிடுவார்கள். போய்விடுங்கள் உடனே.

நாங்கள் அதை காஷ் செய்யத்தான் போகிறோம் அங்கிள். உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடத் தருகிறோம். நீங்கள் பாதி எடுத்துக் கொள்ள…

அவர் குரல் கீச்சிட்டது.

உங்கள் பணமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம். இங்கிருந்து ஒழிந்துவிட்டால் போதும்.

கதவை நோக்கி ஓர் அடி முன்வைத்து படீரென அதைத் திறந்தார்.

போகிறீர்களா…போலீசைக் கூப்பிடட்டுமா?

ஜெரோம் தலையை அசைத்தான்.

நீங்கள்தானே சொன்னீர்கள் அங்கிள்? கடவுளின் ஊழியராக இருந்துகொண்டு…

கடவுள் உங்களிடம் லாட்டரி சீடடு வாங்கச் சொல்லவில்லை. அந்த கொலையாளிகளிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றப் போவதில்லை…போய்த் தொலையுங்கள்.

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் அங்கிள். இருட்டியவுடன் இங்கிருந்து போய்விடுகிறோம்…எங்களுக்காக பிரார்த்தனை செய்வீர்களா?

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் நீண்டநேரம் தம் கண்களை மூடியபடி இருந்தார். பிறகு ஜெரோமைப் பார்த்தபோது அவர் சற்று அமைதி அடைந்தவராகத் தோன்றுவதாக ஜெரோம் நினைத்துக் கொண்டான்.

இருட்டியவுடன் போய்விடவேண்டும்…இருவரும்.

…..

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் வீட்டைவிட்டுப் போய் நீண்ட நேரத்துக்குப் பிறகு ஒரு பிரௌன் காகிதப் பையுடன் வந்தார். அப்போது ஜெரோம் அதைப் பற்றி எதுவுமே நினைக்கவில்லை. பின்னால்தான் தெரிந்தது, அதைச் சற்று கவனித்திருக்க வேண்டும் என்று. கடவுளின் ஊழியருக்கும் சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும்.

…..

பாஸ்டர் ஹென்ட்ரிக்ஸ் கதவைத் திறந்தபோது இன்னும் நன்றாக இருட்டவில்லை.

இதுதான் சரியான நேரம். போய்விடுங்கள்.

ஜெரோம் வெளியே வந்தான். தெரு ஓரமாக, இருட்டான இடமாகப் பார்த்து நடந்தான். ஏதாவது ஒரு கார் அவனைக் கடக்கும்போது முதுகில் தம்பியின் சுமையோடு ஒரு இருண்ட பகுதியில் ஒதுங்கினான்.

எல்லோரும் உங்களையே தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரும் தொகையை கைப்பற்ற அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்று உனக்குத் தெரியும்…மிருகங்கள் அவர்கள்.

அவனுக்கே உணர முடிந்தது. யாரோ அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். கண்களைப் பதித்திருக்கிறார்கள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் அதைப் பார்த்தான். ஹெட்லைட்கள் அணைக்கப்பட்ட ஒரு கார் அவனையே தொடர்கிறது. அப்போது அவனுக்கு பாஸ்டரும் அவர் கொண்டு வந்த பிரௌன் கவரும் நினைவுக்கு வந்தன.

அவன் தன் இலக்கை நோக்கி தள்ளாடியபடி நடந்தான். ஸ்டேஷனை அடைந்துவிட வேண்டும். அதை எட்டிவிட்டால் போதும். ஆனால் இன்னும் மூன்று தெருக்களைக் கடக்க வேண்டும். லாயிடின் சுமை அவன் முதுகை அழுத்தியது.

ஒரு ரேடியோவின் மெல்லிய டான்ஸ் இசை, ஒரு கார் இஞ்சின் சப்தம், மக்கள் குரல் எல்லாம் ஒன்றாய் கேட்டன.

அடுத்த தெருவுக்குப் போய்விடுமுன் அவர்களைப் பிடிக்கவேண்டும்.

அதோ அங்கே போகிறானே?

இப்பவே பிடிக்க வேண்டும்.

கார் அவர்கள் முன்னே சென்று நடைபாதையில் ஏறி நின்றது. இரண்டு பேர் வெளியே வந்து அவர்களை வழி மறித்தனர். ஜெரோம் தம்பியை முதுகில் சற்றே உயர்த்தி நகர்த்தி, பக்கத்து சந்துவின் இருட்டில் நுழைய முயன்றான். ஆனால் அது சாத்தியப்படாது என்றுதான் தோன்றியது.

பின்னர் அவன் அதைப்பற்றி நினைக்கையில் அப்போது தான் ஒரு வெடி சப்தத்தைக் கேட்டதாகவும், அதற்கு முன் ஏதோ ஒரு சக்தி தன்னை முன்னுக்குத் தள்ளியதாகவும், லாயிடின் உடல் தன்னிடமிருந்து விலகி பறந்து ரோட்டின் சிமென்ட்  மார்க்கரில் விழுந்ததாகவும் நினைத்துக் கொண்டான்.  ஒரு நிமிஷம் திகைத்துவிட்டு கையை ஊன்றியபடி லாயிடை நோக்கி நகர்ந்து அவன் பெயரைக் கூறி அழைத்தான்.  ஆனால் அவனிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அவன் சிதைந்த உடல் அமைதியாயிருந்தது. முதுகின் கீழ்ப்பகுதியிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அப்போதுதான் ஜெரோமுக்கு ஒரு விஷயம் புரிந்தது. துப்பாக்கிக் குண்டு லாயிடைத் தாக்கியிருக்கிறது. தனக்கு அவன் கவசமாக இருந்து காப்பாற்றியிருக்கிறான். ஜெரோமின் தொண்டையிலிருந்து ஒரு பயங்கர ஒலி கிளம்பியது. தலை பின் நோக்கி சரிந்தது.

அந்த இரண்டு மனிதர்களும் தங்கள் இரையை நோக்கி மெதுவாக நடந்து வந்தனர். தன்னை அவர்கள் சமீபிப்பதை ஜெரோம் கவனித்தான். அவன் உதடுகள் சப்தமின்றி அசைந்தன. மூச்சு சிறுசிறு வெடிப்புகளாக வந்தது. சட்டைப் பையினுள் கையைவிட்டு பரிசுச் சீட்டை எடுத்தான்.  விரல்களால் அதைத் துண்டு துண்டுகளாகக் கிழித்தான்.

இப்போது அவன் முழங்காலில் எழுந்து கைகளை உயர்த்தினான். சிதைந்த கனவின் கிழிந்த துண்டுகள் வானின் இழிந்த மெல்லிய மழைபோல் தன் தம்பியின் உடலில் மெதுவாக விழுவதைக் கவனித்தான்.

………………………….

வில்லியம் ஊஸ்துய்ஸென் ((William Oosthuizen)  தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹன்ஸ்பர்கில் பிறந்தார். தற்போது கேப் டவுனில் வசிக்கிறார். வழக்கறிஞர். புகைப்படம் எடுத்தல், ஊர் சுற்றுதல் இவரது பொழுதுபோக்கு. “வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் எழுதத் தொடங்கினேன். சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்வது எழுத்தின் தரத்தை உயர்த்த உதவும். தொகுப்பின் இறுதிச்சுற்றில் இந்தக் கதை இடம் பெற்று, அதன் எடிட்டர் ஜே.எம். கூட்ஸீ (J.M.Coetzee) என் கதையைப் படித்துப் பார்ப்பார் என்ற நினைப்பு எனக்கு பரபரப்பையும் திகிலையும் சமஅளவில் தோற்றுவிக்கிறது” என்கிறார்.

எம்.எஸ் : எண்பது வயதைக் கடந்த இளைஞர். மூப்பு உடலை அசெளகரியப்படுத்தும் போதும் குன்றா உற்சாகத்துடன் இலக்கியத்தில் செயல்பட்டு வருபவர். இலக்கிய ரசிகர்கள் மத்தியிலும் நண்பர்களிடையேயும் ‘எம்.எஸ்.’ என்று அறியப்படுகிற எம்.சிவசுப்பிரமணியன் நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

ஆங்கிலத்திலிருந்தும் மலையாளத்திலிருந்தும் பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். ‘அமைதியான ஒரு மாலைப் பொழுது’, ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை’, ‘யாருக்குத் தெரியும்’, ‘ஜானு ‘, ‘கிழவனும் கடலும்’, ‘பேபி ஹால்தார்: விடியலை நோக்கி’, ‘ஆண்டன் செகாவ் கதைகள்’ போன்ற நூல்கள் இவருடைய மொழிபெயர்ப்பில் வந்துள்ளன.

எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைச் செம்மைப்படுத்துவதிலும் மெய்ப்புப் பார்ப்பதிலும் ஆர்வமுடன் செயல்படுகிறார்.

African Pens

 

African Pens 2011: New Writing from Southern Africa by J.M. Coetzee (Editor),
South African PEN என்னும் நூலிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை. இந்நூலிலுள்ள மற்றொரு கதையும் எம்.எஸ் மொழிபெயர்ப்பில் அடுத்த இதழில் வெளிவரவிருக்கிறது.