Indu Menon

டைகர் பாம்
இந்து மேனோன்

தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

கங்காருக்குட்டியை நெஞ்சில் சுமந்ததைப் போலத்தான் அவளை அவன் வளர்த்தான். மாநிறமான அவள் ஒரு பஞ்சுத்துண்டு போல அவனுடைய நெஞ்சில் ஒட்டிக் கிடந்தாள். திடுக்கென்று கண் விழித்து வெளிச்சத்தைப் பார்த்தாள். சிலபோது மஞ்சள் தூவுவதைப் போல அவனுடைய நெஞ்சின் மேலேயே ரெண்டுக்கு இருந்தாள். சிலந்தி எச்சில் கொழுப்பைத் துப்புவதைப் போல அவள் அவன் கொடுத்த புட்டிப்பாலைக் கக்கினாள். அவனுடைய வெற்று மார்பில் சிலந்தியின் சித்திர வலைகள் நெய்தாள்.
சின்னப்பாப்பா… செல்லப்பாப்பா…
அவன் அவளைக் கொஞ்சினான். அவளுக்கு மொழி தெரியாத பருவத்தில் அவனுடைய நெஞ்சுச் sriசூடு மூலமாக அவர்கள் உரையாடிக் கொண்டார்கள். குறை மாதத்தில் பிறந்தவள் அவள். தலைமுடியிழையோ நகங்களோ இல்லாமல் ஒரு அணில்குஞ்சைப் போலிருந்த அவளை இன்குபேட்டரில் வைக்க அவன் அனுமதிக்கவில்லை. அவளுடைய அம்மாவின் மரணம் அவனுடைய நெஞ்சில் ஒரு அனல்துண்டை எரியவைத்திருந்தது. அதனால்தான் அவனுடைய நெஞ்சில் இவ்வளவு சூடு ஏறியிருக்கவேண்டும்.
அவனுடைய இதயத்துடிப்புதான் அவள் கேட்ட முதல் சத்தம். அவன் அவளுக்கு அப்பாவாக மட்டும் இருக்கவில்லை; அம்மாவாகவும் அன்பாகவும் உயிராகவும் அவனே இருந்தான்.
ஒரு வயது ஆவதற்கு முன்புதான் அவளுக்கு முதன்முதலாக வலிப்பு வந்தது. கால்களிலும் முகத்திலும் உடலிலும் உள்ள ரத்தநாளங்களில் கடலின் அலறலுடன், ரத்தம் சுழன்று சுழன்று பின்வாங்கியது. ஐந்தாறு நிமிடங்களுக்கு உடலின் ரத்த ஓட்டம் நின்று அவள் நீலம் பாரித்தாள். அவளுடைய கைகள் சுருண்டன. கால்கள் பாம்பைப் போல் வளைந்து நெளிந்தன. கழுத்து பக்கவாட்டில் சரிந்தது. நாக்கு விழுந்து விட்டது. அவன் அப்போது அவளுக்காக பால் காய்ச்சிக் கொண்டிருந்தான். தொட்டிலில் கட்டித் தொங்கவிட்டிருந்த மணிக் கொலுசு குலுங்கும் ஓசை நின்று போய் அவனுடைய கவனத்தைத் திருப்பியபோதுதான் எதேச்சையாகப் பார்த்தான். பயந்துபோய்விட்டான். அவளுடைய உதட்டின் சரிவுகளில் பிரிந்த பால் வெண்பனி போல இறங்கியிருப்பதை அவன் கண்டான். அவளால் அழுவதற்குக் கூட முடியாத நிலைமையில் இருந்தாள். ஆனால் அவன் அழுதான். யாரோ அடித்தைதைப் போல பயந்து நடுங்கிப் போய் அழுதான் அவன்.
வயநாட்டின் போலீஸ் ஸ்டேஷன்களில் அவன் வெட்டிப்போட்ட கழுத்துகளோ துண்டாக்கப்பட்ட பல்லியைப் போல துடிதுடித்த விரல்களோ அவனை பயப்படுத்தியதில்லை. ஆனால், அவள்…

டாக்டர்தான் சொன்னார். சிரைகளும் தமனிகளும் சுருங்கிப் போகிற அந்த நோயைப் பற்றி. பயப்படவேண்டியதில்லை. ஆனால், எச்சரிக்கையாக இருக்கவேண்டும். டாக்டர் நீளமான விரலால் டைகர் பாமின் புட்டியைத் திறந்தார். பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டியிருக்கும் புதிதாய்க் கடைந்த வெண்ணைத் துண்டு போல டாக்டரின் விரல்களுக்கிடையில் டைகர் பாம் கரைந்தது.
“பாருங்க… இப்படி..” அவர் தடவும் விதத்தைக் காண்பித்தார். “இது சர்க்குலார் நீடிங்” அவர் குழந்தையின் கோணிப்போன வாயைச் சுற்றி விரலால் வட்டமாகத் தேய்த்தார். ”ஹாக்கிங், இப்படி” டாக்டரின் விரல்கள் அவளுடைய பிஞ்சு உடலில் தாளம் தட்டியபடி உயர்ந்து தாழ்ந்தன.
“இதுக்கு இதுதான் மருந்து. டைகர் பாம் தடவுறது. நல்லா மசாஜ் செய்யுறது.” டாக்டரின் நீண்ட விரல்கள் அவனுக்கு ஈட்டியை நினைவுபடுத்தின. ஈட்டியின் முனையில் வெள்ளை நிற விஷம் போல கொஞ்சம் டைகர் பாம். ட்ரஸ் செய்த கோழி இறைச்சியைப் போல அவளுடைய பிஞ்சு தேகத்தை டாக்டர் அழுத்தினார்.
அவனுக்கு திடீரென்று அவளுடைய அப்பாவும் அம்மாவும் நினைவுக்கு வந்தார்கள். அவன் அங்கு சென்றபோது ஈட்டி போன்ற ஆயுதத்தால் யாரோ அவளுடைய அப்பாவையும் அம்மாவையும் குத்தியிருந்தார்கள். அவன் அவர்களின் இதயத்துடிப்பை சோதித்துப் பார்த்தான். அப்போதுதான் அந்தப் பெண்ணின் உடலுக்குள் இவளுடைய இதயத் துடிப்பை அவன் கேட்டான்.
அது ஒரு இரவு நேரம். நிலாவை வெள்ளைப் புள்ளிபோல ஆகாயத்தில் ஆசாரி ஒட்டிவைத்திருப்பதாய் அவன் நினைத்தான். அவன் முன்னால் கண்ட வழியில் ஓடினான். குடிலிலிருந்து வயதான மருத்துவச்சிதான் வெளியே வந்தாள். நீல ரோமங்கள் நிறைந்து, வற்றித் தொங்கும் அவளின் முலைகளும், சுருங்கிப் போன காதுகளின் பாம்படங்களும் நிலா வெளிச்சத்தில் கருப்பாய் ஒளிர்ந்தன. ’ஆண்டவா’ ‘முனியா’ என்று அவள் கூப்பாடு போட்டாள். நிலவின் கிரணங்களில் குவார்ட்டர்ஸின் படியில் சிந்தியிருந்த ரத்தம் வெள்ளைப்பால் போல் தோன்றியது. அவனும் போலீஸ்காரர்களைக் கொன்றிருக்கிறான். ஈட்டியால் நெஞ்சைக் கீறியும் வாளால் கழுத்தையறுத்தும் வாயில் பன்றித்தோட்டா வெடிக்கவைத்தும் பல விதமாக. ஆனால், தன் குழுவிலிருந்த எவன் போலீஸ்காரனின் கர்ப்பிணி மனைவியை கொன்றான் என்று அவனுக்குத் தெரியவில்லை.
”பிளேடு இருக்கா? கத்தி இருந்தாலும் போதும். சீக்கிரம் கொண்டு வாங்க.”
அவன் இடுப்பில் சொருகியிருந்த வாளை எடுத்துக் கொடுத்தான். அவள் இறந்த பெண்ணின் வயிற்றை மெதுவாகக் கீறினாள். அவளை எடுத்து தொப்புள்கொடியை அறுத்தாள். இரத்தத்திலும் நிணநீரிலும் மூடப்பட்டிருந்த சிசுவின் தொடையில் பலமாகக் கிள்ளினாள். அது வீறிட்டு அழுதது.
”ஏளாவது மாசம் சார். செத்துப் போகாம முனியன் தான் காப்பாத்துனான்.” மருத்துவச்சி பீதியுடன் சொன்னாள்: ”போங்க, போங்க, இந்தக் குஞ்சைக் காப்பாத்துங்க. இந்த ரத்தத்தை இப்ப கழுவவேண்டா. வீட்டுக்குப் போயி கழுவிடுங்க.”
அன்றிலிருந்து அவளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறான் அவன். டைகர் பாம் மணக்கிற சிறுமி. வீட்டில் நரம்புகள் இழுத்துக்கொண்டு அவள் விழும்போது அவன் டைகர் பாம் தடவிக்கொடுத்தான். ”அப்பா, ஒண்ணும் பேசக்கூட முடியறதில்ல. நான் என்ன செய்யட்டும்?” அவள் அப்படிக் கேட்ட அன்றுதான் அவளுடைய பையில் ஒரு கடிதம் எழுதி வைத்தான் அவன். பெரிய டைகர் பாம் புட்டியோடு சேர்ந்து பையின் வெளிப்புற அறையில் அதை பத்திரமாக வைத்தான்.

Inset Image
அவனுக்கு லேசாக பயம் இருந்தது. ஒன்பதாம் வகுப்புதான் படிக்கிறாள் என்றாலும் அவள் முதிர்ச்சியடைந்திருந்தாள். பெரிய பெண்ணைப் போல. சில நேரங்களில் அவளுக்கு டைகர் பாம் தடவிக்கொடுக்கும் அவசியம் வரும்போது அவன் கண்களை மூடி அவள் குழந்தையாயிருந்த காலத்தை நினைத்துக்கொள்வான். அவன் எப்போதும் கிள்ளி வைக்கிற இடது புட்டத்தின் கருப்பு மச்சத்தையும் அவளுடைய தேன் கொஞ்சலையும் நினைத்துக் கொள்வான். அந்த நேரங்களிலெல்லாம் தான் ஒரு பெண்ணாக இல்லாமல் போனதை நினைத்து எரிச்சலடைந்தான்.
அன்றைய தினம் இரண்டாம் சனிக்கிழமை. பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் முடிந்தபோது இரண்டு மணியாகிவிட்டிருந்தது. சிவந்த மே பூக்கள் சிதறிக் கிடந்த தார்ச்சாலையின் வழியாக அவள் தனியாக வீட்டை நோக்கி நடந்தாள்.
திடீரென்று ஷாக் அடித்ததைப் போல கால் மூட்டிலிருந்து ஒரு நடுக்கம் மேலேறியது. தொடையின் தசைகள் மெல்ல மேல்நோக்கி ஏறத்துவங்கின. அவளுடைய ரத்தக் குழல்கள் வலியோடு இழுத்துக்கொண்டன.
”அப்பா..” அவள் உரக்கக் கூவினாள். அவளுடைய கால் விரல்கள் உள் நோக்கி மடங்கின. உடம்பு இழுத்துக்கொண்டது. கன்னங்கள் இழுத்துக்கொண்டன. கைகள் வளைந்து இறுகின. அவள் ரோட்டின் மேல் சரிந்து விழுந்தாள். தரையில் மூத்திரம் படர்ந்தது. அவளுடைய திறந்த வாய்க்குள் சிவப்புப் பூக்கள் இற்று வீழ்ந்தன.
”அப்பா…” அவளுடைய குரல் பூவிதழ்களுக்கிடையில் சுற்றித் திரிந்தது. ”என் கங்காருப்பா…” அவளுடைய கண்கள் நிரம்பி வழிந்தன. மேலே உச்சிச் சூரியன் அவளை பார்த்துக்கொண்டிருந்தது.
பிறகும் அரை மணி நேரம் கழிந்தபோதுதான் அவன் வந்தான். வியர்வை வழியும் முகமும் மஞ்சள் நிறமும் கொண்ட கோடு போட்ட சட்டை அணிந்த யாரோ ஒருவன்.
காப்பாத்துங்க, அவள் குரலை உயர்த்திக் கத்த முயன்றாள். அவளுடைய தொண்டை இழுத்துக்கொண்டு எச்சில் மட்டும் வெளிவந்தது.
இந்த டைகர் பாம் கொஞ்சம் தேச்சு விடுங்க, அவளுடைய கண்கள் அவனைக் கெஞ்சின. அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். கண்கள் அசைவதால் சாகவில்லை என்று அவன் புரிந்துகொண்டான்.
பூனையின் மணமுடைய அவன் அவளை நோக்கிக் குனிந்து முகர்ந்து பார்த்தான். அவனுடைய மஞ்சள் சட்டையின் கருப்புக் கோடுகள் தன் கண்கள் முழுக்கப் பரவுவதாகத் தோன்றியது அவளுக்கு…. ’அப்பா….’
”அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சுன்னா… ஒரு வேளை… அதை மட்டும் பாத்துக்குங்க” டாக்டரின் எச்சரிக்கை.
அந்த அந்நியன் இப்போது மண்டியிட்டு உட்கார்ந்து உதட்டால் அவளுடைய வாயில் விழுந்திருந்த பூக்களை அகற்றிக்கொண்டிருக்கிறான். அவள் கண்களால் பேச முயன்றாள். ”பேக்…” அவன் பையைப் பார்ப்பதை அவள் கண்டாள். வேகமா வேகமா… அவளுக்கு மூச்சு வாங்கத் துவங்கியது. அவன் தொண்டையில் இறுக்கப் பிடித்தபோது அவளுக்கு மூச்சு முட்டியது.
அவன் பையிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து அவளுடைய வாயில் தண்ணீரை ஊற்றினான். ”அப்பா…” அவள் அலற முயன்றாள்.
… டைகர் … டைகர் பாம்…
தண்ணீர் பாட்டிலை திரும்ப வைக்கும்போதுதான் அவன் அந்தக் கடிதத்தைக் கண்டான். ”தயவு செய்து…” அப்படித்தான் தன் அப்பா எழுதியிருப்பார் என்று அவளுக்குத் தோன்றியது.
”என் அப்பா…”
அவன் கடிதத்தை மடித்து பைக்குள்ளேயே போட்டான். டைகர் பாமின் புட்டியைத் திறந்தான். உயிரின் வாசனை. அவள் மூச்சை வேகமாக உள்ளிழுத்தாள். மதியச் சூட்டில் டைகர் பாம் நுரை நெய்யைப் போல உருகிப்போயிருந்தது. டைகர் பாமைத் தொட்டு அவன் மெல்ல அவளைத் தடவத் துவங்கினான்.
இழுத்துக்கொண்ட கால்களில், கைகளில், உடலில் அவன் டைகர் பாமின் மெல்லிய வீரியத்தோடு ஸ்பரிசித்தான். அவளுக்கு எரிச்சல் கண்டது. சாலையின் தார்ச்சூட்டில் அவள் தேகம் தகித்தது.
நகம் முளைத்த விரலால் அவன் மெல்ல அவளைப் பிறாண்டினான். மண்டி போட்டு உட்கார்ந்திருந்த அவனுடைய கைகள் எங்கே என்று அவள் திகைத்தாள். அவனுடைய மஞ்சள் கோடு போட்ட சட்டையினூடே கனத்த ரோமங்கள் வெளியே எழுவதை அவள் கண்டாள். அவன் முகம் குனிந்து முத்தமிட்டபோது டைகர் பாமின் எரிச்சலையும் புலிப்பல்களின் கூர்மையையும் ரத்தத்தின் துவர்ப்பையும் அவள் உணர்ந்தாள். அவள் வலியோடு உடலை அசைத்தாள். ’அப்பா’ என்ற பலவீனமான அலறல் மட்டும் அவளுடைய தொண்டையில் சுற்றி அலைந்தது.
பிறகு ஆஸ்பத்திரிப் படுக்கையில் அப்பாவைப் பார்த்தபோது அவள் வீறிட்டு அழவில்லை. அப்பா அழுதபோது அவள் ஆறுதல் கூறினாள்: ”ஓ… அப்பா… அது ஒரு டைகர் தான்ப்பா…. வெறும் ஒரு மஞ்சள் டைகர்!”
****
இந்து மேனோன்:
1980-இல் கோழிக்கோட்டில் பிறந்தார். இசைக்கலைஞரான எஸ்.விக்கிரமன் நாயர் – வி.சத்யவதி தம்பதியின் மகள். மலையாளத்தில் இளங்கலைப் பட்டமும் சோஷியாலஜியில் முதுகலைப் பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றவர். அங்கணம் சுஷமா எண்டோவ்மெண்ட் விருது, உரூப் விருது, சாகித்ய அகாதமி கீதா ஹிரண்யன் விருது, மாத்ருபூமி இலக்கிய விருது, ஜனப்பிரிய ட்ரஸ்ட் விருது முதலான விருதுகள் பெற்றிருக்கிறார். ஒரு லெஸ்பியன் பசு, சங் பரிவார், இந்து சாயலுள்ள முஸ்லீம் ஆண், முத்தங்களின் அகராதி, என் தேனே என் ஆனந்தமே முதலான நூல்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் மாத்ருபூமியில் தொடராக வந்து புகழ்பெற்ற ‘கப்பலைப் பற்றிய ஒரு விசித்திர புத்தகம்’ என்ற நாவல் விரைவில் புத்தகமாக வெளிவருகிறது.

ஸ்ரீபதி பத்மநாபா:
1990 களின் மத்தியில் எழுதத் துவங்கியவர். கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதுகிறார். 1997இல் முதல் கவிதைத் தொகுப்பு ‘பூஜ்யம்’ வெளியானது. ‘திசை’ ‘சினிமாவின் இடங்கள்’ ‘குஞ்ஞுண்ணி கவிதைகள்’ போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும், ‘மலையாளக் கரையோரம்’ என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. தொழில்முறை வடிவமைப்பாளராக கோவையில் சொந்த நிறுவனம் நடத்தி வருகிறார்.