Image 1Image 1A

தனக்கும் பிறருக்குமான உறவு என்பது பல்வேறு கொடுக்கல், வாங்கல்களுக்கு இடையே பெரிதும் உலகியல் தளத்தில் நிகழக்கூடியது. அதுவே தனக்கும் இப்பிரஞ்சத்திற்குமான தொடர்பு என விரியும் போது அது அகவயமான நிலையில் முற்றிலும் நேரெதிரான திசையில் இயங்கக்கூடிய ஒன்று. அது கடவுள் மறைந்து விட்ட பிரபஞ்சத்தில் மனிதனை ஆற்றுவிக்கக்கூடிய ஒரு வகை விடுதலை உணர்வாகும். அவ்வகையில் இவ்வுலகியல் தளத்தையும், அதற்கப்பாலான நிலையையும் பிரிக்கும் தெளிவற்றதொரு எல்லைக் கோட்டருகில் நின்றவாறு எழுதும் ஸ்காண்டிநேவியக் கவிஞரான தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகள் மரணம், வரலாறு, நினைவுகள் போன்ற மானுடப் பொதுவான கருப்பொருள்களையும், காலந்தோறும் எழுப்பப்படும் நிலைத்த கேள்விகளையும் எதிர்கொள்பவை. இவருடைய கவிதைகளில் தென்படும் மானுடம் மீதான அக்கறை வெகுசில கவிஞர்களிடம் மட்டுமே காணக்கிடைப்பது எனக்குறிப்பிடும் சபரிநாதன் இக்கவிதைகளை ஒரு வேலையாக அல்லாமல் அவரை மொழிபெயர்க்க வேண்டும் என்கிற உத்வேகத்தினால்  தூண்டப்பட்டு மொழிபெயர்த்திருக்கிறார். மொழியாக்கத்தை ’சமரசங்களின் கலை’, ’தோல்வியுறும் தொழில்’, ’’’படைப்புச் செயல்பாட்டின் ஆனந்தம் கிட்டாத வேலை’ என்றெல்லாம் பலவாறு கூறிக் கொண்டபோதிலும் மிகவும் அனுபவித்து, ரசித்து, இம்மொழிபெயர்ப்பு நூலை உருவாக்கி தந்திருக்கிறார் சபரிநாதன். முன்னுதாரணமான தொகுப்பு.

உறைநிலைக்குக் கீழே

தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் கவிதைகள்
– தமிழில் : சபரிநாதன்.
கொம்பு, 11,பப்ளிக் ஆபிஸ் ரோடு,நாகப்பட்டிணம்.
பக்கம் : 160
விலை : ரூபாய் 150/-


 

ததும்பிக் கொண்டேயிருக்கும் நினைவுகளின் தாளாத குமிழ்கள்

Image 2

எழுதி எழுதித் தான் தனக்கான மொழியையும், வழியையும் கண்டடைகிறான் ஒரு கவிஞன். அவ்வகையில் கண்டராதித்தன் தனது முந்தைய இரு தொகுப்புகளிலிருந்தும் மாறுபட்டு, அலங்காரங்கள் அதிகமில்லாத, காட்சித் தன்மையுடன் கூடிய நேரடியான சித்தரிப்பு மொழியை தனது இந்த மூன்றாவது தொகுப்பில் கைக்கொண்டிருக்கிறார். நாம் சிறியது, எளிமையானது, சாதாரணமானது என எண்ணுகிற பல விஷயங்கள் உண்மையில் அவ்வளவு மேலோட்டமானதோ, புறக்கணிக்கக்கூடியதோ அல்ல என்பதைச் சுட்ட அவ்வளவாக சிடுக்குகளில்லாத ஒரு இலகுவான மொழி கவிஞனுக்குத் தேவைப்படுகிறது. இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகளிலும் இந்த எளிமையின் ரசவாதம் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். அதே சமயம் அன்றாடத்தின் அபத்தத்தையும் கலாச்சார நினைவுகளையும் நிறைவுறாத தாபத்தின் தழலையும் உணரும் இரு மனதின் கொதிப்பென வெளிப்படும் அவருடைய வழமையான மொழியிலான சில கவிதைகளையும் இதில் பார்க்க முடிகிறது. கவிதையின் வீச்சிற்கு ஆதாரமான விசையை அளிப்பது அதன் மொழிதல் முறையே என நம்பும்பட்சத்தில் உங்கள் மனதை மீட்டவல்ல நுட்பமான வரிகள் பலவும் இத்தொகுதியில் உண்டு.

 

திருச்சாழல்

கண்டராதித்தன்
புது எழுத்து – 2/205 , அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் – 635112.
பக்கம் : 72 ;
விலை : ரூ 70/-


 

கலியானோ என்னும் கதை சொல்லி

Image 3

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான கார்லோஸ் புயண்டஸ், கார்சியா மார்க்வெஸ், மரியா வர்கஸ் யோசா, இஸபெல் ஆலெண்டே வரிசையில் வைத்தெண்ணக் கூடிய ஒரு முக்கியமான ஆளுமை எட்வர்டோ கலியானோ. ஒரு மனிதனின் நிகழ்காலக் குழப்பங்களையும், எதிர்கால நம்பிக்கைகளையும் ஏதோ ஒரு வகையில் நிர்ணயிப்பது அவனுடைய இறந்தகாலம் பற்றிய நினைவுகளே என்றால் அது மிகையாகாது. இறந்த கால உண்மைகள் என்று நாம் நம்புகிற வரலாறு என்பது ஒரு போதும் ஒருபடித்தானதாக நேர்க்கோட்டு முறையில் நிகழ்ந்ததுவோ, விவரிக்கக் கூடியதுவோ அல்ல. வரலாற்றில் புனைவின் அம்சம், அதிகாரத்தின் பங்கு, கலாச்சாரத் தணிக்கை முதலியவற்றின் ஊடாட்டங்கள் எவ்விதமாகவெல்லாம் நிகழக்கூடும் எனும் புரிதலோடு அமைந்தவை கலியானோவின் எழுத்துக்கள். அவருடைய படைப்புகள் துல்லியமான விவரணைகளையும், அரசியல் கடப்பாட்டையும் கவித்துவத்தையும் ஒருங்கே கொண்டவை என மதிப்பிடப்படுகின்றன. ரவிக்குமார் அவர் எழுத்துகளின்றும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ள இச்சிறுநூல் கலியானோவைப் பற்றிய கச்சிதமான அறிமுகம். இதைப் படித்தவுடன் கலியானோவின் பிற ஆக்கங்களைத் தேடிப் போக வேண்டுமென்ற ஆவலை ஒரு வாசகன் அதிகம் தள்ளிப்போடவியலாது.

வரலாறு எனும் கதை
எட்வர்டோ கலியானோ
தமிழில் : ரவிக்குமார்.  மணற்கேணி பதிப்பகம், லாஸ்பேட்டை, புதுச்சேரி.
பக்கம் : 108 : விலை : ரூ 70/-


 

ஒளிக்கும் நிழலுக்கும் பின்னால்

Image 4கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் நமது இந்திய சினிமா உலகின் மிகப்பெரிய சந்தைகளுள் ஒன்று. அதனால் தானோ என்னவோ, அது வணிக வெற்றியின் இரும்பு விதியான கேளிக்கை நோக்கு என்பதை விட்டு அதிகம் வெளியே வரவில்லை. விதிவிலக்குகளான மாற்று சினிமா முயற்சிகளுக்கு ரேவில் தொடங்கி நாகராஜ் மஞ்சுளே வரை இங்கு ஒரு தொடர்ச்சி உண்டு. ஆனால் அது ஒப்பீட்டு அளவில் குறைவானது. அத்தகைய Image 4Aதிரைப்படங்களுக்கு பொது வெளியில் பெரிய அறிமுகமோ அங்கீகாரமோ இல்லை.  அவற்றில் ஆர்வமுடையவர்கள் திரைப்பட கழகங்களையும், ஆவணக் காப்பகங்களையும் சார்ந்திருக்க வேண்டும். அங்கும் குரசோவோ, பெர்க்மன், புனுவல் என ஒரு பத்து பதினைந்து பெயர்களே திரும்பத் திரும்ப வரும். இன்று இணையத்தின் அசுர சாத்தியங்கள் பல்வேறு தடைகளையும் எல்லைகளையும் அழித்து தன்போக்கில் புதியவெளியை பார்வையாளனுக்கு திறந்து விட்டிருக்கிறது. அதன் சுதந்திரத்தை முழுவதுமாக அவாவுறுபவர் எனில் நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பல திரை மேதைகளைப் பற்றியும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் துல்லியமான மதிப்பீடுகளோடு அறிமுகப்படுத்துகிறது இந்நூல். திரைப்படம் குறித்து பல ஆழமான அறிமுக நூல்கள் தமிழில் வந்துள்ளன. ஆனால் அவற்றுள் காணக்கிடைக்காத பல புதிய பெயர்களை , மேதை என்ற சொல்லுக்குரிய மெய்யான பொருளில் சினிமாவை அணுகிய கலைஞர்களை இந்நூலில் நீங்கள் பார்க்கலாம் என்பதே இதன் சிறப்பு. இதன் ஆசிரியர் எஸ்.ஆனந்த் ‘கோணங்கள்’ என்ற திரைப்படக் கழகத்தின் வாயிலாக கோவையில் தொடர்ந்து திரையிடல்களை நடத்தி வருகிறார். உலக சினிமா குறித்து ஆழமான பட்டறிவும் நுட்பமான ரசனையும் கொண்டவர்.

திரைப்பட மேதைகள்

எஸ்.ஆனந்த்
தமிழினி பதிப்பகம், 63, நாச்சியம்மை நகர், சோலவாயல், சென்னை – 600 051.
பக்கம் : 512
விலை:ரூ.450/-