KN Senthil

ஆசிரியர் குறிப்பு

கபாடபுரம் முதல் இதழ் பெற்ற வரவேற்பு பெரும் நம்பிக்கையை அளித்திருக்கிறது. தழிழ்ச் சூழலில் ஒரு தீவிர இதழ் அடைய வேண்டிய கவனத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பதில் கபாடபுரம் பெருமகிழ்வை அடைந்திருக்கிறது. இதைச் சாத்தியமாக்கிய படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்பும் நன்றியும். இவை கனவுகளை வளர்த்துக் கொள்வதற்கும் அதை நோக்கி நடைபயில்வதற்குமான உந்துதலையும் ஆற்றலையும் கொடுத்திருக்கிறது. உள்ளடக்க ரீதியில் செறிவையும் ஆழத்தையும் வேறுபட்ட கலை வடிவங்களை நோக்கிய பயணத்தையும் மேற்கொள்ள இனி வரும் இதழ்கள் முயலும். நிற்க! ஆம். பிரகடனங்களை விடவும் செயல்பாடுகள் அர்த்தபூர்வமானவையல்லவா..!

முதல் இதழ் பரவலாகச் சென்று சேர்ந்ததற்கும் பலரின் சிலாகிப்புக்குரிய ஒன்றாக ஆனதற்கும் அதில் பங்களித்திருந்த படைப்பாளிகளின் ஆக்கங்கள் முதற்காரணம் எனினும் அதற்கிணையாக வைத்து பேசப்பட்டது இதழின் வடிவமைப்பாகும். தன் அபாரமான கலையழகால் இதழை மேம்படுத்தி மேலே கொண்டு சென்றவர் வடிவமைப்பாளரும் நண்பருமான சந்தோஷ்குமார் (Happily Ever After Design. Coimbatore). முதல் இதழுக்கான படைப்புகளுக்கு படைப்பாளிகளிடம் நெருக்குதல் அளித்து ஆக்கங்களைப் பெற்ற பின், இருவரின் திட்டமிடலையும் கடந்து இதழ் வெளிவரத் தாமதமாகிக் கொண்டே இருந்தது. புதுமைப்பித்தன் வைக்கும் சோதனை எனச் சொல்லிக் கொண்டோம். எதிர்பார்ப்புகளால் விளைந்த விசாரிப்புகளுக்கு பதில் கூற இயலாதவாறு மேலும் தள்ளிப் போனது. ஒரு கட்டத்தில் மனம் நொந்து தாள முடியாமல் சந்தோஷை அழைத்து வெகுநேரம் புலம்பியபின் இறுதியில் ”இதழை விட்டு விடலாமா?” என்றேன். சில வினாடி மெளனத்திற்குப் பின் “நிச்சயமா முடியாது. இந்த இதழ் உங்கள் கனவு மட்டுமில்லை, என்னுடையதும் தான். கபாடபுரத்தின் பாதியை நானும் என் தோளில் சுமக்கிறேன்.“ என்றார். அதன்பின் அவரிடம் பேசிய  ஒரு சொல்லும் இதழ் பற்றியதாக இருக்கவில்லை. அதற்கு மூன்றாம் நாள் இதழின் வெளியீடு நிகழ்ந்தது. அவர் கூறியது எவ்வளவு பெரிய உண்மை என்பதை அது நிரூபித்தது. வடிவமைப்பு சார்ந்து பாராட்டுத் தெரிவித்து என்னிடம் வந்த அத்தனை சொற்களையும் சந்தோஷிடமே கையளிக்கிறேன். கூடவே இதழ் வெளியான நான்காம் நாள் கவிஞர்.அகச்சேரனிடமிருந்து கிடைத்த இரண்டு முத்தங்களின் பாதியையும்.

வடிவமைப்பு குறித்து பலரும் தெரியப்படுத்திய ஒரே குறை வரிகளின் முடிப்பு (Alignment) தொடர்பானது. வலதுபுறம் வரிகள் ஒழுங்கற்று முடிவதாக பலரும் சொன்னார்கள். அதை சந்தோஷிடம் கொண்டு சென்றேன். “அதுவும் வடிவமைப்பின் ஒரு கூறு தான். இன்று பரவலாக நடைமுறையிலுள்ள விஷயமும் கூட. அப்படி அமைந்திருப்பது இரு பயனை வாசிப்பவனுக்கு அளிக்கிறது. ஒன்று வாசிப்பின் வேகத்தில் வரிகளை விட்டுவிடாதிருக்கச் செய்கிறது. கண் வலி வருவதிலிருந்து தடுக்கிறது” என்றார் சந்தோஷ்.

இந்த இதழில் முகப்புக் கட்டுரையாக பாரதி (1907-ல்) எழுதிய கட்டுரையொன்று பிரசுரமாகியிருக்கிறது. இருபத்தோறாம் நூற்றாண்டில் அக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யும் போது பின்பற்றப்பட வேண்டியவைகள் குறித்து குழப்பான எண்ணங்களே இருந்தன. அதைக் களைந்து உதவியர் வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி. அவர் உடல்நலம் குன்றியிருந்த நாளொன்றில் அதை அனுப்பிக் கேட்டிருந்தேன். நலமின்மைக்கு நடுவில் அதைப் படித்து அப்பிரதியில் கைவைக்க அனுமதியுள்ள இடங்களையும் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாத பகுதிகளையும் சுட்டிக் காட்டினார். அதை முன் வைத்து அவர் கூறிய ஆலோசனைகள் தெளிவை அளித்ததோடு தனிப்பட்ட அளவிலும் உதவிகரமாக அமைந்தது. சலபதிக்கு அன்பும் நன்றியும்.

அதிகமான கவனிப்பிற்குள்ளாகாத ”காமிக்ஸ்” குறித்து வரதராஜன் ராஜூ எழுதியிருக்கும் கட்டுரை இவ்விதழில் இடம்பெற்றிருக்கிறது. காமிக்ஸை எவ்வாறு காண வேண்டும் என்பதோடல்லாமல் அதன் உள்ளடுக்கை நோக்கி நுழையும் முறை பற்றியுமான நுட்பமான கட்டுரை இது. ராஜு இவ்வுலகு பற்றி வரும் இதழ்களில் தொடராக எழுதவுள்ளார்.

கபாடபுரம் முதல் இதழில் “ஓவியம்” என்னும் பெயரில் ’டிராட்ஸ்கி’மருது பங்களித்திருந்த பகுதி இவ்விதழிலிருந்து ” ‘டிராட்ஸ்கி’ மருது பக்கம்”  என மாற்றப்பட்டிருக்கிறது. இப்பகுதியை மருது சுதந்திரமாக தான் விரும்பியவாறு பயன்படுத்திக் கொள்வார். அவ்வகையில் புதுமைப்பித்தன் பயன்படுத்திய பொருட்களை மருது எடுத்த புகைப்படம் அவர் எழுதிய குறிப்புடன் முதன்முறையாக இடம் பெற்றிருக்கிறது.

இவ்விதழில் அம்பையின் சிறுகதைக்கு ஓவியம் வரைந்திருக்கும் மோனிகா    அடுத்த இதழிலிருந்து ”ஓவியம்” குறித்த தொடரொன்றை எழுதவிருக்கிறார். அவருக்கு அன்பும் நன்றியும்.

இரண்டாம் இதழுக்குரிய படைப்புகள் வேண்டி தொடர்பு கொண்ட போது மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் ஆக்கங்களை அனுப்பி இதழ் வெளிவரும் வரை பொறுமைகாத்த அனைத்து படைப்பாளிகளும் பேரன்பும் பெரும்நன்றியும். இவர்களே கபாடபுரத்தின் எலும்பும் இரத்தமும் சதையுமாவார்கள். எண்பது வயதைக் கடந்த நிலையில் கண் அறுவைசிகிச்சை செய்திருந்த போதும் கேட்டவுடன் அர்ப்பணிப்புடன் சிறுகதையை மொழிபெயர்த்து அனுப்பி விட்டு “அடுத்து நான் உங்களுக்கு என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க” என்று கேட்ட எம்.எஸ் (எ) எம். சிவசுப்பிரமணியத்தை பிரியத்துடன் நினைத்துக் கொள்கிறேன். கடும் உடல்வலியைப் பொருட்படுத்தாது அம்பை தன் சிறுகதையைத் தட்டச்சு செய்து அனுப்பிய போது (1.40AM) நடுநிசி தாண்டி விட்டிருந்தது. இவை இரண்டும் அறிந்தவை. பிற படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு பின் அறியதவைகள் அதிகமாகவே இருக்கக்கூடும். இத்தகு படைப்பாளிகளே இரண்டாம் இதழுக்கு வெளிச்சத்தையும் சக்தியையும் அளித்தவர்கள்.

இரண்டாம் இதழில் ”பெண்மொழி”யின்  புதிய கட்டுரையை எழுதியிருப்பவர் தமிழ்நதி. சென்ற இதழின் தொடர்ச்சியாக புரிந்துகொள்ளப்பட வேண்டியது அனாரின் கட்டுரை.

கணியன் பூங்குன்றனின் நான்கு நூல்களுக்கான பிரதி-பலன், சிறார் இலக்கியத்தின் மீதான உரையாடல் தொடங்கப்படாதிருப்பதை முன்வைத்து  விஷ்ணுபுரம் சரவணனின் எழுதியிருக்கும் கட்டுரை , ”சினிமா” பகுதியில் ஹெர்சாக் குறித்த கறாரான மதிப்பீட்டை முன் வைக்கும் கோகுல் பிரசாத்தின் கட்டுரை ஆகியவை தொடர்களாக இடம்பெற்றுள்ளன.

கபாடபுரம் முதல் இதழுக்கான விளம்பரத்தைக் கேட்டவுடன் துளியும் தாமதிக்காது மனமுவந்து தங்கள் இதழில் வெளியிட்ட கண்ணனுக்கும் (காலச்சுவடு), மனுஷ்யபுத்திரனுக்கும் (உயிர்மை) தன் இணைய பக்கத்தில் இதழ் பற்றிய அறிமுகக் குறிப்பையும் இதழ் மீதான தன் பார்வையையும் எழுதிய ஜெயமோகனுக்கும் நன்றிகள் பல.

மிகத் தாமதமான அங்கீகாரம் என்றாலும் இப்போதேனும் அகாதமி குழு தமிழின் மூத்த படைப்பாளியான ஆ.மாதவனை (அவரது 82வது வயதில்)  அங்கீகரித்து சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்திருக்கிறதே..! அதில் கபாடபுரம் தன் மகிழ்ச்சியையும் மாதவனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இச்செய்தி கிட்டியவுடன் ஆ.மாதவன் குறித்த கட்டுரை இதழில் வெளிவர வேண்டுமென கபாடபுரம் விரும்பியது. கட்டுரைக்காக ஜெயமோகனை அணுகினேன். மிகக் குறைந்த கால இடைவெளிக்குள் மாதவன் படைப்புலகு குறித்து கட்டுரையொன்றை எழுதி அளித்தார். ஜெயமோகனுக்கு அன்பும் நன்றியும்.

இதழில் இடம்பெற்றிருக்கும் சில ஆக்கங்களுக்கு ஓவியங்களை வரைந்தளித்தவர்கள் அனந்த பத்மநாபன், மோனிகா. இதனோடு மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் தங்களது பிற ஓவியங்களை இதழில் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார்கள். இவ்விருவருக்கும் பஷீர் கட்டுரைக்கு தனியாக ஓவியம் வரைந்தளித்த றஷ்மிக்கும் , வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல் ஓவியராகவும் (அகன் குழந்தையப்பன்) தன் பங்களிப்பை நல்கியுள்ள சந்தோஷ்க்கும் அன்பும் நன்றிகளும்.

கடந்த ஐம்பது வருடங்களாக கலை இலக்கியத்துறையில் தன் நிகரற்ற செயல்பாடுகளின் மூலம் சூழலில் தொடர்ந்து சலனங்களை உருவாக்கியவர் வெங்கட் சாமிநாதன். இலக்கியம் தவிர்த்து பிறதுறைகளின் மீதும் அவர் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த ஈடுபாடு மேலோட்டமானதல்ல ,ஆழமானது என்பதற்குச் சாட்சியாக அவர் எழுதிய நூற்றுக்கணக்கான பக்கங்கள் நம்முன் இருந்து கொண்டிருக்கின்றன. அவருக்கு கபாடபுரம்  அஞ்சலி செலுத்துகிறது. நாற்பதை வயதைக்கூட எட்டாமல் திடீரென இல்லாமல் ஆகிவிட்ட கவிஞர்.ப.தியாகுவுக்கும் கபாடபுரம் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.

கபாடபுரம் முதல் இதழுக்கு பாராட்டுகளாக வந்து சேர்ந்த கடிதங்கள், மின்னஞ்சல்கள் எதையும் இவ்விதழில் பிரசுரிக்கவில்லை. இரண்டாம் இதழுக்கான எதிர்வினைகள் மூன்றாம் இதழில் கடிதம் பகுதியில் பிரசுரமாகும். மனம் திறந்த விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும்  எதிர்நோக்கியிருக்கிறது கபாடபுரம்.

கபாடபுரம் இதழை மேலும் பரவலாகக் கொண்டு சேர்ப்பது நண்பர்களின் கைகளில் தான் இருக்கிறது. பலரிடமும் இதழைப் பகிர்வதன் வழி இதைச் சாத்தியமாக்க முடியும். உங்களிடமிருந்தே வரும் காலத்துக்கான உற்சாகத்தையும் உந்துதலையும் எதிர்நோக்கியிருக்கிறது கபாடபுரம்.

மிக்க அன்புடன்
கே.என். செந்தில்
Email : editor@kapaadapuram.com