உள்ளிருந்து எழும் உறுமல்.
ஆ.மாதவன் கதைகள்

ஜெயமோகன்jeya_1960767f

 

 

 

 

WriterMadhavan_2660652f

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆ.மாதவன் கதைகள் போல அடித்தட்டு வாழ்க்கையைத் தீவிரமாகச் சொன்ன படைப்புகள் தமிழில் மிகமிகக்குறைவு. சொல்லப்படாத எளிய வாழ்க்கையைச் சொல்வதே முற்போக்கு இலக்கியம் என்றுதான் எழுபதுகள் இடதுசாரிகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். மொழியாக்கங்கள் வழியாக அவர்களால் அவை இங்கே வலுவாக அறிமுகம் செய்யப்பட்டன. அவர்களின் முன்னோடி படைப்பாளிகள் அதை எழுதிக்காட்டவும் செய்தார்கள். மக்ஸீம் கார்க்கியின் நாவல்கள். சிங்கிஸ் ஐத்மாத்தவ் நாவல்கள். தகழி சிவசங்கரப்பிள்ளையின் நாவல்கள்.

ஆ.மாதவனும் அதைத்தான் எழுதினார். பிச்சைக்காரர்கள், வேசிகள், தெருப்பொறுக்கிகள், சிறுதொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்க்கை. அவரது புனைவுலகிலும் முதலாளிகள் சுரண்டல்காரர்கள்தான். ஏய்த்துப்பிழைப்பதே வணிகம். அதிகாரம் என்பது வணிகம் உருவாக்கும் செல்வத்திற்கு கைகட்டி பணிசெய்வதே. அப்படியென்றால் நம் முற்போக்குப் படைப்பாளிகளில் முதலிடத்தில் ஆ.மாதவன் வைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லை. அவர்கள் அவரைக் கண்டுகொண்டதே இல்லை. அவர் கட்சியில் இல்லை என்பதோ கொடிபிடிக்க வரவில்லை என்பதோ மட்டும் அதற்குக் காரணம் இல்லை.

முக்கியமான காரணம் அவரது புனைவுலகில் ‘மனிதாபிமானம்’ இல்லை என்பதுதான். இடதுசாரிக் கருத்துலகின் மையமே அதுதான். ’மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல்!’ என்ற மக்ஸிம் கார்க்கியின் சொற்றொடரே அவர்களின் மந்திரம். ஆ.மாதவனின் எழுத்துலகம் “உண்மையில் அப்படித்தானா?” என்று ஐயப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அவரை மனிதாபிமானி என்று சொல்லமுடியாது. மனிதனுக்குள் உறையும் தீமையை நோக்கியே செல்கின்றது அவரது பார்வை. அந்த மனிதன் தெருப்பொறுக்கியும் பிச்சைக்காரனும் முதலாளியும் சாதாரணத்தொழிலாளியும் எல்லாமாக மாறித் தெருவை நிறைத்திருக்கிறான். மாதவன் அவன் உள்ளத்தின் இருண்ட ஆழத்தை மட்டுமே தொட்டுக்காட்டுகிறார். ஆகவேதான் அவரை நவீனத்துவத்தின் எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி போன்றோர் கொண்டாடினர். இடதுசாரிகள் விலகிக்கொண்டனர்.

இன்று நிர்பயா [ஜோதி சிங்] பற்றி நம்மூர் முற்போக்காளர் எழுதிக்கொண்டிருக்கும் வரிகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் முதன்மைக் குற்றவாளியாகிய முதிரா இளைஞனின் வறுமையான பின்னணி, அவன் டெல்லியில் வாழ்ந்த புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கை, அவனுடைய துயரங்கள் என கண்ணீர்கதைகளை உருவாக்கி மனிதாபிமானத்தின் உச்சியில் ஏறி நின்று அவனை மன்னிக்கிறார்கள். அந்த இளைஞன் செய்த குற்றத்தின் பலிகடா தங்களவர் அல்ல என்பதே உள்ளூர ஓடும் எண்ணம் என்பது ரகசியம் அல்ல.

எப்போதும் குற்றவாளிகளைப் பற்றிப் பேசும்போது ‘அனுதாபத்துடன்’ பேசுவதே முற்போக்கு. ஏனென்றால் அவன் மனிதன். மனிதன் மகத்தானவன். அவனுடைய குற்றங்களும் பலவீனங்களும் எல்லாம் திரிபுநிலைகளே. அந்தத்திரிபுநிலைகளுக்குச் சமூகமும் சூழலுமே காரணம்- இடதுசாரி எளிமைப்படுத்தல் எப்போதும் இப்படித்தான் செல்லும். அதற்கு முதலில் விடைகள்தான் கைவசம் இருக்கும். கேள்விகளை அதற்கேற்ப உருவாக்கிக்கொள்ளும். அதற்கு ஐயமே இல்லை. சாம்பல்நிறப்பகுதிகளே இல்லாத தெளிவே அதன் வலிமை.

ஆனால் உண்மையில் அப்படித்தானா? ஓரு நவீன எழுத்தாளன் ஒருபோதும் அக்குற்றவாளியை ‘அவன்’ என எண்ணமாட்டான். தீர்ப்பளிக்கும் கனிந்த கனவானாக, மனிதாபிமானச் சிந்தனாவாதியாக, மானுட எழுச்சி கொண்ட புரட்சியாளனாக தன்னைக் கற்பனை செய்து கொள்ளமாட்டான். அவன் அந்த இளைஞனாகவே தன்னைக் கற்பனை செய்துகொள்வான். அதனூடாக அவ்விளைஞனின் அகத்திற்குள் ஊடுருவிச்செல்வான். ஏனென்றால் அதுவும் மானுட மனமே. மானுட மனங்கள் ஆழத்துக்குள் செல்லும்தோறும் ஒன்றே. ஒரு மனம் இன்னொரு மானுடமனமாக ஆகமுடியும், அறியமுடியும் என்ற அடிப்படை விதிமேல் கட்டப்ப்பட்டதே இலக்கியம்.

அவ்வாறுசெல்லும்போது அவன் அறிவான், நம்மூர் முற்போக்கினர் பகற்கனவு காண்பதுபோல குற்றம், பாவம், குற்றவுணர்ச்சி என்பதெல்லாம் அத்தனை எளியவை அல்ல என்று. அவை சமூக உருவாக்கங்கள் அல்ல. பண்பாட்டு உருவாக்கங்கள் அல்ல. அவை மேலும் மேலும் ஆழமானவை. ஒருவேளை உயிரியல் அடிப்படைகளாக இருக்கலாம். சிம்பன்ஸிகளிலேயே கூட கொலைகாரர்களும் துரோகிகளும் வதைவிரும்பிகளும் உள்ளன. அவை மானுடனின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே உள்ளன. மூளைநரம்பியல் அவற்றுக்கு விடைதேடலாம். அல்லது பரிணாமவியல் விடைதேடலாம். எழுத்தாளன் விடைசொல்லமுடியாது. அவன் பணி அது அல்ல.

ஆனால் அவன் குற்றத்தின், பாவத்தின் உள்ளடுக்குகளை தன் கற்பனையால் தொட்டு எடுத்து வாசகன் முன் வைக்கமுடியும். நல்ல வாசகன் தன் கற்பனையால் அவற்றுக்குள் நுழையமுடியும். தானே குற்றவாளியும் பாவியும் ஆகி அறிதல் அது. அந்த அறிதல் அவனை நடுங்கச்செய்யும். விழிப்புணர்வுகொள்ளச் செய்யும். குற்றம் என்பது ஓர் அலாதியான கேளிக்கை என அவன் அறியக்கூடும். குற்றம்செய்பவன் அதில் தன்னைக் கண்டடைகிறான். தன்னை அதனூடாக விரிவாக்கம் செய்கிறான். எந்தக் கலையையும் போல, அர்ப்பணமுள்ள எந்த தொழிலையும்போல அதுவும் அவனுடைய அந்தரங்கத்தை விரியச்செய்வதே. அதில் அறிதலும் அனுபவித்தலும் திளைத்தலும் கடந்துசெல்லலும் உள்ளது.

ஆகவேதான் ஜோதி சிங்கை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றவன் அவள் பெண்குறியில் ஓர் இரும்புக்கம்பியைச் செருகுகிறான். அது கொலை மட்டும் அல்ல. வதையில் திளைத்தல். அது ஒரு மன உச்சம். எதிர்மறை உச்சம் அது. குற்றம் அது இச்சமூகத்திற்கு எதிரானதாக இருக்கலாம். அழிவுத்தன்மை கொண்டதாக இருக்கலாம். கருணையற்றதாக அறமற்றதாக இருக்கலாம். அதெல்லாம் சமுகத்திற்கு. அக்குற்றவாளிக்கு அவனுடைய தன்னியல்பின் மலர்வு அது.

அது உள்ளவரை எந்த குற்றவாளியும் தன் குற்றவியல்பிலிருந்து விடுதலை அடையமுடியாது. குற்றவாளி திருந்துவது என்பதைப்போன்ற அபத்தமான கூற்றே பிறிதில்லை. நூற்றுக்கணக்கான தேர்ந்த குற்றவியல் நிபுணர்களிடம், காவல்துறையினரிடம் நான் பேசியிருக்கிறேன். எவருக்கும் அதில் நம்பிக்கை இருந்ததில்லை. திருந்திய குற்றவாளி என்ற ஒரு மனிதரை அவர்களால் சுட்டமுடிவதில்லை. குற்றம்செய்யமுடியாத உடல்நிலை வருவதுண்டு. குற்றம் வேறு திசைகளில் மடைமாற்றம் கொள்வதுண்டு. குற்றத்திலிருந்து குற்றவாளி விலகமுடியாது, அது அவனுடைய மரணம். அவன் ஒரு காய்கறியாக ஆவது அது.

ஜோதி சிங்கை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக்கொன்ற இளைஞன் என்னசெய்வான்? கற்பழிப்பு என்பது தப்ப மிக எளிதானது, தனக்காக வாதிட அசட்டு மனிதாபிமானிகளும் மொண்ணையான பெரியமனிதர்களால் ஆன நீதியமைப்பும் உள்ளது என புரிந்துகொள்வான். அந்தக்கற்பழிப்பை நிகழ்த்திய கணங்கள் தன் வாழ்க்கையின் உச்சநிலை என்றும் அப்போது தன்னில் வெளிப்பட்ட தானே உண்மையான தான் என்றும் உணர்ந்திருப்பான். ஆகவே சிக்காமல் கற்பழிக்க எண்ணுவான். அதுவன்றி எதுவுமே அவன் அகத்தைக் கிளரச்செய்யாது. இந்தக்குற்றத்தில் பிடிபட்டு நுட்பங்களை அவன் உணர்ந்துவிட்டமையால் அவன் மறுபடியும் பிடிபடாது போகலாம். ஆனால் உறுதியாக அவன் அக்குற்றத்தைச் செய்து கொண்டே தான் இருப்பான். நீதிபதிகள் முற்போக்கினர் வீட்டுப்பெண்களை அவன் அடைய வாய்ப்பில்லை என்பதனால் அவர்கள் ஆறுதல் அடையலாம்.

அப்படியென்றால் என்னதான் செய்வது? நேரடியான அப்பட்டமான பதில் சுட்டுத்தள்ளுவதுதான். ஏனென்றால் நாம் சமூகம் என எதை கட்டி வைத்துள்ளோமோ அதில் அவனைப் போன்றவர்களுக்கு இடமில்லை. அவர்களால் இங்கு வாழமுடியாது. இதற்கு எதிரான திசையில்தான் அவனால் செல்லமுடியும். ஆனால் சுட்டுத்தள்ளமுடியாது. அதில் என்னென்னவோ தடைகள். சட்டம், சமூகத்தின் மனசாட்சி. அவனைப்போல பிடிபடாதவர்கள் பலர் உள்ளனர் என்னும் தர்க்கம். ஆகவே சிறைவைக்கலாம். எத்தனை காலம்? அதுவும் பதில் இல்லாத வினாவே. எதிர்காலத்தில் நரம்பியல் ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம். இன்று இக்கேள்விக்கு பதிலே இல்லை என்பதே உண்மை

ஆ.மாதவனின் புனைவுலகம் இந்த அப்பட்டமான யதார்த்ததைக் கரும்பாறையில் என சென்று முட்டுகிறது. ஆகவே தான் அது தமிழின் அச்சமூட்டும் இலக்கியப்பரப்பாக இன்று உள்ளது.எட்டாவது நாள் குறுநாவலின் சாளைப்பட்டாணி என்னவாக இருந்திருக்க முடியும்? பிறந்தது முதல் அறிந்தது அந்தக் குற்றத்தின் மணத்தை. ஜோதி சிங் நிகழ்ச்சியைப்போலவே ஒரு ஆக்ரோஷமான பாலியல்வன்முறை அதிலும் உள்ளது. சாளைப்பட்டாணி இம்மிகூட குற்றவுணர்வு கொள்வதில்லை. மட்டுமல்ல அவனுக்கு அது ஓர் இனிய நினைவும்கூட.

எட்டாவது நாள் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான குற்றம் நோக்கிய ஆய்வு. ஆ.மாதவன் சாளைப்பட்டாணியை நோக்கி கண்ணீர் சிந்தவில்லை. அவனுடைய குற்றங்களுக்குச் சமூகத்தையும் சூழலையும் கைகாட்டவில்லை. மாறாக ஏதோ ஒருவகையில் அவர் சாளைப்பட்டாணியின் உள்ளே நுழைகிறார். ‘நான்’ என்னும் தன்னிலைச் சித்தரிப்பு அதற்கு மிக உதவியானது. அவனாக நம்மை நடிக்கவைக்கிறார். அவன் செய்யும் அனைத்துக் குற்றங்களிலும் என் உள்ளம் திளைப்பதை நான் கண்டுகொண்டதே அக்கதை எனக்கு அளித்த அனுபவம் என்று இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் உணர்ந்தேன். நான் யாரென எனக்குக் காட்டிய படைப்புகளில் ஒன்று அது.

எத்தனை வகையான மனிதர்கள். மிகமிகச்சாதுவான கூட்டிப்புடைக்கும் பெண் ஒரு வாய்ப்புகிடைக்கையில் எத்திப்பிழைப்பவளாக மாற்றிக்கொள்கிறாள். செத்த பிணத்தை தூக்கி வீசி மகிழ்கிறார்கள் துப்புரவுப்பணியாளர்கள். வேசியை ஏமாற்றும் ஜாளி மணியன்கள் அதை ஒரு வெற்றி எனக் கொண்டாடுகிறார்கள். அனந்தபத்மநாப சாமியின் அருள் அது.ஒரு காரணமும் இல்லாமல் உடம்பிலும் மனதிலும் எழுந்த கொலைத்திமிர் காரணமாகவே ஒருவனை சினிமா அரங்கில் கால்வாரிவிட்டு கொல்கிறான் ஒருவன். கர்ப்பிணிப் பூனையின் வயிற்றில் எட்டி உதைக்கிறான் ஒருவன். மிக எளிய காரணத்துக்காக வாய்ப்பு அமைந்தபோது கிடங்கு மூட்டைகளைச் சரித்து சாதாரணமாகக் கொலைசெய்கிறார்கள். தீமையின் முடிவிலாமுகங்கள், அதுவே ஆ.மாதவனின் புனைவுலகம்.[ நான் தீமைநடமாடும் தெரு என்னும் பேரில் அவருக்கு ஒரு நீண்ட முகவுரையை பதினைந்தாண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன்]

அவரது கிருஷ்ணப்பருந்து ஒரு கூரிய குறுநாவல். ஃப்ராய்டிய உளப்பகுப்பைக்கொண்டு அந்நாவலைப்புரிந்துகொண்டால் அது கால்வாசியே பிடிபடும். அதன் மையம் கிடப்பது மேலும் சிக்கலான தேவி உபாசனையில். அதன் மறுவடிவமான காமப்பெருக்கில். ராணியை காமத்துடன் அணுகும் சாமியாரின் உள்ளத்தில் எழுவது அவர் முன்னால் சென்ற தொலைவை முழுக்க பின்னால் திரும்பிக் கடந்து சென்ற ஓர் ஆழம்.

அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள்’ என்ற கூற்று எப்படிப்பட்டது? ஆம், அது ஒரு பொய். உண்மையில் அது ஒரு ஏக்கம். நாம் உருவாக்கி வைத்துள்ள இச்சமூகம் அந்த அசட்டு நம்பிக்கையின்மீதுதான் செயல்பட்டுவருகிறது. ஆகவே அது உண்மையாக வேண்டும் என விழைகிறோம். உண்மையாக ஆகாதா என ஏங்குகிறோம். சிறிய ஆதாரம் கிடைத்தாலும் நம்பி கண்ணீர் மல்குகிறோம்.  உண்மை அப்பாலுள்ளது.  கூரிய இரக்கமற்ற கத்தி அது.  சென்னையின் பெருவெள்ளத்தில் மக்கள் செய்த சேவையைப்பற்றிக் கேட்கவே நாம் விழைகிறோம்.  பொருட்களை பலமடங்கு விலைவைத்து விற்ற வணிகர்கள், ஏய்த்துப்பொருள் வாங்கிய பொதுமக்கள் என நம் முன் விரிந்த முடிவில்லாத சிறுமைகளைக் கடந்துசெல்ல விரும்புகிறோம்

அப்படி நாம் கடந்து செல்ல விரும்பும் உண்மைகளால் ஆனது என்பதனாலேயே ஆ.மாதவனின் புனைவுலகம் பொதுமக்களுக்குரியதாக இருந்ததில்லை. நேரடியான நடை, அழுத்தமான கதை, உத்வேகம் மிக்க நிகழ்வுகள் கொண்ட இக்கதைகள் பெரும்பாலும் விரும்பப்பட்டதில்லை. சில்லறை மனிதாபிமானங்களைக் கடந்து உண்மையபிமானம் கொண்ட முதிர்ச்சிகொண்ட வாசகர்களுக்குரியவை அவை.

மீண்டும் மீண்டும் மனிதன் யார் என்று கேட்டுக்கொள்கின்றன ஆ.மாதவனின் கதைகள். காமம், குரோதம், மோகம். அதற்குமேல் அவன் யார்? ஆணவம். அதற்கு அப்பால் யார்? அவன் இங்கே இவ்வண்ணம் உருவம் கொண்ட ஒரு விலங்கு. சமூகத்தால் கட்டப்பட்டவன். கூட்டமாக இருக்கையிலும் தனியன். சமூகத்திற்காக தன்னை ஒருவகையில் சித்தரித்துக்கொள்பவன். அப்பால் அவன் தன் தனிமையில் பிறிதொருவன். ஆ.மாதவனின் பெரும்பாலான கதைகள் அந்தப் பிறிதொருவன் வெளிப்படும் உச்சகணங்களை நோக்கிச் செல்பவை. புனலும் மணலும் நாவலின் உச்சம் ஒரு கொலை. சொந்த மகளை நீரில் மிதித்துத் தாழ்த்தும் தந்தை. முற்றிலும் பாதுகாப்பான சூழல் அமையும் என்றால் ஒரு குற்றத்தைச் செய்யத்துணியாத ஆ.மாதவனின் கதைமாந்தரே குறைவுதான் போலும்.

“நீங்கள் இன்னும் என்னை புரிந்துகொள்ளவில்லை” என்று ஆ.மாதவனின் கதைமாந்தருக்குள் அமர்ந்து மனிதன் தத்துவ சிந்தனையாளர்களை முற்போக்காளர்களை நோக்கி உறுமுகிறான். ”உங்கள் அமைப்புகள் சட்டங்கள் தத்துவங்கள் எவையும் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. வாழ்தலின் நெரிசல் மட்டுமே என்னைக் கட்டுப்படுத்துகிறது. உள்ளூர நான் தடைகளற்றவன்” என்று அது கொக்கரிக்கிறது. எளியவிடைகளைக் கலைத்துச் சிக்கலை உருவாக்கிவிட்டு பின்னகர்வதே நவீனத்துவ இலக்கியத்தின் மிகப்பெரிய பணியாக இருந்தது. அதை மிக வலுவாகச் செய்கின்றன ஆ.மாதவனின் கதைகள். மீண்டும் புதியதாகச் சிந்திக்கவைக்கின்றன.