Libi

 

லிபி ஆரண்யா கவிதைகள்

ஓவியம்: அனந்த பத்மநாபன்

சின்டெக்ஸ் நிழலும் ஆப்பிள் மொபைலும்

லிபி- சின்டெக்ஸ் கவிதை

ஒளிரும் குறுந்திரை
அவளை அறைக்குள் தள்ளி
உள்தாழ்ப்பாளிடச் செய்கிறது
Mute இல் சிரிக்கவும் பழகிக்கொண்டாள்

இவனோ
ரீசார்ஜ் கடைக்காரனின்
புன்னகையங்குலத்தை
அகட்டிக் கொண்டே வருகிறான்
தேர்ந்த சொற்களைக் கொண்டு
மாறிமாறி ஊதியபடியிருக்கிறார்கள்
ஒரே பலூனை

இன்று
ஏறுவெயிலின் அகாலத்தில்
அதிரும் கைப்பேசி
அவனை மொட்டைமாடிக்கு
அனுப்பிவைக்கிறது

தகிக்கும் தட்டோடுகளுக்குக்
கால்மாற்றி கால்மாற்றி நிற்கையிலும்
நிலா காயும் சிறுபொழுதின்
வார்த்தைகளைத் தேரும் சாகசக்காரனைப்
பொசுக்கும் பாதங்கள்
கன்னிமூலைக்கு நகர்த்துகின்றன

நீர்கொண்ட கருத்த கருணையின் நிழல்
ஆசுவாசமளிக்கிறது

அங்கே என்ன சத்தம் என்கிறான்

வீட்டையொட்டி வெல்டிங் கடை என்கிறாள்

ஒருகணம்
கங்குப்பொறிகள் பறக்கும் பின்னணியில்
சித்திரமெனத் துலக்கங்கொள்கிறாள்

இருமுனையிலும் தெறிக்கும்
வார்த்தைகளும்
ஒரு வெல்டிங்கிற்குத்தானே என்கிறான்

மறுமுனை வெடித்துச் சிரிக்கையில்
இவன் தலைக்கு மேல்
Sintex எனும் சொல்
ஆதித்தோட்ட முகப்பின்
தேவ எச்சரிக்கையாகி ஒளிர்கிறது

பற்குறிக்குத் தப்பாத
ஆப்பிளொன்று
கைப்பேசியின் இலச்சினையாகி விடுகையில்
செய்தக்க செய்யாமை பாவந்தானே
என்பவனிடம்
பேச என்னதான் இருக்கிறது
மறுமுனைக்கு.


நான்சி எனும் தேவ வசனம்

லிபி-ப்ளாக்கி கவிதை

ப்ளாக்கி என்று
துக்கிரிகள் அழைக்கும்போது
நீ ஏன் திரும்பித் தொலைக்கிறாய்
நான்சி

இடமுலையழுந்த
நின் அணைப்பிலிருக்கும்
ஆதியாகமத்தின்
தெய்வீகக் கருமை உனக்கு

சாத்தானின் குழந்தைகள் அறியமாட்டார்கள்
வாரயிறுதியில்
தேவாலயம் வருகிறாய்

கூடுதல் சிரத்தையில் நீ
செக்கச் சிவப்பாக்கி வைக்கும்
ஞாயிற்றுக்கிழமையின்  ப்ரார்த்தனை இதழ்களுக்கு
ஸ்தோத்திரம் நான்சி

ஓரம் சிவந்து
உன் கனப்பில் இருக்கும்
கரிய தேவப் பொஸ்தகத்தின்
மாம்ச ரூபமடி யவை

ஏழு நாளும் ஞாயிறாகாதா சேசுவே

உன் பைபிள் உனக்கு
என் பைபிள் எனக்கு
நம் புதிய ஏற்பாடு

நாட்காட்டியின்
சகல எண்களும் சிவந்து
ஞாயிறாய் ஒளிர
கசிந்து வாசிப்பேன்
எனக்கே எனக்கான
தேவ வசனத்தை.


பராக்குப் பார்ப்பவனின்  சமூக முகம்

ஓர் அரைக்கால் டவுசர்காரனை
இழுத்துக் கொண்டு
முண்டா பனியனோடு
டவுன்ஹால் ரோட்டில் உலவும்
இந்தப் பூனைக்கண்ணியின் மீது
இந்தக் கணத்தில்
முப்பத்தி நாலு சோடிக் கண்கள்
மொய்த்துக் கொண்டிருப்பதை
நான் அறிவேன்
முப்பத்தி ஐந்து என்று
முணுமுணுக்கும்
உங்களோடு எனக்குப் பேச்சு இல்லை

தகிக்கும் இந்த நண்பகலில்
எனது நேர்மை தோராயமானதுதான்

சரசரக்கும் ஜரிகைப் பட்டைச் சுற்றிக்கொண்டு
அக்குளில் கசகசக்கும் ஹமாரா கலாச்சாரத்தோடு
எதிர்ப்படும் இந்நிலத்தின் பெண்கள்
ஒரு சோடி மொக்குகள் துளைக்கும்
அந்த வெள்ளைக்காரியின்
உடுப்பு குறித்து
ஏதோ  பேசிக்கொள்கிறார்கள்

வெயில்பட தமது உள்ளாடையை
உலர்த்தத் துப்பற்ற  நிலத்தில்
அவர்கள்
என்ன பேசி என்ன ஆகப் போகிறது.