புதுமைப்பித்தனின் நாற்காலி : சில குறிப்புகள்
-ட்ராட்ஸ்கி மருதுTrotsky Marudhu

 

putumai pithan narkaali3a

ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு போகும் முன் விடுமுறையில், மதுரை சிம்மக்கல்லுக்கு மாற்றி வந்த பொதுநூலகத்தில் தான் முதல் கதையாக புதுமைப்பித்தனின் ‘பொன்னகர’த்தைப் படித்தேன்.மைத்துனரும் மாமனுமாக என் தந்தையும் திரைக்கதையாசிரியர் எம்.எஸ்.சோலைமலையும் விளையாட்டுப் பருவத்தில் தமுக்கம் மைதானத்தில் வைத்து ’கடவுளும் கந்தசாமிப்பிள்ளை’யும் வெளிவந்த போதே படித்துச் சிலாகித்துக் கொண்டதைக் கூற ஆரம்பித்து அவர் பற்றியவற்றை விவரித்தார்கள்.புதுமைப்பித்தனைப் பார்ப்பதற்காகவே முதன்முதலில் சென்னை சென்றதையும் அவரை திருவல்லிக்கேணியில் சந்தித்த அனுபவத்தையும் பிரமாதமாக விவரிப்பார் சோலைமலை.

மதுரையில் நான் பாதிக்கதைகள் படித்திருந்த போது அவர் குடும்பத்துக்கு லாட்டரியில் லட்சம் விழுந்ததான செய்தியை பத்திரிக்கையில் படித்த ஞாபகம்.சென்னை வந்த பின் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க நேர்ந்த போது எங்கோ ராஜ அண்ணாமலைபுரத்தில் தான் அவர் குடும்பம் இருப்பதை அறிந்து அப்பகுதியிலே வாழ்வதை நிறைவாக நினைப்பேன்.70களில் மதுரையில் தாத்தா எழுதிய நாடகங்களில் நடித்து வந்த மனோரமா பிறகு எஸ்.எஸ்.ஆர். நாடகங்களின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற பின் தாத்தாவின் நாடகத்தில் நடிக்க திரும்ப வந்த போது புதுமைப்பித்தன் நினைவாக அந்த நாடகத்திற்கு தாத்தா “பொன்னகரம்” என்றே பெயரிட்டிருந்தார்.

பிறகு 90களில் புதுமைப்பித்தனின் ”கமலா கடிதங்கள்”  அவர் துணைவியார் இறந்த பிறகு படி எடுக்க வந்த இளையபாரதியால் அந்த மூலக்கடிதங்கள் என் வீட்டில் இரண்டு ஆண்டுகளில் தங்கி இருந்தது.

எனினும் புதுமைப்பித்தனின் துணைவியார் இறந்த போது தான் அவர் இல்லத்திற்கு முதன்முறையாக செல்லும்படி நேர்ந்தது. இதற்கு முன்பு அவர் மகளை கூட்டங்களில் சில முறை பார்த்துப் பேசியிருக்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் கேமராக்கள் வராத காலத்தில் வெளிநாட்டிலிருந்து  நான் வாங்கி வந்த காமராவுடன் அலைந்த நாட்கள் அவை. நண்பர் சாரங்கன்(கு.அழகிரிசாமியின் மகன்),ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் உடன் வர அவர் இல்லத்திற்கு புகைப்படம் எடுக்கச் சென்றேன். அன்று சாரங்கன் வீடியோ எடுக்க, நான் எடுத்த  புகைப்படங்களில் ஒன்றான புதுமைப்பித்தனின் நாற்காலியை ஆனந்த விகடனில் தொடர் எழுதிய ராமகிருஷ்ணனின் கட்டுரைக்கு இணைத்தேன். அன்று நான் அவரது பேனாவையும் வெற்றிலைச் செல்லத்தையும் இணைத்து புகைப்படம் எடுத்திருந்தேன். அதுவே இங்கு நீங்கள் காண்பது.