சிறார் இலக்கியம் உரையாடல் தொடங்கப்படுமா?
விஷ்ணுபுரம் சரவணன்

 

 

Saravanan

சிறு குழு அல்லது ஓர் இயக்கம் போன்றவை தனி நபரின் கலைமனத்திற்கு பலமூட்டுமா அல்லது பலவீனப் படுத்துமா என்பதில் பலருக்கும் முரண்பட்ட கருத்து நிலை இருக்கலாம். ஆனால் உரையாடல்கள் ஒருவர் பார்க்கும் கோணத்தை மாற்றி அமைக்கும் என்பது நிச்சயம். ஆரோக்கியமான உரையாடல்களின் மூலம் நாம் படித்த நூல்களை, மற்றொருவர் அந்நூலை எவ்விதம் அணுகியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும். இது தொடக்க நிலை எழுத்தாளருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இன்றைக்கு தமிழின் சிறந்த ஆக்கங்களைப் படைத்துவரும் பல எழுத்தாளர்களை இம்மாதிரியான உரையாடல்களே வழி நடத்தியிருக்கிறது/நடத்தியும் வருகிறது. அமைப்பு என்பது முன் வரையறுக்கப்பட்ட திட்டங்களால் நிறுவனமாகி விடும். எனவே அதை தவிர்த்துச் செல்லும் படைப்பாளிகளும் தொடக்கக் காலத்தில் ஏதேனும் ஓர் இலக்கிய இயக்கத்தோடு தன் பயணத்தைத் தொடங்கியவர்களாகவே இருப்பார்கள். கலை மனத்திற்கும் அமைப்புக்குமான தொடர்பு குறித்து விவரிப்பதல்ல என் நோக்கம். தமிழில், பெரியவர்களுக்கான இலக்கியத்தில் நுழைவதற்கு பலவித இயக்கங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் சிறார் இலக்கியத்தில் ஈடுபட விரும்புவர்களுக்கு இயக்கங்கள் ஏதுமில்லை. தொடக்கத்தில் கூறியதைப்போல தான் வாசிக்கும் முறை, தான் எழுதும்முறை சரிதானா என்று சோதித்துக் கொள்ளுவிதமான உரையாடல்கள் இங்கு நிகழ வாய்ப்பில்லை. சென்ற இதழில் கூறியதுபோல தமிழில் சிறார் இலக்கியத்தில் கிளாசிக்கான படைப்புகள் வராததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். குழந்தை எழுத்தாளர் சங்கம் என்று ஒன்றிருந்தது நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது.

குழந்தை எழுத்தாளர் சங்கம் 1950 ஆம் ஆண்டு, குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா தொடங்கப்பட்டது.  இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக, சிறார் கதைகளை எழுதிவரும், வாய்மொழியாகக் கூறப்பட்டு வந்த கதைகளைத் தொகுத்து வெளியிட்டவருமான வை.கோவிந்தன் தலைவராக இருந்தார். இந்தச் சங்கம் சிறார் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்தது. அவர்களுடைய படைப்புகள் புத்தகமாக வெளியாவதற்கு உதவிகரமாக இருந்தது. 600க்கும் மேற்பட்ட சிறார் படைப்புகள் இச்சங்கத்தின் முயற்சியால் புத்தகம் வடிவம் பெற்றிருக்கின்றன. குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் குழந்தை இலக்கிய மாநாடுகளை நடத்தியிருக்கின்றன. நிறைய இடங்களில் கதை சொல்லல் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கின்றனர். தம்பி சீனிவாசன் உள்ளிட்ட பலரின் கதைகளை நாடகமாக்கி பல இடங்களில் நாடக விழாக்கள் நடத்தியிருக்கின்றனர். புத்தக கண்காட்சிகள், புகைப்படக் கண்காட்சிகள், சிறு வெளியீடுகள் எனத் தொடர்ந்து ஏதோ ஒரு பணியைச் செய்துவந்திருக்கின்றனர்.  முதல் ஆறு மாநாடுகளை சென்னையிலும் ஏழாவது மாநாட்டை காரைக்குடியிலும் எட்டாவது மாநாடு கோவையிலும் நடந்திருக்கின்றன. அம்மாநாடுகளில் அப்போதைய அரசாங்கத்தில் பதவியில் இருப்பவர்களை அழைத்திருக்கிறார்கள். அவர்களின் உதவியோடு சில செயல்களையும் செய்திருக்கிறார்கள். இந்த ஆண்டு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது பெற்ற கவிஞர் செல்ல கணபதி, கல்லூரியில் படிக்கும்போது இறந்துவிட்ட தன் மகன் செல்லப்பன் பெயரில் ஆண்டுதோறும் சிறந்த நூலுக்கு பரிசுகள் வழங்கிவந்திருக்கிறார். கோவையைச் சேர்ந்த E.வெங்கடேசலுவும் தம் பெற்றோரின் நினைவாக பரிசுகள் வழங்கி வந்திருக்கிறார். இந்த பரிசுகளுக்கு கையெழுத்துப் பிரதிகளும் பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுத்த படைப்புகள் புத்தகமாக்கப் பட்டிருக்கின்றன.

குழந்தைகள் எழுத்தாளர் சங்கம் சார்பாக சிறார் இலக்கியத்தில் சிறப்பாக பங்களித்து வரும் படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தி.ஜ.ர, பெரியசாமி தூரன், அழ. வள்ளியப்பா, பூவண்ணன் உள்ளிட்டோர் அந்த விருதுகளைப் பெற்றிருக்கின்றனர். அதேபோல சிறந்த வெளியீடுகளைக் கொண்டுவரும் பதிப்பகங்களுக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் புத்தக அறிமுகக் கூட்டங்கள், நாட்டுப்புறக் குழந்தைப் பாடல்களைத் தொகுப்பது என இச்சங்கத்தின் பணிகளை விரித்துக்கூறத் தக்கனவாக இருக்கிறது. இவை பொதுவாக அமைப்புகள் செய்யக் கூடிய பணிகள்தான். குழந்தைகள் எழுத்தாளர் சங்கம் சில செயல்களை ஆவணமாக செய்திருக்கிறார்கள்.

1961-ல் குழந்தைகள் எழுத்தாளர்-யார்,எவர்? எனும் நூலை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்நூலில் 201 சிறார் எழுத்தாளார்களின் பெயர், அவர்கள் எழுதிய படைப்புகள் பற்றி அறிமுகத்தோடு வெளிவந்திருக்கிறது என்பது ஆச்சரியம் தருகிற தகவலாக இருக்கிறது. 1972-ல் இந்த நூலை இன்னும் விரிவாக்கும் பொறுப்பு ப.நா.பாலசுப்பிரமணியன், ஈ.எஸ், ஹரிஹரன் (ரேவதி)யிடமும்  ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் 370 சிறார் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களுடன் நூலை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழில் சிறார் இலக்கியங்கள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பதையும் சிறார் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளுடன் 1972 ஆம் நடந்த மாநாட்டில் Who’s who of Tamil Writers for Children எனும் ஆங்கில நூலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நூல்கள் இப்போது எங்கு, எவரிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை. சிலரிடம் விசாரித்தபோது கிடைக்கவில்லை. நூலகங்களின் தேட வேண்டும். 80கள் வரை நன்றாக இயங்கிய இச்சங்கம் 89-ல் அழ வள்ளியப்பா மறைவுக்கு பிறகு, அதன் செயல்பாடுகள் தேய்ந்து விட்டன.

அதன் மாநாடு மலர், அவர்களின் சிறார் இலக்கியம் பற்றிய வரையறை இவற்றை வைத்துப் பார்க்கும்போது சிறார் இலக்கியத்தினைப் பரவலாக எடுத்துச் செல்லும் முயற்சிக்கு கொடுத்த முக்கியத்துவம் சிறார் இலக்கியம் பற்றிய முன்முடிவற்ற உரையாடல்களை  நிகழ்த்தியதாக தெரியவில்லை. கல்வியாளர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்களை வைத்து குழந்தை இலக்கியப் பண்ணை என்ற பெயரில் நூல் திறனாய்வு கூட்டங்களை நடத்தினாலும் சர்வதேச வெளியில் எழுதப் பட்டிருந்த சிறார் இலக்கியம் பற்றி உரையாடல் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. அப்போது தமிழில் எழுதிக்கொண்டிருந்த தீவிர இலக்கியவாதிகளை மாநாடுகளில் அழைத்ததாக பதிவு இல்லை. நான் வாசித்தவரை இந்தச் சங்கம் பற்றி தீவிர இலக்கியவாதிகளின் கட்டுரைகளில் குறிப்பாகக்கூட வந்திருக்கவில்லை. இது அரசு நிர்வாகத்தை ஒட்டிய, அரசிடமிருந்து சில சலுகைகளைப் பெற்று சிறார் நூல்களை பரவாக்க முனைந்திருப்பதையே அவதானிக்க முடிகிறது.

400சிறார் எழுத்தாளர்கள் இருந்த தமிழ் இலக்கியச் சூழலில் இன்று 40பேர் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இவர்கள் தீவிர இலக்கியவாதிகளுடனோ அல்லது தீவிர இலக்கியவாதிகள்  இவர்களுடனோ உரையாடல்களைத் தொடங்கியிருந்தால் தமிழில் ‘கிளாசிக்’ சிறுவர் இலக்கியப் படைப்புகள் வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சங்கம் செயல்பட்ட ஆண்டுகளில், நீதி கதைகளையும் சில துப்பறியும் கதைகளையும் தாண்டிய பயணத்திற்கு சிறார் இலக்கியத்தை முன்நகர்த்தவில்லை. எளிமையான கதையாடல் என்பதை தாண்டி, புதிய கதை என்பதை நோக்கி நகரவில்லையே எனத் தோன்றுகிறது. இன்னும் சரியாக சொல்வதென்றால் தான் பெரியவர்கள் எனும் மனநிலையை கரைத்துக்கொண்டு எழுத முனைவதற்கான உரையாடல்கள் நடக்கவில்லை. துப்பறியும் கதைகள் வழியேயும் ஏதேனும் ஒன்றை கற்பித்துவிட வேண்டும் எனும் நோக்கம் முதன்மையாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்படியான முன் திட்டமிடல் இல்லாமல், கதை சொல்லும் போக்கு இல்லை. ஒருவேளை இதனாலும் மற்ற பிரிவு எழுத்தாளர்கள் இதில் ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கக் கூடும்.

சமீபத்தில் இலக்கியத் திறனாய்வு கூட்டம் ஒன்று ஒருங்கிணைங்கப்பட்டது. சிறுகதை, நாவலுக்கான் இலக்கியத் திறனாய்வு சந்திப்பில் பெண்ணியம், தலித்தியம், புகலிடம் என எல்லா பிரிவுகளிலும் நூல்கள் வகைப்பிரிக்கப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால் சிறார் நாவல், சிறார் சிறுகதை பற்றி எடுத்துக் கொள்ளவில்லை. இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதான புகார் கூறுவதற்காக சொல்லவில்லை. சிறார் இலக்கியத்தை ஓர் பிரிவாக பெரியவர்கள் இலக்கியத்தில் இருப்பவர்கள் (பெரும்பாண்மை) கருதுவதில்லை. தமிழில் சிறார் இலக்கியப் பிரிவில் என்னதான் நடக்கிறது என்றாவது ஒருவர் பேசியிருக்கலாம். சாகித்ய அகாடமியில் பாலபுரஸ்கார் விருது உருவாக்கிய பிறகுதான், நாளிதழ்களில் சிறார் இலக்கியம் பற்றி ஆண்டுக்கு ஒருநாள் செய்தியாவது வருகிறது. அப்போதும் இலக்கிய இதழ்கள் அதை கண்டுகொள்வதேயில்லை. குழந்தைகளை நாம் அவ்வளவு நேசிக்கிறோம். ஆனால் அவர்களுக்கான இலக்கியம் பற்றி அசட்டையாக இருக்கிறோம். இது என்னவிதமான லாஜிக். தொடர்ச்சியான உரையாடல்கள் எழுதும் மனநிலையைத் தக்க வைக்கும். உரையாடலே புதியனவற்றைத் தேடிச் செல்ல உந்தித் தள்ளும். உரையாடல்களே புறக்கணிப்புகளுக்கான வலி நிவாரணி. சிறார் இலக்கியப் படைப்பாளிகளுடன் சென்ற தலைமுறையில் நிகழாத உரையாடல் இப்போதேனும் நிகழுமா?