காமிக்ஸ்
வரதராஜன் ராஜுVaradharajan

 

 

Image 1

வழக்கை நாம் மேலெ உள்ள ஜார்ஜ் க்ரோசின் படத்தைப் பார்த்துக் கதை சொல்லுவதிலிருந்து ஆரம்பிக்கலாம்.

  1. கடலில் கப்பல்கள் நிற்கின்றன.
  2. இடதுபுறக் கட்டிடத்தில் கண்ணாடிச் சன்னல்கள் உடைந்திருக்க மேல்மாடியிலிருந்து தீப்புகை வருகிறது.
  3. மாடியிலுள்ள சன்னல் வழியே வெளியே தொங்கும் ஒரு பெண்ணின் தலைமுடியைப் பற்றிக்கொண்டிருக்கிறான் ஒருவன். தொங்கிக் கொண்டிருக்கும் அவள் கால்களை அகட்டியவாறு மூத்திரம் பெய்கிறாள்.
  4. நிலத்தில் ஒருவரை ஒருவர் ஊன்று கோல்களாலும், கோடரி போன்ற பிற கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கிக் கொள்கிறார்கள்.
  5. வலதுபுறமுள்ள தேவாலயத்தின் வாசலில் சிலுவையாலும் தடிகளாலும் ஒரு கும்பல் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறது
  6. ஒருவன் ஒரு பெண்ணை வல்லுறவு கொள்ள முனைகிறான்.
  7. இன்னொருவன் கூந்தல் தரையில் இழுபட நிர்வானமாய் ஒரு பெண்ணை இழுத்துச் செல்கிறான்.
  8. இடையில் நாய் ஒன்று செல்கிறது.
  9. எல்லாவற்றுக்கும் நடுவில் விளக்குக் கம்பத்தில் தூக்கில் தொங்குகிறான் ஒருவன்.
  10. தூரத்து மலைகளின் இடையே எழும் சூரியன் தனது கண்கள் கொண்டு இதையெல்லாம் காண்கிறான்.

நுண்ணுணர்வு கொண்ட எந்த வாசகனும் மேலே விவரிக்கப்பட்டதற்கும் கூடுதலாக அழகியல் மற்றும் தத்துவார்த்தமான கேள்விகளை எழுப்பி அதை விரித்துக் கொள்ளும் சாத்தியத்தை கொண்டுள்ள ’உன்மத்தக் கலவரம்’ (Riot of Insane 1915) என்ற தலைப்பிடப்பட்ட ஜெர்மானியக் கலைஞரான ஜார்ஜ் க்ரோசின் இந்தச் சித்திரம், காட்சிச் சித்தரிப்பில் மொழி சார்ந்த விவரணைகளின் போதாமையைக் காட்டும் ஒன்று. சித்திர நாவல் (Graphic Novel) சித்திரமும் எழுத்தும் இணைந்த ஒரு கூட்டுக் கலை. தனது தந்தையின் சுயசரிதை வழியாக இரண்டாம் உலகயுத்த கால யூத இனப்படுகொலையைச் சித்தரிக்கும் ’மவுஸ்’ (Maus) என்ற க்ராஃபிக் நாவலைப் படைத்தவரான ஆர்ட் ஸ்பீகல்மான் இதை ’சித்திரங்கள் வழியே எழுதுவது’ என்கிறார். காமிக்ஸ் தனித்துமிக்க ஒரு கலை வடிவமாக அங்கீகரிக்கப்பட்டு நாளாகிவிட்டது. மிகவும் இளைய கலைவடிவமான இதில் இதுவரை சாதிக்கப்பட்டிருப்பவற்றை வைத்துப் பார்த்தாலே இதன் எதிர்கால சாத்தியம் புரியும்.

2008 காலகட்டத்தில் பார்த்த மர்ஜானே சத்ரபியின் பெர்சிபோலிஸ் (Persepolis) என்ற அனிமேஷன் திரைப்படம் வழியாகவே நான் க்ராபிக் நாவல் எனும் சித்திர நாவல் வடிவத்துக்குள் மீண்டும் நுழைந்தேன். 2005 காலத்தில் அதே பெயரில் வெளிவந்த சத்ரபியின் சுயசரிதைச் சித்திர நாவலே பின் திரைப்படமாக்கப் பட்டது (எஸ். பாலச்சந்திரன் மொழிபெயர்ப்பில் விடியல் பதிப்பகம் இதை ­­வெளியிட்டிருக்கிறது). வழக்கமான காமிக்சின் சித்திரங்களிலிருந்து மாறுபட்ட சித்திரங்கள். நுண்ணிய வேலைப்பாடுகளோ (ரிப்போர்டர் ஜானியின் கதைகளில் போர்ஷே காரின் டயர் தடங்கள் கூடத் துல்லியமாக வரையப்பட்டிருக்கும்) அழகியல் ஆடம்பரம் கொண்ட சித்திர வேலைப்பாடுகளோ உணர்வு வெளிப்பாட்டுக்குத் தேவையில்லை என்று தோன்றிய தருணம் அது. கிட்டத்தட்ட ஹாலிவுட் தொழில் நுட்பத்தை வாய்பிளப்பதிலிருந்து மாறி தத்துவச் செறிவும் உணர்வாழமும் நிறைந்த வேறு பல நாட்டுத் திரைப்படங்களைக் கண்டுகொள்ள ஆரம்பித்த தருணத்திற்கு ஒப்பானது அது.

வெகுசனக் காமிக்ஸ் தொடர் சித்திரக்கதைகள். மாத நாவல்களைப் போல.   அதன் நாயகர்கள் பெரும்பாலும் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டு அதை சாகசத்துடன் வென்று மீள்வதாகக் ஒரு கதை விரியும். பெரும்பாலும் அவர்கள் புத்திசாலி துப்பறிவாளனாகவோ (ஜேம்ஸ் பாண்ட் வகையறா), ஒரு நகரத்தைக் கட்டிக்காப்பவனாகவோ (ஸ்பைடர்மேன், பேட்மேன்.,), நீட்சேவின் அதிமானுடனாகவோ (சூப்பர்மேன்) இருப்பார்கள். இது ஒரு பொதுமைப்படுத்தலே. ஹல்க் போன்ற வேறு வகைமைகளும் இருக்கின்றன.

Image 2

வெகுசனக் காமிக்ஸ்களின் மேல் உள்ள குற்றச்சாட்டு அவை பெரும்பாலும் தத்துவ அழகியலோ உணர்வு ஆழமோ அற்றவை என்பதே. பல்ப் எழுத்தின் நோக்கமும் அதுவல்ல. ஆனால் இதே வெகுசனக் கதாநாயகர்களை மையமாக வைத்து அவர்களது அகச் சிக்கல்களை ஓரளவுக்கேனும் வெளிப்படுத்திய ஆக்கங்களும் உள்ளன. ஆலன் மூரின் பேட்மேன் மீளுருவாக்கம் அதில் முக்கியமான ஒன்று. ஒழுங்கைக் குலைக்கும் கட்டற்ற சுதந்திரம் கொண்டவனாக ஜோக்கரையும் ஒழுங்கை காக்கும் பொறுப்பைச் சுமக்கும், எந் நேரத்திலும் அதிலிருந்து வழுவும் அபாயத்திலிருக்கும் அகச்சிக்கல் கொண்டவனாக பேட்மேனையும் த கில்லிங் ஜோக் (The killing Joke – Alan Moore) நாவலில் ஆலன் மூர் சித்தரித்தார். எளிய நோக்கம் கொண்ட காமிக்ஸ் அகச்சிக்கல்களைப் பிரதிபலிக்கும் ஆழம் கொண்ட க்ராபிக் நாவலாகப் பரிமாணம் கொள்ளும் இடம் அது (க்ரிஸ்டபர் நோலன் இயக்கத்தில் வந்த பேட்மேன் திரைப்படங்களின் மூலம் இதுவே). ஆலன் மூரின் வாட்ச்மென் (Watchmen) மற்றும் ஃப்ரம் ஹெல் (From Hell) ஆகியவையும் இதில் முக்கியமானவையே. நுட்பமான வேலைப்படுகளற்ற எளிய சித்திரங்களின் வழியே ஃப்ரம் ஹெல், லண்டன் நகரின் இருண்ட வேசைத் தெருக்களிலிருந்து மகாராணியின் அரண்மனை வரை ஊடாடும் ரகசியங்களின் ஊடாக ’ஜாக் த ரிப்பர்’ என்றழைக்கப்பட்ட ஒரு தொடர் கொலைகாரனின் கதையைப் பேசுகிறது. எழுத்துக்களை மீறிய ஒரு இருண்மையை இதில் சித்திரங்கள் சாத்தியமாக்குகின்றன.

சித்திர நாவல்களில் தொழிற்படும் சித்திரங்கள் வெகுசன மாதாந்திர காமிக்ஸ்களில் காணப்படுபவை போல அதி தொழில்நுட்பத் துல்லியம் கொண்டவையாக இருக்கத் தேவையில்லை. சித்திரம் வழிக் கதை சொல்பவரை தொழில் நுட்ப ஆயாசத்திலிருந்து க்ராஃபிக் நாவல் விடுவிக்கிறது. ஒரு கதை சொல்லி தனக்கென்று ஒரு சித்திர மொழியை கைக்கொள்ள அது அனுமதிக்கிறது. வெறும் மிருக மூஞ்சி (எலி, பூனை, பன்றி போன்றவை) சித்திரங்கள் கொண்டு ஆர்ட் ஸ்பீகல்மானால் யூத இனப்படுகொலையின் துயரத்தை உணர்வாழத்துடன் சித்தரிக்க முடிகிறது. இது எதார்த்த பாணி சித்திரங்கள் வழியாகக் கதை சொல்வதிலிருந்தும் கதை சொல்லியை விடுவிக்கிறது. ஒசாமு டெசுகாவின் மிகப் பெரிய சித்திர நாவலான புத்தாவில் இதைக் காணலாம். மரங்கள், மலைகள், கோட்டைகள், போன்ற புறப் பொருட்களை எதார்த்த அழகியலோடு சித்தரிக்கும் டெசுகா மனிதர்களைச் சுதந்திரமாக உலவ விடுகிறார்.

வரிசையாகத் தொகுக்கப்பட்ட சித்திரக் காட்சிகளின் தொகுப்பு என எளிதாகப் புரிந்துகொள்ளப்படும் சித்திர நாவல், சிக்கலான பக்க வடிவமைப்புச் சவால்களை எதிர்கொள்கிறது. பொதுவாகவே ஒரு பக்கத்தில் காணப்படும் சித்திரங்கள் சட்டக வடிவமைப்பில் தனியான ஒரு ஒரு ஒழுங்கைக் கொண்டிருக்கின்றன. கதை அடுத்த பக்கங்களில் தொடர்ந்தாலும் ஒரு பக்கத்தில் அமையும் சித்திரச் சட்டகங்களின் தொகுப்பு கிட்டத்தட்ட ஒரு ’சினிமா ஷாட்’ போல பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு ’ஷாட்’. டெசுகாவின் புத்தாவில் இதைக் காணலாம். ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு பாணியைக் கைக்கொள்கிறார்கள்.

தமிழில் காமிக்ஸ் என்பது இப்போது வரையிலும் மேற்கின் வெகுசன காமிக்சின் மொழிபெயர்ப்புகள்தான் (லயன் காமிக்சின் சமீபத்திய க்ராஃபிக் நாவல்கள் வெளியீடு ஒரு முக்கிய முயற்சி). ஹாலிவுட் டப்பிங் படங்கள் போல. இதுவரையிலும் தமிழில் சொல்லிகொள்ளும் படியான க்ராஃபிக் நாவல் ஆக்கங்கள் என ஏதும் இல்லை எனலாம். நீண்ட இலக்கியப் பாரம்பரியம் கொண்ட, தேர்ந்த ஓவியர்களைக் கொண்ட தமிழ் சமூகத்திலிந்து தமிழ் வாழ்வைச் சொல்லும் சித்திர நாவல் என்று ஒரு படைப்பும் வெளியாகவில்லை. பல்ப் வகைச் சித்திரக்கதைகள் சில வெகுசன இதழ்களால் தொடராக வெளியிடப்பட்டு வந்திருந்தாலும், ஒரு கதைசொல்லியின் கதையாகக் குறிப்பிடத்தக்க படைப்பு என ஏதும் இங்கே இல்லை. தீவிர இலக்கியச் செயல்பாடு ஒருவிதமான வெகுசன எதிர் நிலை கொண்டது (உண்மையில் வெகுசனம் வாழும் காலத்தை மீறியது). அதனாலேயே அது மேற்பரப்பில் அல்லாது தலைமறைவுக் காரியம் போலவே செயற்படும். மேற்கில் தீவிர க்ராஃபிக் நாவல் செயல்பாடுகள் (ராப், ஹிப் ஹாப் போன்றவையும் குறுங்குழுக்களால் தலைமறைவுச் செயல்பாடுகளாக நிகழ்த்தப் படுகின்றன) அப்படியே நிகழ்ந்தன. பழைய ஏற்பாட்டை (The Book of Genesis – 2009) சித்திரக் கதையாக வரைந்த, ராபர்ட் க்ரம்ப் (Robert Crumb) தனது காம இச்சை மிகுபுனைவுக் கதைகளை ’அண்டர்கிரவுண்டு’ காமிக்சாகவே வெளியிட்டார். தமிழில் இணையத்தில் (பாலியல் கதைத் தளங்களை விட்டுவிடுங்கள்) கூட அப்படி ஒரு செயல்பாடு இருக்கிறதா எனத் தெரியவில்லை.

தமிழில் மிகச் சிறிய, ஆனால் தீவிரமான ஒரு காமிக்ஸ் வாசகர் வட்டம் இருக்கிறது. தமிழில் இதுவரை வெளிவராத காமிக்ஸ்களைத் தரவிறக்கி மொழிபெயர்த்து இணையம் வழிப் பகிர்ந்து படிக்கும் அளவுக்குத் தீவிரமான ஒரு கூட்டம். அதே நேரம் தமிழில் காமிக்ஸ் விற்பனை அதிகரித்திருக்கிறதா என்பது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால், 90களுக்குப் பிறகான ஒரு தலைமுறை தமிழில் காமிக்ஸ் படிக்கிறதா என்பதே சந்தேகம்தான். அப்படித் தேவை விரிவைடையாத போது புத்தக வெளியீடு சாத்தியமில்லை. ஆக இனிமேல் நடக்கும் எந்த ஒரு தமிழ் க்ராஃபிக் நாவல் முயற்சியும் வெகுசன இதழ்கள் வழியே தான் சாத்தியம். தீவிர முயற்சிகள் இணையத்தில் குறுகிய வட்டத்திற்குள் நிகழலாம். இது இன்னும் இன்னும் தீவிரமான படைப்புகளை நோக்கி வாசகர்களைச் செலுத்தும் என்றே நம்புகிறேன்.

வரதராஜன் ராஜு : புனைகதைகள், வரலாறு மற்றும் தத்துவம் மீது ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். சித்திரக்கதையின் மீது தீராக் காதல். காமிக்ஸ் ஆகி வந்த வரலாறு மற்றும் அதன் எதிர்காலம் குறித்து மிகுந்த ஆர்வம். சமீபத்திய கல்குதிரை இதழில் ஆரோன் மெஸ்கினின் ’காமிக்சின் அழகியல்’ (Aron Meskin – Aesthetics of Comics) என்ற கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஆர்வம் உடையவர்.