நரன் கவிதைகள்Naran

ஓவியம்: அனந்த பத்மநாபன்

நாற்பது வயதிற்குள் எத்தனை பூஜ்யங்கள்

நரன் - நாற்பது.

பிறந்த ஆறாம் மாதத்தில் கட்டை விரலுக்குள்
தன் வாயை நுழைத்த சிறுமியவள் .
வலது கையை இடதாய் காட்டும் கண்ணாடியில்
முதன் முதலாய் 01 வயதில் தன்னை பார்த்தாள்
அப்போதது அவள் வயதை 10 எனக் காட்டியது .

6 வயதில் யோகா வகுப்பில் தலையை கீழே
ஊன்றி கண்ணாடியில் பார்த்தாள் -அது
அவள் வயதை 9 என காட்டியது.
28 வயதின் நேர் எதிர்புறம் தான்
56 வயது இருக்கிறதென
யாரோ சொன்னார்களென்று திரையை விலக்கி
பார்க்கட்டுமா? பார்க்கட்டுமாவென?
தன் அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

நாற்பது வயதிற்குள் எத்தனை பூஜ்யங்கள்
இருகின்றனவென்று கேட்டபடியே – ஒரு நாள்
நீருக்குள் குதித்தாள்.
நீருக்குள்ளிருந்து நிறைய பூஜ்யமாக
வந்து கொண்டே இருந்தது .
அதை எண்ணுவதற்கு அவள் கரையில்தான்
யாரையும்அமர்த்தவில்லையே .

40 வயதின் அடுத்த நாள்
ஏன் அவ்வளவு உப்பலாய்
நாற்றமடித்து கிடக்கிறது.


நீ கடந்து செல்லும் போது

நரன்-ரொட்டி கவிதை

நீ கடந்து செல்லும் போது
பசி
என்ற வார்த்தையை உச்சரித்து விட்டேன்
அதற்காகத்தானே
நடுநிசியில் கடையைத் திறந்து
கோதுமை மாவு சிப்பங்களின் எண்ணிக்கையையும் ,
எடையையும் பரிசோதித்தாய் நண்பனே..!
உன் கோதுமை மாவு , புளிக்க வைக்கும் ஈஸ்ட்,ரொட்டி துண்டுகள்
யாவும் பத்திரமாயிருக்கிறது நண்பனே.!
ஆனால் புதிதாய் வந்த ரொட்டி சுடுபவரின்
கோதுமை வயலையும் அதிலிருந்த வட்ட வடிவ கிணற்றையும்
யாரோ நள்ளிரவில் திருடியிருக்கிறார்கள்.
திருடியவனின் காலடித்தடம்
இந்த வெதுப்பகத்தில் தான் வந்து முடிகிறதாம்.
அதன் நினைவிலிருந்து மீளாதவனாய்
தோட்டத்தை போன்று செவ்வகதிலும்
கிணற்றைப் போன்று வட்ட வடிவத்திலும்
ரொட்டிகளாய் சுட்டு அடுக்குகிறானவன் .

ஆனால் ஏன் ?
நள்ளிரவில் யாருக்கும் தெரியாது
உன் கால் வடிவத்தையொத்த
ரொட்டிகளை நெருப்பிலேற்றிப் பழுக்கச் சுட்டு-அதை
ரகசியமாய் கடித்துண்பதில் பெருவிருப்பம் கொள்கிறானவன்.
தொட்டுக் கொள்ள ரெத்த நிறத்தில் தக்காளி ஜாஸ்வேறு ….


 

மரப்பட்டை நிற மேலாடையை விடுவிக்கும் சிறுமி

விடிகாலையின் கண்மாய் கரையில்
நின்று
தன் மரப்பட்டைநிற மேலாடையின்
பட்டன்களை ஒவ்வொன்றாக விடுவிப்பாள் சிறுமி.
அவள் உடம்பிலிருந்து நிறைய கருஞ்சாம்பல் நிற
பறவைகள் அப்போது வெளியேறிச் செல்லும்
இரவு சிறுமி பட்டன்களை துளைக்குள்
செருகும் முன் வேறு சில பறவைகளை
அவை உடனழைத்துக்கொண்டு உள்ளேறுகின்றன.
இதற்கிடைப்பட்ட நேரத்தில் சிறுமி
கண்மாய் நீரில் தன் மேலங்கியை அலசுவாள்.
பறவைகளின் எச்சங்கள் போக அலசுவாள்.

கண்மாயெல்லாம் ஒரு நாள்
கருஞ்சாம்பல் பறவைகள் செத்து மிதந்த பின்
நீரின் நடுவிலிருந்து ஒற்றை தாமரை நீருக்கு வெளியே
அது அவளின் தொப்புள் கொடியிலிருந்து கிளம்பி இருக்கக் கூடும்.
எப்போதாவது நீருக்குள்ளிருந்து துவைப்புக்கல் போன்றோ
தவளையின் சொர சொரப்பு முதுகு போன்றோ
ரெட்டை கறுப்பு நாகங்கள் ஜடையென
பின்னித் தெரியும்-நேற்று பார்த்தேன்
அவளின் தோழியை தொண்டு கிழவியாய்
கரையில் அமர்ந்து 89 என்று சொல்லி முடித்தாள்.
சிறுமியாய் இருக்கையில் நீரில் மூழ்கி
100 எண்ணும் வரை அமிழ்ந்திருக்கும்
விளையாட்டை விளையாட வந்தார்களாம்.
அது வருடங்களா ?

நீருக்குள்ளிருந்து
ரெட்டை வெள்ளை நாகங்கள்
ஜடையென பின்னித்தெரிகிறது .