சுகுமாரன் கவிதைகள்

ஓவியம்: அனந்த பத்மநாபன்

 

பதில் வேண்டாக் கேள்விகள்Sugumaran Photo

உன்னை
எதுவரை என்னால் காதலிக்க முடியும்?
உலகின் எல்லாக் கடிகாரங்களும்
ஒரே நேரத்தைக் காட்டும் வரையிலா?

உன்னை
என்றுவரை என்னால் காதலிக்க முடியும்?
பூமியில் எல்லா இடங்களிலும்பதில் வேண்டாக் கேள்விகள்
விடியலும் அந்தியும் ஒரேபோலக் காணும் வரையிலா?

உன்னை
எந்தத் தருணம்வரை என்னால் காதலிக்க முடியும்?
கிளையுதிர்ந்த பூ
சுழன்று இறங்கி மண்ணில் விழும் முன்பே
அந்தரத்தில் வாசனையாக மிஞ்சும்வரையிலா?

உன்னை
எந்த நொடிவரை என்னால் காதலிக்க முடியும்?
என்னுடனான உன் அன்பு
எல்லாவற்றினும் மீதான உன் காருண்யத்தின்
ஆகப் பெரிய துளி என்பதை மறவாத வரையிலா?

 


 

விசும்பின் துளி

ஒரு சிறு சுருக்கமில்லை
துளி மேகக் கறையில்லை
அபூர்வ நீலத்தில்
விரிந்திருந்தது விசும்பு

வானத்தைப் பார்த்தால்
வானம் போலில்லை
அப்பழுக்கற்ற நீலப் பிரகாசம்

உண்மையின் அச்சுறுத்தல்
நீலத்தின் ஊடே
கிழக்கிலிருந்து மேற்காக
ஒரு கரும் பறவை பறக்கிறது
அதன் கூவல்
நீலத்தைக் கொசுவிப் பின் தொடர்கிறது

இப்போது வானம்
வானத்தைப் போலிருக்கிறது.


ஆழல்

நீருக்குள்  அமிழ்வதும்
பெண்ணுக்குள் ஆழ்வதும் இரண்டல்ல;  ஒன்றே
அனுபவம் சாட்சி
எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ
அவ்வளவு அனிச்சையாகவேஆழல்

அமிழும்போதும் ஆழும்போதும்
அடைத்துக் கொள்கின்றன கண்கள்

இருளின் ஒளியிலேயே பார்த்து
உணர்கிறோம்
நீரில் நீர்மையையும்
பெண்ணில் பெண்மையையும்

பார்ப்பதில் பாதியும்
விளங்காப் புதிர்
உணர்வதில் பாதியும்
தெளியா ஊகம்

ஊகித்த புதிருக்கும்
புதிரான  ஊகத்துக்கும்
இடையில் மூழ்கும்போது
நம்மை இழக்கிறோம்
நீரோடு நீராக
பெண்ணோடு பெண்ணாக

நீர்க் காதலின் விசையிழுப்பில்
வளைந்து நீள்கிறோம்
நீரோட்டக் கைகளைப் பற்றிக் கொள்கிறோம்
குமிழிகளில் அருந்துகிறோம்
சுழிகளில் சுழல்கிறோம்
வளைவுகளில் புரள்கிறோம்
சரிவுகளில் வழிகிறோம்
ஊற்றுகளில் பீறிடுகிறோம்
தலைகவிழ்ந்து ஒடிகிறோம்
ஊகிக்க முடியாப் புதிர்ப் புனலில்
சுற்றிச்சுற்றிச் சுழன்றுசுழன்று வெள்ளமாகிறோம்

எனினும் ஒருபோதாவது
நீர் மேனியின் நிஜப் பரப்பை
நிதானமாகப் பார்த்தோமா?
துல்லியமாய் உணர்ந்தோமா?

அடுத்த முறை ஆகட்டும்
நீரில் ஒளிகரையும் உயிர்க்கூத்தைக் காண
அடையாக் கண்களுடன் ஆழலாம்


உலகின் உருவம்

பைத்தியம் ‘ஆ’னா
சக பைத்தியம் ‘ஆவன்னா’விடம் சொன்னது

‘உலகம் உருண்டையானது
எலுமிச்சம் பழம்போல’

பைத்தியம் ஆவன்னா
சக பைத்தியம் ஆனாவிடம் திருப்பிச் சொன்னது

‘உலகம் உருண்டைதான். சரிஉலகின் உருவம்
ஆனால் நீ சொல்லும்
எலுமிச்சம் பழம்போல அல்ல
தக்காளிப் பழம்போல’

பைத்தியங்கள் ஆனா ஆவன்னாவின்
சக பைத்தியம் ‘ஈ’னா சொன்னது

‘உலகம் உருண்டைதான்.சரி
ஆனால் நீங்கள் சொல்லும்
எலுமிச்சம் பழமோ
தக்காளிப் பழமோபோல அல்ல
சேனைக் கிழங்குபோல’

பைத்தியங்கள் ஆனாவும் ஆவன்னாவும்
ஈனாவை ஒப்புக் கொண்டன

‘உலகம் உருண்டைதான். சரி.
முண்டும் முடிச்சுமான பூமி
எலுமிச்சம்பழம் போலவோ
தக்காளிப் பழம்போலவோ
இருப்பதற்கில்லை’

பைத்தியங்கள் எனினும்
ஆனாவும்
ஆவன்னாவும்
ஈனாவும் சொல்வது ஒருவேளை
சரியாகவே இருக்கலாம்

ஏனெனில்
பைத்தியங்கள் பொய் சொல்வதில்லை.


காதல் கவிதை

உப்புக்குள் ஒளிந்திருக்கும்
ஓயாத அலைகளை எழுப்பி
சமுத்திரத்தை உண்டாக்குவது…

கல்லுக்குள் மறைந்திருக்கும்
திட சித்தத்தைச் சேர்த்து அடுக்கி
மலையைச் சமைப்பது…

எப்போதோ விழுங்கியும்
தொண்டையை விட்டு இன்னும் இறங்காத
விஷத்தை வடித்து அமிர்தத்தைத் திரட்டுவது…காதல் கவிதை

பெருமக்களே
பெண்ணைக் காதலிப்பதென்றால்
இவையெல்லாம் தான்.

மின்சார இஸ்திரிப் பெட்டி
சூடேறிவிட்டதா என்று
விரலில் எச்சில் தொட்டுப் பரிசோதிப்பதும்
இதில் சேர்த்திதான்.


கவிதை
ஒன்றும் செய்வதில்லை
சரி
கவிதையையும்
ஒன்றும் செய்வதற்கில்லை


ஈரம்

அறிவிப்பில்லாமல் வந்த கனமழையில்
இருண்டன புறங்கள்
சட்டென்று இரவானது பகல்

ஆங்காரக் காற்றில் அதிர்ந்து நடுங்கி
இலைகளை உதிர்த்ததுஈரம்
முற்றத்து  மரம்

அகால மழை அவசரமாக விடைபெற்றதும்
மீண்டது பகல்
திசைகள் பெருமூச்சு விட்டன

கிளையில் மிஞ்சிய
ஒரேயொரு தளிரை
ஈரம்போகத்  துவட்டிக் கொண்டிருக்கிறது
வெயில்.


வாழ்க நீ எம்மான்

அவரை எவராலும் தவிர்க்க முடிவதில்லை
அவராலும் கூட.

ஒரு நாளின் ஒரு நொடியிலாவது
அவர் இருந்துகொண்டே இருக்கிறார்
அல்லது
எல்லா நாளிலும் ஏதாவது நொடியில்

அவர்
ஓர் இடைநிலை
ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையில்
ஒளிந்திருக்கும் முடிவிலி

நாணயத்துக்கும் மதிப்புக்கும் இடையில் நிகழும் புழக்கம்
விருந்துக்கும் பட்டினிக்கும் இடையில் தவிக்கும் உதரம்
உடலுக்கும் உயிருக்கும் இடையில் நகரும் வெளிச்சம்
ஒளிக்கும் இருட்டுக்கும் இடையில் பதுங்கியிருக்கும் துலக்கம்
மகுடத்துக்கும் பிச்சைக் குவளைக்கும் இடையில் சொரியும் காருண்யம்
கண்ணீருக்கும் குருதிக்கும் இடையில் கசியும் நீர்மை
ஒப்பனைக்கும் அம்மணத்துக்கும் இடையில் தியானிக்கும் வார்த்தை
சொல்லுக்கும் மௌனத்துக்கும் இடையில் முரலும் அர்த்தம்
உண்மைக்கும் பொய்க்கும் இடையில் அலறும் மகா மௌனம்

அவரை எவராலும் துறக்க முடிவதில்லை
அவரது தோழர்களாலும்
அவரது பகைவர்களாலும்,
ஏன் அவராலேயும்.

அவரது சிக்கல்
அவர், அவரில் எல்லாரையும் பார்த்தது
அல்லது
அவரில் எல்லாரும் அவர்களையே பார்த்தது.

அவரது பெருஞ்சிக்கல்
அவர், அவரில் அவரைப் பாராதது

ஒரு நாளின் ஒரு நொடியிலாவது
தவிர்க்க முடியாமல்
எல்லாரும்  அவராக இருக்க நேர்கிறது

புழக்கத்தில் மதிப்பை
உதரத்தில் பசியை
வெளிச்சத்தில் உயிர்ப்பை
துலக்கத்தில் இருளை
கருணையில் மகுடத்தை
நீர்க்கசிவில் உப்பை
வார்த்தையில் நிர்வாணத்தை
அர்த்தத்தில் மௌனத்தை
மகா மௌனத்தில் உண்மையை
உணரும் முடிவற்ற நொடியில்
எல்லாரும் அவராக இருக்க நேர்கிறது

இருள் ஒளியாகும்
அந்த அருங்கணத்தில் எல்லாரும்
அரையாடை அணிந்த பொக்கை வாய்ச் சிரிப்பாகிறார்கள்.


எப்போதும் கடல்

எல்லாக் காலத்திலும் அமைதியாக அடங்கியிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் கொந்தளித்துக் குமுறுவதில்லை
எல்லாக் காலத்திலும் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் நிசப்தமாக முணுமுணுத்துக் கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் ஒளிசிதற அலைந்து கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் அந்தகாரத்தில் ஒளிந்திருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் மூழ்கடித்துக் கொல்வதில்லைஎப்போதும் கடல்
எல்லாக் காலத்திலும் உயிர்ப் பிச்சையளித்துக் கரையேற்றுவதில்லை
எல்லாக் காலத்திலும் கடலுக்குள் மட்டுமே கடலிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் கையளவுக் கடலொன்று
கடலில் இருப்பதுபோலவும்
கடலில் இல்லாதது போலவும்
கைக்குள் இருக்கிறது
எனினும்
எல்லாக் காலத்திலும் கடலிலும்
கடல் இருந்துகொண்டேயிருக்கிறது


நாளையின் பாடல்கள்

பேற்று நோவடங்கி உடல்பரப்பிக்  கிடக்கிறது நிலம்
கரு ஈன்ற அசதிப் பெருமூச்சாய் விம்மி அலைகிறது காற்று
உயிர்ப் பிசுக்கின் ஒளிர்வுடன்  ததும்புகிறது கானல்
கதிரிலிருந்து உதிர்ந்து மண்ணுக்குள் உறங்கும்
ஆதரவற்ற வித்துக்கள் திசையதிர விசும்புகின்றன
அவற்றைச் சமாதானம் செய்கின்றன
வரப்பில்  குந்தியமர்ந்திருக்கும் சில  பாடல்கள்.


தீதும் நன்றும்

முன்பு
அங்கே எல்லாம் இருந்தது
முன்பு எல்லாம் நன்மையாக இருந்தது
முன்பு நன்மையே எல்லாமாக இருந்தது

முன்பு
அங்கே நன்மை இருந்தது
முன்பு நன்மை எல்லாமாக இருந்தது
முன்பு எல்லாமே நன்மையாக இருந்தது

இப்போது
அங்கே எதுவும் இல்லை
இப்போது எதுவும் நன்மை இல்லை
இப்போது நன்மையாக எதுவும் இல்லை

இப்போது
அங்கே இல்லாமை இருக்கிறது
இப்போது இல்லாமையே நன்மையாக இருக்கிறது
இப்போது நன்மையே இல்லாமையாக இருக்கிறது.


வெறுப்பின் உச்சத்திலிருக்கிறேன்

வெறுப்பின் உச்சத்திலிருக்கிறேன்
நான்
வெறுப்பில் தகித்துக் கனன்றிருக்கிறது
இன்றைய நாள்

முன்னே வாராது ஒழியுங்கள்
வெறுப்பேற்றாமல் சும்மா விடுங்கள்
என்னை

யோசிக்கவே வெறுப்பைத் தரும்
ஓர் அபத்தக் கனவால்
கலைந்தே தொடங்கியது
வெறுக்கத்தக்க இந்த நாள்

கால அட்டவணையை முந்திக் கொண்டு விடிந்த
அவசரப் பொழுதும்
விட்டுவிட்டு ஒலித்த
பறவையின் சுருதிபிசகிய அன்றாடக் கூவலும்
குளியலறைக்குள் என்னை வேவுபார்த்து
சூள் கொட்டிய அசட்டுப் பல்லியும்
உணவு மேஜையில் அமரும் முன்பே
ஆறித் தொலைத்த பதார்த்தமும் பானமும்
கடன் நிலுவைக்குத் தாக்கீது செய்த
நச்சரிப்புத் தொலைபேசிக் குரலும்
இடையில் குறுக்கிட்டுக் கிடைத்த  பதிலால்
தொடர்பைத் துண்டித்தவளின் விஷக் கொஞ்சலும்
என்னைப் பிணையாக வைத்து வென்றவனின்
திக் விஜயக் குளம்பொலியும்…

எல்லாமும் எல்லாரும் வெறுப்பாகத்
தென்படும்  இந்த வேளைகெட்ட
வேளையில்
அன்பின் உறையிலிருந்து உருவிய வாளுடன்
வெறுப்புக்குரியவர்களாக
எதற்காகக் கண்முன் வந்து நிற்கிறீர்கள்?

என் சிரசைக் கொய்தெடுத்துப் போகவா?
ஆஹா, எத்தனை பேரதிர்ஷ்டம்.
ஆனால் இதுவல்ல அதற்கான நாள் – இன்று
வெறுப்பின் உச்சத்தில் காய்ந்து சிவந்திருக்கிறேன்
நல்லது,
அந்த வாளை விட்டுப்போங்கள்
வெறுப்பை வெறுத்திருக்கும்
நன்னாளின் சுபவேளையில் அழைத்து
கச்சிதக் குறைவின்றி வெட்டிச்சமர்ப்பிக்கிறேன்
கடலுறங்கும் என் தலையை.