Le glacio

சூறாவளி
லெ கிளெஸியோ

(பிரெஞ்சு நாவல் தமிழில் – சு. ஆ. வெங்கட சுப்புராய நாயகர்)
கடல், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட நான் அதிகம் விரும்புவது இதைத்தான்.  இளம்வயதிலிருந்தே பெரும்பான்மையான நேரத்தைக் கடலோடுதான் நான் கழித்திருக்கிறேன். இந்தத் தீவுக்கு நாங்கள் வந்தபோது முதன் முதலில் கிளிஞ்சல்கள்,நத்தைகள் விற்கும் உணவு விடுதிகளில் என் அம்மா வேலை செய்தாள். விடியற்காலையிலேயே அவள் வேலைக்குப் போய் விடுவாள். நான் யாரையும் தொந்தரவு செய்யாமலிருக்க என்னை ஒரு ஓரமாக தொட்டில் வண்டியில் போட்டு விடுவாள். சிமெண்ட் தரையை பிரஷால் சுத்தம் செய்வாள். தொட்டிகளையும் பெரியப் பாத்திரங்களையும் கழுவுவாள். முற்றத்தைப் பெருக்கிக் குப்பைகளை எரிப்பாள். அதன் பிறகு சமையலறையில் வேலை செய்யப் போய்விடுவாள். வெங்காயத்தை நறுக்குவது, நத்தைகளைக் கழுவுவது, சூப் காய்கறிகளைத் தயார் செய்வது, ‘சுஷீ’ செய்ய மீன்களை அரிவது எனப் பல வேலைகள் செய்வாள். எதுவும் பேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டே என் தொட்டில் வண்டியில் இருப்பேன். நான் மிகவும் Nayagarஅமைதியாக இருந்திருக்கிறேன்; வெளியே போய் விளையாட எனக்கு விருப்பமில்லை. அந்த உணவு விடுதியின் உரிமையாளரான பெண்மணி, “இந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று; எதைப் பார்த்தாலும் இவளுக்குப் பயம்” என்று சொல்வார். ஆனால், எல்லாவற்றிக்கும் நான் பயப்படுவதில்லை. என் அம்மாவுக்குப் பாதுகாப்பாக, அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய நான் அங்கேயே இருந்தேன். பிறகு ஒருநாள், இந்த ஆட்களுக்கு வேலைக்காரியாக இருந்து அம்மாவுக்கு அலுத்துப்போய்விட்டது. நத்தைகளைக் கொண்டுவரும் வயதானவர்களோடு ஒத்துப் போக, அவளும் ஒரு மீனவப் பெண்மணியாக மாறிப் போனாள்.

அன்றிலிருந்து நான் தினமும் கடற்கரைக்குப் போவேன். அம்மாவின் பை, அவளது காலணிகள், அவளுடைய முகமூடி ஆகியவற்றைத் தூக்கிக்கொண்டு அம்மாவோடு நடந்து செல்வேன். அங்கிருந்த பாறைகளின் மறைவில் கடலுக்கான உடைகளை அம்மா உடுத்திக் கொள்வாள். மூழ்குவதற்கான உடையை அணியத் தொடங்குவதற்கு முன் நிர்வாணமாக இருக்கும் அவளைப் பார்ப்பேன். அம்மா என்னைப் போல் குண்டாகவும் உயரமாகவும் இல்லை. மாறாகக் குள்ளமாகவும், ஒல்லியாகவும் இருந்தாள். அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. அவளது தேகம் வெளிறிப்போயிருந்தது. முகம் மட்டும் வெயிலில் காய்ந்து கருத்திருந்தது. அவளின் தேகத்தை மீறி வெளியே தெரியும் விலா எலும்புகள், அவளது மார்பகங்கள்; அவற்றின் காம்புகள் மிகவும் கருத்திருந்தன. காரணம், அவள் எனக்கு அதிக நாட்களுக்கு அதாவது ஐந்து அல்லது ஆறு வயது வரை தாய்ப்பால் ஊட்டினாளாம். அவளது வயிறு, முதுகு ஆகியவற்றின் தோல் வெள்ளையாக இருந்தன. வெயிலில் போய் நிற்காவிட்டாலும், என் தேகமோ ஏறக்குறைய கருத்துப்போயிருந்தது. இதனால்தான் பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்கள் நான் கருப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருநாள் என் அம்மாவிடம் “அப்பா ஒரு அமெரிக்கப் படை வீரர் என்றும், அவர் நம்மைக் கைவிட்டார் என்றும் பேசிக் கொள்கிறார்களே உண்மையா?” என்று கேட்டேன். என்னை அறைந்து விடுவதுபோல் அம்மா முறைத்துப் பார்த்தாள். “இப்பொழுது சொன்னதை இனிமேல் சொல்லவே கூடாது. கெட்ட விஷயங்களை என்னிடம் பேச உனக்கு உரிமை இல்லை’’ என்று சொன்னாள். மேலும் “நீ கேட்ட மோசமான விஷயங்களை மறுபடியும் சொன்னால் உன் மேலேயே நீ துப்பிக்கொள்வது போல் ஆகிவிடும்“ என்றும் சொன்னாள். ஆகவே, அதைப்பற்றி அவளிடம் அதன்பின் பேசியதில்லை. இருந்தாலும், என் அப்பாவைப் பற்றி உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஓயவில்லை.

நான் சிறுமியாக இருந்தபோது, பள்ளிக்கூடத்திற்குப் போனதில்லை. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அம்மா பயந்தாள். மேலும் எனக்கு அப்பா இல்லாததால் அவளுக்கு அவமானமாக இருந்தது என்றும் நினைக்கிறேன். நான் எப்பொழுதும் கரையோரம் உள்ள பாறைகளின் மேல் உட்கார்ந்திருப்பேன். அம்மா மீன் பிடிக்கும்பொழுது அவளுடைய உடைகளைப் பார்த்துக் கொள்வேன். அந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். துணியால் செய்த ஒருவிதக் கூண்டு ஒன்று வைத்திருந்தேன். கருங்கற்களில் அமர்ந்துகொண்டு கடலைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். அங்கே வேடிக்கையான மிருகங்களும் இருக்கும். பாறை இடுக்குகளிலிருந்து என்னைப் பார்க்க ஒருவித நத்தைகள் பொறுமையாக வெளியே வரும். அவை அசையாமல் வெயிலில் காத்திருக்கும். ஒரு சிறு அசைவில், அவற்றின் மறைவிடங்களைத் தேடி ஓடிப்போய் விடும். அங்கே கடற்புறாக்கள், நீர்க்காகங்கள் இவற்றோடு, ஒற்றைக் காலில் நிற்கும் சாம்பல், நீல நிறப் பறவைகளையும் பார்க்கலாம். அம்மா தம் பிளாஸ்டிக் உடையை அணிந்துகொண்டு அவளது கையுறைகள், காலணிகள் ஆகியவற்றைச் சரிபார்த்தப் பிறகு தண்ணீருக்குள் இறங்குவாள். அங்குப்போய் முகமூடியைப் போட்டுக்கொள்வாள். அகண்ட எல்லையில்லாக் கடலை நோக்கி அவள் நீந்திச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்படிப் போகும்போது கருப்பும், வெள்ளையுமாக இருக்கும் அவளது பாதுகாப்பு வளையத்தைப் பின்பக்கம் இழுத்தபடிப் போவாள். மீனவப் பெண்மணிகள் வெவ்வேறு நிறத்தில் பாதுகாப்பு வளையங்களை வைத்திருந்தனர். தூரத்தில் பேரலைகளின் நடுவில் போனதும் அவள் கடலுக்குள் மூழ்குவாள். அப்பொழுது அவள் அணிந்திருக்கும் நீல நிறக் காலணிகள், கடல் அலைகளுக்கு மேலே அடித்தபடி இருக்கும். பிறகு கால்கள் உள்ளே போய் முழுமையாக மறைந்து போவாள். கணக்கு வைத்துக் கொள்வதற்காக வினாடிகளை எண்ண நான் கற்றுக்கொண்டேன். அம்மா என்னிடம் “நூறு வரை எண்ணிக் கொண்டிரு, நான் கடல் அலைகளுக்கு மேலே எழும்பவில்லை என்றால் நீ போய் யாரையாவது உதவிக்குக் கூப்பிட வேண்டும்“ என்று சொல்லியிருந்தாள். ஆனால் அவள் ஒருமுறை கூட நூறு எண்ணும் வரை உள்ளே இருந்தது கிடையாது. அதிகம் போனால், முப்பது அல்லது நாற்பது நொடிகளுக்குள் மேலே வந்துவிடுவாள். அப்பொழுது அவள் சப்தம் செய்வாள். மீனவப் பெண்கள் எல்லோருமே சப்தம் செய்வார்கள். ஒவ்வொருவரும் கூவும் விதம் வித்தியாசமாக இருக்கும். அப்படிச் செய்வது மூச்சை இழுத்து சுவாசிப்பதற்கான ஒரு வழி. என் அம்மாவின் சப்தத்தை, அவளை நான் பார்க்க முடியாவிட்டாலும், தூரத்தில் இருந்தே என்னால் கண்டுபிடித்து விட முடியும். மற்ற சப்தங்கள், மற்றவர் போடும் கூச்சல்கள் இவற்றிற்கு இடையிலேயும் கண்டுபிடித்து விடுவேன். கேட்க அது ஒரு பறவையின் குரல் போல் இருக்கும். மிகவும் சப்தமாக இருக்கும். குரல் முடியும் போது மிகவும் மெல்லியதாகவும் முடியும். ரிரா…ஹூஹூராவுரா! என்று கூச்சலிடுவார். ‘‘ஏன் இதுபோன்ற சப்தத்தைத் தேர்ந்தெடுத்தாய்?’’ என்று அம்மாவிடம் கேட்டேன். அவள் சிரித்துவிட்டு, ‘எனக்குத் தெரியாது’ என்று பதில் சொன்னாள். முதன்முறையாக அவள் தண்ணீரில் இருந்து வெளியேறிய போது, அந்த சப்தம் இயல்பாக வந்தது என்று சொன்னாள். நான் பிறந்த போது நானும் அப்படித்தான் கத்தியதாக அவள் விளையாட்டாகச் சொன்னாள். என் அம்மா எல்லா நாட்களிலும் ஒரே இடத்தில் மூழ்கமாட்டாள். காற்று, அலைகள் இவை மட்டுமல்ல, மீனவப் பெண்கள் எடுக்கும் முடிவையும் பொறுத்து மூழ்கும் இடம் மாறும். தினமும் காலையில் எந்த இடத்தில் மூழ்குவது என்று அவர்கள் முடிவுசெய்வார்கள். ஏனெனில், புதிய மீன்கள் எங்குக் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். கடலின் ஆழத்தில் மீன்கள் அசையாமல் ஒட்டிக் கொண்டிருப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால், உண்மையில் அவை நிறைய இடத்திற்கு நகர்ந்தபடியே இருக்கும். தினமும் இரவில் தங்கள் இடத்தை மாற்றிக் கொள்ளும். காரணம், அவை உணவு தேடவோ அல்லது நட்சத்திர மீன்களால் தாக்கப்படுவதாலோ அப்படிச் செய்யும்; நட்சத்திர மீன்கள் எப்பொழுதுமே மீன்களின் எதிரிகள். அம்மா, சில நேரங்களில் அவற்றை அவருடைய பையில் பிடித்துக்கொண்டு வருவாள். பிறகு சாகட்டும் என்று வெயிலில் போட்டுவிடுவாள். மிகவும் அழகான நட்சத்திர மீன்களை நான் எடுத்து வைத்துக்கொள்வேன். அவற்றையும் ரோஜாநிற பவழப்பாறைக் கிளைகளையும் நினைவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கொடுத்துக் காசாக்குவதற்காக அப்படிச் செய்வேன்.

நான் பள்ளிக்கூடத்தில் படிக்க ஆரம்பித்ததும் அம்மாவோடு கடற்கரைக்குச் செல்வது நின்று போனது. எனக்கு அது மிகவும் சோகமாக இருந்தது. தொடக்கத்தில், பள்ளிக்கூடம் எனக்குப் பிடிக்கவில்லை என்று அவளிடம் சொன்னேன். அவளைப்போல் ஒரு மீனவப் பெண்ணாக ஆகவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் நான் படிக்க வேண்டும் என்றும், ஒரு பெரிய ஆளாக வரவேண்டும் என்றும் அம்மா என்னிடம் சொன்னாள். மீன் பிடிக்கும் பெண்ணாக ஆகக் கூடாது என்று சொன்னாள். ஏனெனில் அது ஒரு கடினமான வேலை. ஆனால் கோடைகாலத்தில் விடுமுறையின் போது என்னை அவளுடன் அழைத்துச் செல்வாள். நான் நிறைய டி-ஷர்ட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அணிந்துகொள்வேன். துளை போட்ட என்னுடைய பழைய ஜீன்ஸைப் போட்டுக் கொண்டு பிளாஸ்டிக் செருப்புகளை அணிந்துகொள்வேன். ஒரு முகமூடியைப் போட்டுக் கொண்டு கடலின் ஆழத்தைப் பார்க்க அவளோடு சேர்ந்து நீந்துவேன். ஆரம்பத்தில் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டுதான் நீந்தினேன். அப்பொழுது எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. மீன் அடுக்குகள், பாசிகள், நட்சத்திர மீன்கள் ஆகியவற்றைப் பார்த்திருக்கிறேன். அவற்றின் கருப்பு முட்கள் ஏதோ நடனமாடுவதைப் போல் அசைந்து கொண்டிருக்கும். மணலில் உராயும் ஓசையும் கேட்கும். சில நேரத்தில் கடல் பாசிகளுக்குக் கீழ் மீன்களின் மறைவிடத்தை அம்மா எனக்குக் காட்டினாள். கத்தியால் குத்தி எப்படி மீன்களைக் களைப்பது என்று கற்றுக்கொடுத்தாள். அவளைப் போலவே வலையால் பின்னப்பட்ட சாக்கு ஒன்றை நான் வைத்துக் கொள்வேன். எனக்குக் கிடைப்பவற்றை அதில் போட்டுக் கொள்வேன். என்னிடம் பிளாஸ்டிக் உடைகள் இல்லை. எனவே எனக்குச் சீக்கிரமாகக் குளிர ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில் என் கைகளை அம்மா பார்ப்பாள். என் தோல் வெளுப்பாக மாறியதைப் பார்த்ததும் கரைக்கு என்னை அழைத்து வந்துவிடுவாள். நான் ஒரு குளியல் துண்டைப் போர்த்திக்கொள்வேன். என் அம்மா மீண்டும் கடலில் நீந்திச் செல்வதைப் பார்த்தபடி இருப்பேன்.

நான் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது என் அம்மா எந்தத் திசையில் போய் மூழ்கி இருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது, வகுப்பறையை விட்டு வெளியே வந்ததும், கடலை நோக்கி ஓடுவேன்; கரை ஓரமாக நடந்து மீனவப் பெண்மணிகள் மத்தியில் என் அம்மா எங்கே இருக்கிறாள் என்று தேடிப் பார்ப்பேன். அவர்கள் போடும் கூச்சல்களைக் கேட்பேன். ‘ஹூஹூ…ரா..வுரா..’ என்ற அவளது சப்தத்தைக் கேட்டவுடன் அந்த இடத்தில்தான் இருக்கிறாள் என்பது எனக்குத் தெரிந்துவிடும். ஆனால் அவளைச் சில சமயம் கண்டுபிடிக்க முடியாமலும் போய் இருக்கிறது. கடலைப் பார்த்தபடியே நின்றிருப்பேன். கனத்த இதயத்துடன் பேரலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பேன். வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தால் அம்மா அங்கு இருப்பாள். அவள் அன்று கடலுக்கே போயிருக்கமாட்டாள். ஏனெனில், கடல் சீற்றமாக இருந்திருக்கும் அல்லது அவளுக்குச் சோர்வாக இருந்திருக்கும். அவளைப் பார்த்த நிம்மதியில் எனக்குச் சிரிப்பு வந்துவிடும். ஆனால் அவளிடம் நிச்சயமாக எதையும் சொல்லமாட்டேன். காரணம், என் பள்ளிக் கட்டணத்தையும, என் சாப்பாட்டையும் சமாளிக்கத்தான் இந்த வாழ்க்கையை நடத்துகிறாள்.

np

சில நேரங்களில் தன் டால்பினைப் பற்றி அம்மா என்னிடம் பேசுவாள். மீன் பிடிக்க அவள் ஆரம்பித்தபோது முதலில் அதைச் சந்தித்தாள். அடிக்கடி கரையோரத்தில் அம்மாவைப் பார்க்க அது வந்துபோகும். அதைப் பற்றி மிகவும் உற்சாகமாகப் பேசுவாள். குழந்தையைப்போல் சிரிப்பாள். அம்மாவுக்கு வெள்ளை நிறத்தில் அழகான பற்கள். அவள் சிரிக்கும்பொழுது, அவை அவளுக்கு மிகவும் இளமையான தோற்றத்தைத் தந்தன. என் பற்களோ பெரிதாகவும், விழுவதற்குத் தயாராக தோமினோ விளையாட்டுத் தாயக்காய்களைப்போலவும் குறுக்கு வாட்டத்தில் அமைந்திருக்கும். அம்மா மிகவும் அழகாக இருப்பாள். கடலில் மூழ்குவதற்காகக் கூந்தலைக் குட்டையாக வெட்டிக் கொண்டாள். அதனால் கருப்பு முடியாலான தலைக்கவசம் போல் அவளுக்கு அமைந்து விட்டன. கடல் நீரின் காரணமாக முடி கொஞ்சம் நீட்டிக் கொண்டிருக்கும். அவள் முடியைக் கழுவிவிட எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு நீளமான சுருட்டை முடி இருந்தது. ஜோ சொல்வதுபோல் என் அப்பா ஆப்பிரிக்கராக இருந்தால், அதன் காரணமாகக் கூட இருக்கலாம். அல்லது சீனரான என் தாத்தா காரணமாக இருக்கலாம். சீனர்களுக்குப் பெரும்பாலும் சுருட்டை முடி இருக்குமாம். இதை நான் எங்கே படித்தேன் என்று தெரியவில்லை. என் முடியை மிகவும் விரும்புவதாக அம்மா சொல்வாள். அதை நான் வெட்டிக்கொள்வதை அவள் விரும்புவதில்லை. வழக்கமாக அவள்தான் என் முடியைக் கழுவுவாள். பிறகு அதைத் தேங்காய் பாலால் துடைப்பாள். அப்பொழுதுதான் வெண்மையாக இருக்குமாம்.

கடற்கரைக்குப் தனியாகப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். பள்ளி முடிந்ததும் வீட்டுப் பாடம் செய்ய வீடு திரும்புவதற்குப் பதிலாக கடற்கரை வரை நடந்து போவேன். பெரிய கடற்கரைக்கு நான் போவேன். ஏனெனில் குளிர்காலத்தில் அது வெறிச்சோடி இருக்கும். குளிர்காலம் எனக்கு மிகவும் பிடிக்கும். கடல், பாறைகள், ஏன் பறவைகள் கூட, அனைத்தும் ஓய்வெடுப்பதாக உணர்வேன். குளிர்காலத்தில் தூரக் கடலில் இருள் விலகாமல் இருப்பதால் அம்மா காலையில் சீக்கிரமாகப் புறப்படமாட்டாள். கடலின் தரைப் பகுதியிலும், தூரத்தில் உள்ள அடிவானப் பகுதியிலும் ஒரே நேரத்தில் வெளிச்சம் வருவதில்லை. பாறைகள் இருக்கும் பகுதியில் அம்மாவுடன் போய் சேர்ந்து கொள்வேன். கடல் சாம்பல் நிறத்தில் இருக்கும். பேரலைகள் காற்றில் மழமழப்பாக்கப்பட்டு அவ்வளவாக நடுங்காமல் வரும். பார்ப்பதற்குக் குதிரை தோல்போல் இருக்கும். இதுபோன்ற நாட்களில் பெரும்பாலான மீனவப் பெண்கள் கடலுக்குப் போக மாட்டார்கள். அம்மா மட்டும் தயங்க மாட்டாள். இரட்டிப்பு அறுவடை அவளுக்குக் கிடைக்குமென்பது தெரியும். இத்தகைய நாட்களில் அறுபது முதல் எழுபது டாலர் வரை அவளால் சம்பாதிக்க முடியும். கிடைக்கும் மீன்களைக் குறிப்பாக அதிக மீன்கள் கிடைக்கும்போது உணவு விடுதிகள் வரை அவற்றைத் தூக்கிச் செல்ல உதவி செய்யும்படி என்னைக் கேட்பாள். காரணம், அவை மிகவும் கனமாக இருக்கும். அவள் வெகு தூரம் சென்று கடலில் மூழ்குவது கிடையாது. அதாவது துறைமுகத்தின் அருகிலோ, பாறைகளிடையோ, என் அம்மா கடலுக்குள் இறங்குவதை மீனவப் பெண்களின் குடிசையில் உட்கார்ந்தபடிப் பார்த்துக் கொண்டிருப்பேன். கடலுக்குள் மூழ்கும்போது அவளது கால்கள் அந்தரத்தில் நேராக இருக்கும். அழகான அவளது நீல நிறச் செருப்புகள் பிரகாசிக்கும். அதன் பிறகு, அவள் மேல் தண்ணீர் மூடிக் கொள்ளும் ; நான் எண்ண ஆரம்பித்து விடுவேன். நான் சிறுமியாக இருந்தபோது செய்தது போல் மிகவும் பொறுமையாக பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்று, பதினான்கு; மீண்டும் அவள் வெளியே தெரிவாள். தலையைத் திருப்பி ‘ஹாஹா…ராவுரா……’ என்று கத்துவாள். பதிலுக்கு நானும் குரல் கொடுப்பேன். திமிங்கலங்களைப் பற்றிய ஒரு படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அவளிடம் “நீங்கள், மீனவப் பெண்மணிகள் எல்லோரும் அப்படித்தான், திமிங்கிலங்களைப் போல் கத்துகிறீர்கள்” என்று சொன்னேன். நான் கூறியது அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. மீண்டும தன் டால்பினைப் பற்றிப் பேசினாள். அதிகாலையிலேயே அடிக்கடி வந்து அவளைப் பார்க்குமே அதைப் பற்றித்தான் ; என் அம்மா மட்டுமில்லை, அம்மாவின் தோழியான கந்தோ எனும் வயதான பெண்மணியும் அப்படித்தான். ஜப்பான் படை வீரருக்குப் பிறந்த அவளுக்கு, அவளுடைய அம்மா யார் என்று தெரியாதாம். அவளும் இப்படி ஒரு டால்பினோடு அடிக்கடி சந்தித்ததாகவும் அதனோடு அவளுக்குப் பேசத் தெரியும் என்று சொல்வாள். சில சமயம் விடியற்காலை அல்லது இரவு வருவதற்குச் சற்று முன்போ டால்பின் அவள் அருகில் வருமாம். கடலுக்குக் கீழ் இருந்தபடி சிறிய சப்தங்கள் எழுப்பி அதனிடம் அவள் பேசுவாளாம். வாயை மூடியபடியோ அதன் கைகளை அடித்தபடியோ அப்படிச் செய்வாளாம். டால்பினும் அவளிடம் நெருக்கமாக வருமாம். அதன் தோலை அவள் தடவிக் கொடுக்க முடியுமளவுக்கு நெருக்கமாக வருமாம். அந்தத் தோல் மிகவும் மழமழப்பாகவும் மென்மையாகவும் இருக்குமாம். அப்படித்தான் அவள் சொல்வாள். எனவே, நானும் இரவு நேரத்தில் கடல் மிகவும் அமைதியாக இருக்கும் போது அங்குப் போவேன். என் முகமூடியோடு நீந்திக் கொண்டிருப்பேன். நானும் ஒரு டால்பினைச் சந்தித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இதுவரை அது வரவில்லை. அம்மாவும் வயதான அந்தக் கந்தோயும்தான் அதைச் சந்தித்திருக்கிறார்கள். குறிப்பாகச் கந்தோவோடுதான் அது சகஜமாகப் பழகி இருக்கிறது. ஏனெனில் அவள் வயதானவளாக இருந்ததால் அவளிடம் அதற்குப் பயம் இல்லை. அதன் கண்கள் என்ன நிறத்தில் இருந்தது என்று கந்தோவிடம் கேட்டேன். அவள் யோசித்துப் பார்த்துவிட்டு “அட ! இது ஓரு வேடிக்கையான கேள்வி” என்று சொன்னாள். தனக்குத் தெரியாது என்றும், ஒரு வேளை அதன் கண்கள் நீலம் அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கலாம் என்றும் சொன்னாள். அம்மா இதுவரை அதை நெருக்கத்தில் பார்த்தது கிடையாது. அவள் அருகில் சில சமயம் வெறுமனே ஒரு நிழல் போலச் சென்றிருக்கிறது. அவ்வளவுதான். ஆனால் அதன் மொழியை அவள் கேட்டிருக்கிறாள். அவள் பக்கத்தில் நீந்தும்போது அது எழுப்பும் குதூகலமான சிறிய சப்தங்களை அவள் கேட்டிருக்கிறாள். அது ஒரு அற்புதமான விஷயமில்லையா? எனவேதான் நானும் ஒரு மீனவப் பெண்மணியாக ஆகப்போகிறேன்.

கடல் என்பது முழுக்க முழுக்கப் புதிர்களால் நிறைந்தது. ஆனால் அது எனக்கு அச்சத்தை உண்டாக்கவில்லை. அவ்வப்பொழுது யாராவது ஒருவரைக் கடல் விழுங்கிவிடும். ஒரு மீனவப் பெண்ணையோ மீன் பிடிப்பவரையோ அல்லது தட்டைப்பாறையில் கவனக்குறைவாக நின்றிருக்கும் சுற்றுலாப் பயணியையோ பேரலை இழுத்துக்கொள்ளும். பெரும்பாலான நேரத்தில் உடலைக் கடல் திருப்பிக் கொடுப்பதில்லை. இரவில் தங்கள் ஆடைகளைக் களைந்து அலைகளில் குளிப்பதற்காக சிமெண்ட் கற்களால் கட்டப்பட்ட அறையின் எதிரில் மீனவப் பெண்கள் கூடுவார்கள். அவர்களோடு உட்கார்ந்தபடியே அவர்களுக்குள் பேசிக் கொள்வதைக் கவனிப்பேன். எங்கள் தீவின் வட்டார மொழியில் அவர்கள் பேசுவார்கள். எனவே எல்லாவற்றையும் புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கும். அவர்கள் ஒருவிதமாக ராகம் போட்டுப் பேசுவது வேடிக்கையாக இருக்கும். கடலில் இருந்து வெளியேறும் போது கூப்பிட எழுப்பும் சப்தங்களை அவர்களால் மறக்க முடியவில்லை என்று தெரிகிறது. அவர்கள் பேசுவது கடலின் மொழி. அது நம்மொழிபோல் இருக்காது. அதில் கடலுக்கு அடியில் கேட்கும் சப்தங்கள், நீர்க்குமிழிகளின் முணுமுணுப்புகள். மணலின் உரசல்கள் பாறைமீது மோதிப் பேரலைகள் எழுப்பும் இரைச்சல்கள்; இவை எல்லாம் கலந்திருக்கும். அவர்கள் என்னை மிகவும் நேசித்தார்கள் என்று நினைக்கிறேன். ‘ஜூன்’ என்று என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள். நான் இந்த ஊரைச் சேர்ந்தவள் இல்லை என்பதும், நகரத்தில் பிறந்தவள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் என் அப்பாவைப் பற்றியோ, என் அம்மாவைப் பற்றியோ எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கமாட்டார்கள். அவர்கள் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்வார்கள். என் முதுகுக்குப் பின்னால் தவறாகப் பேசிக்கொள்வார்கள் என்பது நிச்சயமாகத் தெரியும். ஆனால் அது பரவாயில்லை. எல்லோருமே அதைச் செய்கிறார்கள். அந்தப் பெண்கள் வயதானவர்கள். அவர்களது பிள்ளைகள் தூரத்தில் வசிக்கிறார்கள். பெரிய நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். பல ஊர்களுக்குப் பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்பெண்கள் என்னை நேசிப்பதற்குக் காரணம் அவர்களுடைய பெண்களை நான் நினைவுபடுத்துவதுதான். வளர்ந்து பெரியவளான அவர்களது பெண்ணை ஏதாவது விசேஷத்திற்கோ அல்லது பிறந்த நாளைக்கோ என்று ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறைதான் அவர்கள் பார்த்து வந்தார்கள். அவர்களைவிட நான் பெரியவளாக இருந்தாலும் அப்பெண்கள் என்னை “என் மகளே” என்றும், “குழந்தை” என்றும் அழைப்பார்கள்.

 

இப்படி மீனவப் பெண்களுடன் நான் பொழுதைக் கழிப்பதை அம்மா அதிகம் விரும்புவதில்லை. அவர்களோடு நீந்தச் செல்லக் கூடாது என்று சொல்லிவிட்டாள். நானும் அவர்களைப் போல் கடலில் மூழ்கும் மீனவப் பெண்ணாக மாறிவிடுவேன் எனப் பயந்தாள். நான் பள்ளிக்கூடம் போய் நன்றாகப் படித்தால்தான் கல்லூரிக்குப் போகமுடியும் என்றும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றும் சொல்வாள். அவளால் அதையெல்லாம் செய்யமுடியாததற்கு நான்தான் காரணம். நானாவது ஒரு மருத்துவராக, வழக்கறிஞராக அல்லது பள்ளி ஆசிரியையாக, அதாவது ஒரு நிலையான வேலைக்குப் போகவேண்டும் என்று ஆசைப்பட்டாள். குறைந்தபட்சம் ஒரு அலுவலக ஊழியராகவாவது வரவேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரை இதுபோல் எந்த வேலைக்கும் போவதை நான் விரும்பவில்லை. தினமும் ஒரே இடத்துக்குப் போய், எளிதில் கோபப்படும் மோசமான ஒரு அதிகாரியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு, மீண்டும் இரவில் வீடு திரும்பித் தூங்குவது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடிப்பதெல்லாம் கடல் எனக்குக் கற்றுத்தரும் பாடம். வயதான பெண்கள் கடலை விட்டு வெளியேறிக் கூடாரத்தின் கீழ் ஒரு விளக்கைக் கொளுத்தி, அந்தி சாயும் நேரத்தில் அங்கிருக்கும் கருப்புப் பாறைக்கல்லின் மேல், கடலிலிருந்து கொண்டு வந்துள்ள பொக்கிஷங்களான மீன்கள், கிளிஞ்சல் வகைகள், நத்தைகள், கூர்மையான கருப்புநிறக் கொடுக்குகளுடன் நண்டுகள், நட்சத்திர மீன்கள், சிலந்தி மீன்கள் ஆகியவற்றைப் பரப்பும்போது நான் என்ன தெரிந்துக்கொள்கிறேனோ அதுதான் எனக்குப் பிடிக்கும். கடலுக்கு அடியில் ஓர் உலகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அது மிகவும் அழகான உலகம். அந்த உலகம் பூமியில் நாம் பார்க்கும் எல்லாவற்றையும் விட வித்தியாசமானதாகும். கடுமையானதாகவோ, வறட்சியானதாகவோ இருக்காது, தோலையும், கண்களையும் சித்திரவதை செய்யாது. அனைத்தும் மெதுவாகவும், மென்மையாகவும் வழுக்கிச் செல்லும் உலகம். கடலைப் பற்றி நிறையக் கதைகள் உண்டு. உதாரணமாக, ஒரு கடல் நாகத்தின் உதவியால் புலியிடம் இருந்து தப்பித்த கிழவியின் கதை. கடலில் பயணம் செய்பவர்களை விழுங்கிய பேய்களின் கதைகள். எல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லப்படும் கதைகள்; ஆனால் நான் கேட்க விரும்புவது இதுபோன்ற கதைகள் இல்லை. எனக்குப் பிடித்த கதையில், ஒரு கதவு திறந்ததும் அது வேறு உலகத்திற்குப் போய்விட வேண்டும். அங்கு எல்லாம் நீலமாகவும், ஒரே நேரத்தில் வெளிச்சமாகவும், இருட்டாகவும் வழுக்கும்படியும் உறுதியாகவும் இருக்கவேண்டும். ஜொலிக்கும் உலகம் அது. குளிர்ச்சியான அந்த உலகத்தில் படிகம் போன்ற மீன் கூட்டங்கள் வாழும். வித்தியாசமான சப்தங்கள் நிறைந்ததொரு உலகம். அவை மக்கள் பேசும் சப்தங்கள் அல்ல. சூழ்ச்சி, வஞ்சகத்திற்கு இடமில்லை. வெறுமனே கடலின் ரீங்காரம் மட்டுமே கேட்கும். அது உங்களைச் சுற்றி வளைத்து அழைத்துச் செல்லும். அந்த ஒலிக்குள் நீங்கள் போய்விட்ட பிறகு பூமிக்குத் திரும்ப உங்களுக்கு மனமே வராது.

(விரைவில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கும் நாவலின் ஒரு பகுதி)

சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (1963): புதுச்சேரியில் பிரஞ்சுப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பிரஞ்சு, தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம் அமைத்து வருபவர். நற்றினை பதிப்பில், கலகம் செய்யும் இடது கை, கடவுள் கற்ற பாடம் ஆகிய தலைப்புகளில், பிரஞ்சுக்கதைகளை மொழியாக்கம் செய்துள்ளவர். காலச்சுவடு பதிப்பில்,  ஹினெர் சலீமின் அப்பாவின் துப்பாக்கி எனும் பிரஞ்சு புதினத்தைத் தொடர்ந்து லெ கிளெஸியோவின் சூறாவளி (அடையாளம் தேடி அலையும் பெண் உள்ளிட்ட இரண்டு குறு நாவல்கள்) எனும் நூலை மொழிபெயர்த்துள்ளவர். குறுந்தொகையை பிரஞ்சு மொழியாக்கம் செய்துள்ளவர். ஐங்குறுநூறு பிரஞ்சு மொழியாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்.