வேனல்
கலாப்ரியா

ஓவியம்: அனந்த பத்மநாபன்

Kalapriya”ஆனித் தேரோட்டம் கொடியேறிட்டுல்லா, தேரோட்டம் வரதுக்குள்ள இந்த வேனல்ப்பந்தலையெல்லாம் பிரிச்சு வச்சிர வேண்டாமா முதலாளி, எங்கன அடுக்க,வீட்டுப் பொறவாசல்ல கொண்டு போய் போட்றட்டுமா,இல்லேன்னா இங்கய மேல தட்டட்டில ஏத்திருவோமா,’ லச்சுமணன் கேட்டுக் கொண்டிருந்தான், ரெண்டாம் திருநாளுக்கான காலைச் சப்பரம் கோயில் ‘கொடர வாசலை’ விட்டுக் கிளம்பிய வேட்டுச் சத்தம் மேல ரத வீதிக்குக் கேட்ட போது.” வேய் வெங்கு இன்னக்கி என்னவே, கர்ப்பக மரமும் வெள்ளித் தாமரையுமாவே,என்ன சப்பரம் வே.. வேய், வெங்கு என்னவே, ரதவீதியில எவ வே போறா, கோயிலுக்குப் போறவுகளைப் பார்க்கும் மும்முரத்தில இருக்கேரா….இல்லை பிடில் வாசிப்பா,  வேய் வெங்கு, வெங்க மட்டை…உம்மத் தாம்வே இன்னக்கி என்ன சப்பரம்.. சப்பரம் வரும்போது உடைக்க தேங்கா பழம் வேங்கி வச்சேரா…” என்று கடைமுன்னால் நிற்கும் லச்சுமணன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே கடை கணக்குப் பிள்ளையிடமும் பேசினார், ‘முதலாளி’ தெய்வநாயகம். ’இல்ல அண்ணாச்சி, ஆமா அண்ணாச்சி, வெள்ளிச் சப்பரந்தான், தேங்கா,பழம் வெத்தில பாக்கு வாங்கியாச்சு அண்ணாச்சி, நீங்க உண்டும்ன்னு சொன்னா ஒரு பன்னீர்ப்பாட்டில் மட்டும் வாங்கிருதேன்,’ படபடவெனவும் பதட்டத்துடனும் பொரிந்தார்,பஜாரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அசட்டையிலிருந்து மீண்ட கணக்குப் பிள்ளை. சரி சரி அதையும் வாங்கி அம்மாளுக்கு குளூர அபிஷேகம் பண்ணிர வேண்டியதுதானே, வாங்கிரும்..’ சொல்லிக்கொண்டே தெய்வநாயகம் என்கிற தெய்வு அண்ணாச்சி லட்சுமணனிடம் திரும்பினார். பந்தலை அப்படியே மேல இழுத்து சுவர்க் கொண்டியில கட்டிர வேண்டியதுதானப்பா. இந்தப் பந்தக் காலை மட்டும் எடுத்து கடைத் தட்டட்டில போட்ரு…  அதான் இப்ப கொண்டி மாட்டியாச்சுல்லா மறந்துட்டியோடே..” ’டே’யில் ஒரு பாந்தம் தொனித்தது.லட்சுமணன் தான் ஆஸ்தான வேலையாள். கொத்தனார் வேலையா, வெள்ளையடிக்கணுமா,  கூப்பிடு லட்சுமணனை. ’தோட்டத்தைச் சீர் படுத்தணுமே, ஒரே கொப்பும் கொழையுமால்ல கெடக்கு,வாய்க்கால்ப் படித்துறைக்கே போகமுடியலையே, லச்சுமணன் வந்தானா, நேத்தே சொல்லி விட்டுதே.’ அவளுக்கு பேர்காலம் இன்னக்கோ நாளைக்கோன்னு இருக்கே, பட்டாசலில் துடுப்புக் குழியைத் திறந்து போடாண்டாமா..ஒரு நடை உப்புத்தருசுக்குப் போய் லட்சுமணன்ட ஒரு தாக்கல் சொல்லீட்டு வந்திருதியா… புள்ளை பொறந்தப்புறம் ஆம்பளையாள் அடிக்கடி வீட்டுக்குள்ள போக வரமுடியுமா..இன்னா ஒரணா வாங்கிட்டுப் போய் வாடகை சைக்கிள் எடுத்துக்க, லச்சுமணன் இல்லேன்னா அங்கனக்குள்ள கூடை பின்னிக்கிட்டு அவன் அம்மா இருப்பா, அவ கிட்டு வெவரம் சொல்லீட்டு வா. அப்படியே அவளை,கோரோசனை, சாரண வேரு, கெருடக்கொடி இன்னும் என்னல்லாமோ மருந்து சொன்னா ஆச்சி அதைக் கொண்டாரச் சொல்லிரு…’ என்று கடையின் கடைசிச் சிப்பந்தியை அனுப்புவார்.கலாப்ரியா-2-நாவல் பகுதி ”எவ்வளவு குடுத்தியே வெங்கு அண்ணாச்சி எப்பவுமே சைக்கிளுக்கு ஒரணாவுக்கு மேல குடுக்காதிங்க அப்புறம் அவன் சைக்கிளை எடுத்துட்டு சுத்துவான்.பயலுக்கு அப்புறமா என்னத்தையும் கூடக் குறையக் குடுங்க.எதையும் வாங்கித் தின்னாலாவது வயித்துக்குப் பிரயோசனம் உண்டும். இப்படிப் பொடிப்பயலுக ஒர்த்தனாவது கடையில் நின்னாத்தான் ஆத்திராவசரத்துக்குஅனுப்ப முடியும்.” பழைய விஷயங்கள் தெய்வு அண்ணாச்சி மனதில் ஓடிக் கொண்டிருக்கையில் லச்சுமணன் கூப்பிட்டான்.,”அப்போ அப்படியே தூக்கி மச்சுக் கொண்டியில கட்டிருவோம், இந்தா எங்க தங்கையா அண்ணன் அங்கன ஆறுமுகம் பிள்ளை பாத்திரக் கடையில் நிப்பான், ஒரு இனவலுக்கு இருக்கட்டும் கூட்டீட்டு வந்திருதேன். கிளம்புனவனை நிறுத்தி,”யோவ் அண்ணாச்சி ஒரு சீட்டு குடுத்து அனுப்பும்,போத்தி ஓட்டல்ல ரெண்டு வாய் சாப்பிட்டுக்கிடுவான், ’சாப்பிட்டுட்டே வாடே லச்சுமணா.’

ஒன்னு ரெண்டு தரம் அவரை அண்ணாச்சி என்பதற்கும் அவரின் விசால மனசுக்கும் சேர்த்து வெங்கு அண்னாச்சி புளகாங்கிதம் அடைவார். இதுக்குத்தான், இல்லேன்னா பத்மவிலாஸ் ஐயர் கடையில கூப்டாங்க கந்த விலாஸ் கடையில கூப்பிட்டாங்க போயிருக்கலாம்,  இங்க கிடந்து மட்டையடிக்க வேண்டியிருக்கு…என்று நினைக்கும் போதே, ’ஆமா எப்ப பாத்தாலும் கரண்டைக் காலு கிட்ட சொறிஞ்சிகிட்டே இருக்கறதுக்கு ஒங்களை அஞ்சாறு பேரு வேலைக்கு கூப்பிடுதாக,’ என்று மனைவி சொல்வது மனசுக்குள் கேட்கும். உடம்பே குறுகி விடும். அதுவும் ராவுல குளிச்சு கிளிச்சு ரெண்டு மல்லியப்பூவை வச்சுகிட்டு வரும்போது பக்கத்தில போய்ட்டா எட்டு வீட்டு அக்காளும் அவ மூஞ்சிலெ வந்துருவாக, ‘தூரப் போங்க நீங்களும் ஒங்க சொறியும்ன்னுருவா’ அவளுக்கென்ன கல்லூர்ப் பிள்ளை காபி கிளப்புல ‘இட்லி மாவு அரைச்சுக் குடுக்கா பக்காவுக்கு ஓரணாவோ ஒன்றரையணாவோ குடுக்கான். எப்படியும் நாலு உரல் அரைச்சுருவா. மாசாமாசம் அரைக் கழஞ்சி தங்கம் சேத்துருதா. என்னமும் சட்னி சாம்பாருன்னு வேற கிளப்புல இருந்து கொண்டாரா புள்ளைக எல்லாம் அவ பக்கம். பல நினைவுகள் ஓடும் வேயன்னவுக்கு, இப்ப லச்சுமணன் வந்து நின்னான் நினைவில்.

கடைசியா லச்சுமணன் வந்தது,  துடுப்புக் குழி திறக்க. அவனைக் கூட்டி வந்த கடைப் பையன் வெங்குப்பிள்ளையான ’வேயன்னா’விடம் கேட்டான், ’துடுப்புக் குழின்னா என்ன அண்ணாச்சி.’ வீடுகளின் பட்டாசலில் ஒரு சுவரை ஒட்டி மூடப்பட்ட அங்கணாக் குழி ஒன்னு இருக்கும்டா.அதை மணலால் நிரப்பி லேசாக சின்னச் செங்கல் முட்டிகள் போட்டு பொய்ப்பூச்சு பூசி வச்சிருப்பாங்க. அதன் உள்ளே உள்ள மடை தெருவுக்கோ அல்லது வீட்டின் வெளியே உள்ள பெரிய குழியிலோ முடியும்.பிள்ளைப்பேறு நெருங்குது என்றால்,துடுப்புக் குழியின் லேசான மேல்த் தளத்தை கொத்தக் கரண்டியாலேயே கொத்தி எடுத்து விடமுடியும். அப்புறம் மணலை அள்ளினால்ப் போதும். ஆள் கிடைக்காத பட்சத்தில் வீட்டில் உள்ளவர்களே இந்த வேலையைச் செய்து விடலாம். பேறு காலமெல்லாம் அப்போது வீட்டில் மட்டும் தானே நடக்கும். மிட் வைஃப், அதான்  மருத்துவச்சி வீட்டுக்கு வருவா. பிள்ளை பெத்த பெண்கள் குளிக்க, வைக்க, வெளியே போக, குழந்தையைக் குளிப்பாட்டறதுக்கெல்லாம் இதுதாம்ல சௌகரியம். பதினாறாம் நாள் வீடு தொடும் விசேஷம் கழியும் வரை வெளியே போக முடியாதுல்லாலே. பட்டாசலே கதி. தண்ணீ கூட குடிக்க விட மாட்டாங்கலே,தண்ணி குடிச்சா வயிறு பழுத்துப் போகும்ன்னு சொல்லுவாக. அதற்குப் பதிலாக வெத்திலை நிறையப் போடச் சொல்லுவாக.கவுளி கவுளியாய் வெற்றிலையும், பொடியா இடிச்ச களிப்பாக்கும் சுண்ணாம்பும் தயாராக இருக்கும். பத்தியச் சாப்பாடு வேற.அப்புறம் பிரசவ மருந்து. அதற்கு சிவஞானத்து ஆச்சி லிஸ்டே வச்சிருப்பாக. பாவமாருக்கும் புள்ளைத் தாய்ச்சியப் பார்க்கையில்.காணாததுக்கு பிள்ளை பெத்தவயிற்றை வேற நீளத்துணியால் சுத்தி இறுகக் கட்டி வைத்திருப்பார்கள், வயிறு விட்டுப் போயிரக் கூடாது என்பதற்காக. குழந்தை பிறந்ததும் வெற்றிலையில் மடித்து  கோரோசனை கொடுப்பார்கள்.அது ரத்தப் போக்கினால் ஏற்படும் குளிர்ச்சியைப் போக்கி உடலை சூடாக்கும். சன்னி கின்னி எதுவும் வந்திராது.பசுவின் வயித்திலிருந்து எடுக்கப்படுவது கோரோசனை.  நல்ல கோரோசனைக்குச் சொல்லி வைத்திருப்பார்கள்,பசு அறுக்கும் இடத்திலிருந்து சொல்லி வாங்கி வைத்திருப்பாள் ஆச்சி. பெரும்பாலும் லச்சுமணனின் அம்மா கொண்டுகிட்டு வருவாள்.கடைகளிலும் கிடைக்கும். நீ என்னத்தலெ கண்டெ ”  நீளமாகப் பதில் சொன்னதை அவன் முழுசும் கேட்டானோ என்னவோ.வேயன்னா சலிச்சுக்கிட்டார்,” என்னலே செவுடன் காதில ஊதுன சங்கு மாதிரி நான் லெச்சர் அடிக்கேன் நீ என்னல செய்தே…”  “அண்ணாச்சி நான் கேக்கமுல்லா..”  என்பான் சிப்பந்தி.இப்ப அவன்ல்லாம் இல்லவே இல்லை. எங்கெயோ சிமிண்டு ஆபீஸுக்குப் போறேன்னு போனான். கொள்ளைக் காசாம்லா அங்க. யோசனை மும்முரத்தில் காலை அதிகமாகச் சொறிந்து விட்டார். தொலி உறிஞ்சு காந்தல் ஆரம்பித்தது.”ஒப்பன ஓளி இதுக்கு ஒரு மருந்து கெடையாதாப்பா… ரெண்டு காலிலயும் கரண்டைக்கு மேல என்னது, படை மாதிரி போகவே மாட்டேங்கே ச்சை … எப்பவாவது இவுக வேற பிடில் வாசிக்காதீரும்,” என்று சின்னப் பயலுக முன்னால் சொல்லீருதாக…”  அலுப்பில் ஒரு வருத்தமும் தொனித்தது.

பஜாரில் சீக்கிரம் திறக்கிற ஜவுளிக் கடைகளில் ஒன்று ’நாயகம் டெக்ஸ்’. பெரும்பாலும் காலை வியாபாரம் ஒரு அவசரகதியில் நடக்கும். அநேகமா துஷ்டி வீடுகளுக்கு வேண்டிய பரி வட்டம், மல், அல்வாந் துணி என்கிற சல்லடையான துணி, விலை குறைஞ்ச பட்டு,பாடையோடு சேர்த்துக் கட்ட துணி நாடா என்று வாங்க ஆட்கள் கடை எப்ப திறக்கும்ன்னு காத்திருப்பார்கள்.இது போக பொறந்த வீட்டுக் கோடி போட சேலைகளும் வாங்குவார்கள். சிலர் பாடையில் வச்சுக் கட்ட சின்னதா தலயணை வாங்கிப் போவார்கள். பெரிய ஜவுளிக் கடைகள் திறக்க நேரம் ஆகும். அங்கே போய் இந்த மாதிரிப் பொருட்களைக் கேட்கவே சங்கோஜமாக இருக்கும். தெய்வு அண்ணாச்சி இதை ஒரு உபகாரம் போலல்லா செய்யறாக, என்று சொல்லிக் கொள்வார்கள், கடைக்கு வருபவர்கள். அது போக தீபாவளி பொங்கல் பண்டிகைகளுக்கும், ஜவுளி எடுக்க கிராமத்து ஆட்கள் நிறைய வருவார்கள்.பெரிய கடைகளுக்குப் போக அவர்களுக்குத் தயக்கம்.   எதிர் வரிசையில் இரண்டு மூன்று கடை தள்ளி தெய்வு அண்ணாச்சியின் அண்ணன் திரவியத்தின் வாசனைப் பொருட்கள் கடையான ’ஆறுமுக விலாசம் ஸ்டோர்ஸ்’ என்கிற ஏ.வி ஸ்டோர்ஸ் வாசனைத் திரவியங்கள் கடை. அதுவும் ஏறத்தாழ சீக்கிரம் திறக்கக் கூடியதுதான்.அங்கே அரகஜா,புனுகு, அத்தர், மரிக்கொழுந்து செண்ட், கேப்டன் சந்தன ஃபேஸ்பவுடர்,துணிகளுக்கு இடையில் பீரோவில் போட்டு வைத்துக்கொள்ள ‘ஃப்ளவர் டஸ்ட்’பாக்கெட்,வெட்டி வேர் சோப், அரைச்ச சந்தனம், சந்தன விறகுச் சுள்ளி எல்லாம் கிடைக்கும். ஆனா யாரு வந்து இதையெல்லாம் வாங்குதாங்க.அவர் கடையில் சிரங்கு,ரத்தக் கட்டி, பருக்களுக்குப் போட ‘நெறி அரிசிப் பால்’என்று ஒரு களிம்பு பிரபலம்.அதை மட்டும் தேடி வந்து ஓரணாவுக்கும் அரையணாவுக்கும் வாங்குவாங்க. ’கைகண்ட மருந்துல்லா’ என்று யாரோ சொன்னதைக் கேட்டு அதைக்கூட வேயன்னா கால் ஊறலுக்குப் போட்டுப் பார்த்தார். கால் சொதசொதன்னு ஆனதுதான் மிச்சம்.  திரவியம் இதற்கு முன்னால் ஜவுளிக் கடைதான் வைத்திருந்தார்.அது நொடித்துப் போயிற்று. அண்ணன் கடைக்கு ’போய் வந்து இருந்த’ ஆசையில்தான் தெய்வு அண்ணாச்சியும் ஜவுளிக்கடை வைத்தார்.இது ஏதோ சுமாராக ஓடுகிறது.

லச்சுமணன் போனதும் கடைக்கு வந்திருந்த ஆட்களைக் கவனித்தார் தெய்வு.  வழக்கம் போல ’பெரிய விசேஷ’த்துக்கு துணி எடுப்பவர்கள்தான். அவர்களில் ஒருவர் தெய்வுப் பிள்ளையைப் பார்த்து வணக்கம் வைத்தார். அவர் கும்பிட்ட விதமே கணக்குப் பிள்ளைக்குப் புரிந்து விட்டது. “சரி,புள்ளிக்காரன் ஏதோ சகாயம் எதிர் பார்க்கான் அண்ணாச்சியிடம். அநேகமா கடன் சொன்னாலும் சொல்லிட்டுப் போயிருவான்.இவுகளுக்கும் சூட்டிகம் பத்தாதே.’சரி’ன்னு மண்டைய ஆட்டிருவாகளே…”என்று யோசிக்க ஆரம்பித்தார். கடை ஆரம்பித்ததிலிருந்து அவர் இருக்கிறார். அவர்தான் கடையில் எல்லாமும். ஆர்டர் கொடுப்பது. ஜவுளிக்கடை மகமைச் சத்திரத்தில் வந்து தங்கியிருக்கும் துணி வியாபாரிகளுக்கு கணக்கு செட்டில் பண்ணுவது, விலைப் பட்டி எழுதறது எல்லாம் அவர்தான். தெய்வுக்கு அவ்வளவாய் ஒன்றுமே வியாபாரம் பற்றித் தெரியாது. ஒவ்வொரு கடைக்கும் ஒரு ஒன்பது எழுத்து வார்த்தை இருக்கும். சில கடைகளில் பத்து எழுத்து வார்த்தை இருக்கும். வரிசைக் கிரமமா அதுக்கு எண்ணில் மதிப்பு. ஒன்பது எழுத்துன்னா சைபரை சைபராகவே போட்டுக் கொள்வார்கள். இந்தக் கடைக்கு, வெங்கு அண்ணாச்சி ’சந்தி விநாயகர் துணை”  என்று வைத்தார். முன்னால் இருந்த கடையில் ’நெல்லையப்பர் துணை.’ இப்படி வைப்பதில் ஒரு எழுத்து ஒரு தரம்தான் வர வேண்டும். ச,ந்,தி, வி,நா, ய, க, ர், து,ணை = 0,1,2,3,4,5,6,7,8,9 . துணியின் அடக்கவிலை  கஜம் 9 ரூபான்னா,துணி சுத்தியிருக்கிற அட்டையில் ‘ணை’, என்று எழுதியிருப்பார். அதற்கு மேலே 13 என்று எண்ணிலும் எழுதி இருப்பார். அதாவது, பேரம் பேசுபவர்களிடம் கஜம் 13 ரூவாதான் என்பார். அவர்கள்  13 லிருந்து குறைத்துக் கொண்டே 9 க்கு வந்தால்,”சரி, ஒரு எட்டணா கூட வச்சு ஒம்பதரையணான்னா சொல்லுங்க கிழிச்சிருவோம்.இதுக்குக் குறையா உங்களுக்கு திர்நெவேலி ஊர்ல எங்கயுமே கிடைக்காது,” என்று துணியை மடித்து அட்டத்தில் சொருகி விடுவார்.

அவருக்கு விலையெல்லாம் ‘தள பாடம்’. இதெல்லாம் புதிதாகச் சேர்பவர்களுக்கும். ஆளில்லாத நேரத்தில் முதலாளியே வேலை பார்க்க நேரிட்டாலும் தான்.”இப்ப இவன் கடன் சொன்னா என்ன செய்யறது வியாபாரம் நல்லா நடந்து ரொம்ப நாளாச்சு,” என்று அவர் யோசிக்கையில். அவன் முதலாளியிடம்.’’ஐயா இந்த காசித் தீர்த்தம் உங்கள்ட்டா கேட்டா கிடைக்கும்ன்னாகளே, இருக்குமாய்யா”  என்றான். ”நமக்கு எந்த ஊரு, ’செல்’லானவுக உங்களுக்கு என்ன வேணும்’ என்று கேட்டார். ”நமக்கு அத்தான் முறை, எனக்கு கல்லூர்ப் பக்கம், எனக்கு நிறைய செஞ்சிருக்காக ஐயா…”என்றார், வந்தவர். ”வெங்கு, கிரைப் வாட்டர் பாட்டிலில் கொஞ்சம் தீர்த்தமும், கன்யாகுமரி மணல் ஒரு தாளில்லயும் சுத்திக் குடுங்க” என்றார். கணக்குப் பிள்ளை, ’நிறைய செஞ்சிருக்காரு மச்சான்ன்னு சொல்லுதீக, சேலை இருக்கிறதிலேயே குறஞ்சதா எடுத்திருக்கீகளே,’ என்றார். “ சீக்கிரம் வேற சீலைகள் காமிங்க..பாக்கேம்” என்றார் வந்தவர். தெய்வுக்கு சந்தோஷம். மனுஷன் கில்லாடிதான் யாவாரத்தில. இவுக அய்யாவப் பத்தியும் அப்படித்தான் அண்ணாச்சி சொல்லுவாங்க, பெரிய பயலும் பெரிய ஜவுளிக் கடைலதான நிக்கான்,”  என்று நினைத்துக்  கொண்டார்.

 

அவர் மகன் வெ. நெல்லையப்பன் என்கிற ’வேனா நேனாவும்’ ஊரின் மிகப்பெரிய ஜவுளிக் கடையில  வேலை பார்க்கிறார்.வெங்குவிடம் முதலாளி அடிக்கடி, “‘குல வித்தை கல்லாமல் பாகம் படும்ன்னு..” ஒரு சொலவம் சொல்லுவாகல்லா, அதுக்கு ஏத்தாப்போல ஒம்ம மைனரு பெரிய கடையிலதான் வேலை பாக்கான், “ என்பார். ”கலாப்ரியா-நாவல் பகுதிஎன்னத்த வேலை பாக்கான், கருப்புச்சட்டைக் கச்சின்னான், இப்ப அண்ணாத்துரை கச்சிங்கான், அந்த வேலையத்தான் பாக்கான். என்னன்னுதான் விசுவம் பிள்ளை அவனை வச்சுக்கிடுதாகளோ தெரியலை, அம்மாக்காரி செல்லம், அம்மையும் மவனும் மாதிரியா இருக்காக ரெண்டு பேரும், செகண்ட் ஷோ சினிமாவுக்கு சேர்ந்து சேர்ந்துல்லா போறாக..சவங்க உருப்படவா” என்று சலித்துக் கொள்ளுவார். ’நீங்களும் போக வேண்டியதுதானே’ன்னு தெய்வு கேட்டா, ’அய்யா  நம்ம வியாவாரம் வேற அவன் கடையில வேற. எட்டு மணிக்கு கடையை அரைக் கதவு சாத்திட்டு இருப்பு சரிக் கட்ட ஆரம்பிச்சிருதாக. ஆயிரம் ரூவா யாவாரம்ன்னாலும் நாளைக்கு வாங்கன்னுருவாங்க. நம்ம சொல்லப்படுமா…ஒம்பது மணிக்கு ஒரு லைட்டை அணைச்சா எவனாவது வந்து ஒரு முழம் கும்பத்துணி வேணும் நாலுமுழம் மல்லு வேணும்ன்னு வந்து நிப்பான்..வியாவாரத்தை விட அய்யோ பாவம் அவனுக்கு என்ன அவசரமோம்பீக நீங்க…” சொல்லிக் கொண்டே போகும்போது முதலாளி முகம் சுருங்குவதைக் கண்டு பேச்சை மாற்றினார். ”வேட்டுச்சத்தம் பக்கதில் கேக்குது, இன்னா பீமன் வண்டி வேற கடைக்கிட்ட வந்துட்டு, மைனிய வரச்சொல்லி விடுவோம் அவுக வரவும் சப்பரம் வரவும் சரியா இருக்கும்.நான் கீழே நின்னு பாக்கேன்..ஏல வீட்ல போய் அம்மாட்ட சொல்லிட்டு வந்திரு, போகும் போது ஐய்யா குடையை எடுத்துட்டுப் போ.” மள மளவென்று சொல்லிக் கொண்டே கடையை விட்டு பஜாருக்குள் இறங்கினார்,மறக்காமல் வேட்டியைத் தளைய விட்டுக் கால்ப் புண்ணை மறைத்துக் கொண்டார்.

கடைப்பையன் குடையைக் கொடுத்துவிட்டு ஓடி வந்து வேயன்னா அருகில் வந்து நின்றான். ”ஏல கடைக்குள்ள போய் தேங்கா பழம்ல்லாம் எடுத்துட்டு வாலே.. அவுக கூடவே வந்தா என்ன, சொல்லிட்டு ஓடி வந்திட்ட என்னலே,” என்றார். “ஆமா அண்ணாச்சி  அவுக பக்கத்தில, கூடவே வர்றதுக்கே என்னமோ போல இருக்கு அண்ணாச்சி. என்னா செவப்பு அண்ணாச்சி..சினிமால எல்லாம் இப்படித்தான் இருப்பாகளாம்லா.. தெருல சின்னவன் பெரிய ஆளு வித்தியாசமில்லாம எல்லாப் பயலுகளும் அவுகளைத்தான் பாக்கான். ஆனா அவுக அப்படியே சிரிச்ச மானிக்கே வாராக… யாத்தாடி..”என்றான். அவனைப் பேச விடாமால் அடக்க நினைச்ச வேயன்னா, தன்னை மறந்து சிரித்து விட்டார். “ஏல,சாந்தா ஆச்சியை பத்து வருஷத்துக்கு முந்தி  பாத்திருக்கணும்ல..ம்ஹூம்..” ஏதோ சொல்ல வந்ததைப் பெருமூச்சோடு பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். தெய்வுவின் வீட்டம்மா சாந்தா தெருவுக்குள்ளிருந்து வந்து கடைக்குள் சென்றாள்.தெரு முனையில்தான் கடை. வீடு ஒரு ஐம்பது வீடு தள்ளி இருக்கும். தெருவின் கடைசியில் ஒரு வாய்க்கால் ஓடும். தெய்வுப் பிள்ளை வீட்டையொட்டியும் போகும் அந்த வாய்க்கால். ஒரு தோட்டம் கடந்து போனால் வீட்டுப் படித்துறை வந்து விடும் அழகாகக் கட்டி வைத்திருக்கிறார்கள் அந்தக் காலத்தில்.

பஜாரில் சில கடைகளில் மட்டுமே தேரார் வீதி வளங்காண சப்பரத்தில் வரும் நெல்லையப்பர் காந்திமதிக்கு தேங்காய் பழம் உடைப்பார்கள். தெய்வு கடை ஆரம்பித்ததிலிருந்து அவரும் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தார். அதற்கு முன்னால் சாந்தி ஆச்சி இரவு வீதி வலத்துக்கு வந்தால் அபூர்வம். இரவு வீதி வலத்தில் மட்டும் சாமி, அம்பாளுக்கு முன் நாதஸ்வரம் வாசித்துச் செல்வது உண்டு. வழக்கமாக பஜாரில் இணையும் தெரு முனைகளில் சற்று நேரம் நின்று ஒரு முழுக் கீர்த்தனமோ பாடலோ வாசிப்பார்கள். ஒரு வருடம் வந்த பிரபல வித்துவான் இந்தத் தெரு முனையில் நின்று இரண்டு மூன்று கீர்த்தனைகள் வாசித்தாராம். அது காந்திமதிக்காகவா சாந்தா ஆச்சிக்காகவா என்று (அப்போது ’சாந்தா’ மட்டும்தான் பேர் . ஆச்சி என்பது முதலாளியம்மாவான பின் சேர்ந்து கொண்ட விளி.)  ஊரே கேலி பேசியதால். சாந்தா ஆச்சி அப்புறம் வருவதில்லையாம்.இப்ப காலையில் கடைவாசலில் கொஞ்சமும் ரத வீதியில் கொஞ்சமுமாக, மாப்பிள்ளையோடு நின்று கும்பிட்டு விட்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு போய் விடுவாள். இப்பக் கூட சிலர்,  ”பாருங்க ஒரு நாள் நெல்லையப்பர் புட்டாரத்தியை விட்டுட்டு காந்திமதியைப் பிடிச்ச மாதிரி,-அது ஒரு நாடோடிப் புனைவு- இந்த அம்மா பின்னால இறங்கி வந்திருவார்,” என்பார்கள். இங்கே கேலிக்கு யாரும் தப்ப முடியாது. அப்படி அருமையான ஊர். சாந்தா ஆச்சி எளிய பட்டுப் புடவையில் சின்ன அலங்காரங்களுடன், அவ்வளவு அடர்த்தியும் நீளமும் கருமையுமான தலை முடியுடன் கண் மூடி சாமி கும்பிடுகையில் பல பேர் அவளைத்தான் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தெய்வு முதலாளி muமுகத்தில், நீங்கள் தீயைக் கும்பிடுகிறீர்கள், எனக்கு என்ன கவலை என்ற மாதிரி  ஒரு தெளிவான அமைதி. வேயன்னா அதை இன்றும் பார்த்தார். அதே சந்தேகம் எழுந்தது. இவர் யார் பாம்பா பழுதையா? தாண்டலாமா மிதிக்கலாமா ? பத்து வருடத்திற்கும் மேலான சந்தேகம்.இவள் யார். இப்படி ஊரே திகைக்கிற மாதிரியா இவள் தெய்வநாயகத்தின் வாழ்க்கையில் நுழையும் போது இருந்தாள். அதற்குள் சாமி கடையைக் கடந்து போயிருந்தது. தென் மேற்குப் பருவக் காற்று ஆரியங்காவுக் கணவாயின் மழையை, குற்றாலத்தில் வழிய விட்டது போக, தேய்ந்த மிச்சத்தை சப்பரம் கடந்து போகும் ரதவீதியில் பன்னீர் போல தெளித்துக் கொண்டிருந்தது. கடைக்குள் அவள் அமர்ந்திருந்தாள்.உள்ளே போக வேயன்னாவுக்கு என்னவோ போல் இருந்தது. கடைப்பையனையும் காணும், வண்டி எதுவும் அழைத்து வரப் போயிருப்பானோ.  அதைக் கூடக் கவனிக்காமலா இருந்தோம். ஏதோ வெட்கமாக இருந்தது ”ஒரு காப்பி குடிச்சுட்டு வாரேன், தம்பி என்று தெய்வு அண்ணாச்சியிடம் சொன்னபடி நகர்ந்தார், ஆனால் கைகள் சாந்தா ஆச்சி பக்கமாய்க் குவிந்து வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தது, ’இருங்க தாயி வாரேன்,’ என்பது போல.

 

 

2

வேயன்னா அப்படியே தெக்க பாக்க நடந்தார். போத்தி ஓட்டலில் போய்க் கால் தானாக நிற்கும் வரை ஞாவகம் பூராவும் சாந்தா ஆச்சி பத்தித்தான்.

தெய்வு அப்ப நாடகக் கிறுக்கு புடிச்சுல்லா அலைஞ்சார். தன் தோள் மட்டப் பயலுக கூடச் சேர்ந்து கிட்டு நாடகம் பாக்கறது நாடகம் எழுதி தாங்களே போடறதுன்னு ஒரு குரூப்பே இருந்திருக்கு. புதுக்குளம் பண்ணையார் என்னவோ ஐயரும்ப்பாகளே அவர் பையன்ல்லாம் இதில சேக்காளி. ஆமா துட்டுக்காரங்க அவங்களுக்குள்ளதான ஒன்னு சேருவாங்க.அப்ப நாடகத்துல நடிக்க வந்த பொண்ணுதான் சாந்தா. மலையாளத்துப் புள்ளைம்பாங்க, இல்லை செங்கோட்டை கிட்ட மேக்கரையோ வடகரையோ என்னவோ ஒரு ஊரும்பாங்க. அவ அப்பா மருந்து மாயமெல்லம் தெரிஞ்சவரு,தையல் வேலையும் பாப்பாருன்னு சொன்னாங்க… என்னவோ வரும்போது வத்தலும் தொத்தலுமாத்தான் வந்தாளாம்.உடம்பிலயே தலை முடிதான் அதிகக் கனம்ன்னு சொல்லுவாங்க.  யாரிடமோ பேசிப்பேசி சலித்த கதையை இப்ப தனக்குள்ளேயே பேசிக் கொண்டு நடந்தார். ஓட்டல் வந்து விட்டது. ‘அன்னா அவுக, திரவியம் சேக்காளி ஆடியபாதம் நிக்காகல்லா,கொட்டகை வீட்டுக்கு அடுத்த வீடு.. அவுக சொன்ன கதைதான் அம்புட்டும்’

“என்னய்யா வெங்கடாசலம், ஒமக்குள்ளயே பேசிட்டு வாரீங்க, வீட்டு நொம்பலமா, இல்லை கடையில என்னமும் சடவா, தெய்வு நல்ல புள்ளையாச்சே ஒத்த மரியாதை கொறையாதே…,” வினவினார் ஆடியபாதம். “சேச்செ அதெல்லாம் ஒன்னும் கெடையாது. நீங்க சொன்னாப்புல அவ்வோ உங்க சினேகிதரு தம்பி, தங்கமானவுகள்ளா..சும்மாதான் தாகமாருந்துது ஒரு மடக்கு காபி குடிக்கலாம்ன்னு சொல்லிட்டு வந்தேன். ” உமக்கு என்ன தாகம்ன்னா காப்பில்லா கெடைக்கும் எங்களை மாதிரி தண்ணியவா குடிக்கணும்,” என்று சிரித்தார் ஆடியபாதம். ‘நீங்க வேற பட்டறையில யாரு நிக்கா ராஜா போத்தி இல்லேல்லா… அவருன்னா வந்தமா போனமான்னு இருக்கணும்ன்னு நெனைப்பாரு..” என்றார் வேயன்னா. அந்தப் பதினோரு மணி நேரப் பகலில் ஓட்டலில் கூட்டம் இருக்காது.அநேகமா காஃபியும் லெமன், ஆரஞ்சு கிரஷ் மாதிரி குளிர் பானம் மட்டுமே இருக்கும். 12 மணி ஆனா உருளைக்கிழங்கு போண்டா போடுவாங்க. சாயந்தர பரபரப்பு ஸ்பெஷல் ஸ்வீட் காரத்தோட மூணு மூணரைக்கு ஆரம்பிக்கும். காலையில் அஞ்சரை மணிக்கு ரவா தோசை, இட்லி, கிழங்கு வடை வியாபாரம். போத்தி கெட்டிக்கார ஆள். எல்லாப் பலகாரத்தையும் எப்பவும் தட்டுப்பாடாவே வச்சிருப்பாரு. அப்பத்தான் அதும் பேர்ல தேட்டமிருக்கும்ன்னு சொல்லுவாங்க. காலைல ஏழு மணி தாண்டிவிட்டால் ரவா தோசை இருக்காது. அதே  மாதிரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்வீட், காரம் ஸ்பெஷல். நிறையப் போட்டு அடுக்க மாட்டாரு. ஆறு மணிக்குள்ள ஸ்வீட் காலியாகிரும். இன்னக்கி திங்களா அப்ப ஸ்பெஷல் ’பன்னீர் லட்டு’. இன்னக்கி மிஸ் பண்ணிட்டா அடுத்த திங்கக் கிழமைதான் போடுவாரு.

வேயன்னாவுக்கு எப்ப போனாலும் ஒரு காப்பி ஃப்ரீ. அது ஒரு தனீக்கதை. ஒரு நாளைக்கி வேயன்னா சாயந்தரம் கருக்கலில் ஏழு மணிக்கு  ஒட்டலுக்கு வந்திருக்காரு. அப்போ கூட்டமே இருக்காது, எல்லாம் காலியாகி, சாப்பிட ரவா உப்புமா மட்டும்தான் இருக்கும். ’என்னன்னுதான் இவ்வளவு பூவா உப்புமா கிண்டுதாங்களோன்னு, சுடசுட உப்புமாவை சீனியைத் தொட்டு ஒரு வாய் வச்சிருக்காரு.. என்னவோ வாயில நற நறன்னு தட்டுப் படவும் கையிலேயே துப்பிப் பார்த்தா சரியான மொளகாத்தப்பாச்சா…. இவரு திரு திருன்னு முழிக்கிறதை பெரிய முதலாளி ராஜா போத்தி பாத்ததும், பவ்யமா பட்டறையை விட்டு இறங்கி வந்து என்னன்னு விசாரிச்சிருக்காரு.இவருக்கு சன்னக் கோவம். ‘ எங்க சுத்தம் வருமா ஒங்க ஆளுங்க கிளப்புக் கடையிலன்னு… பீத்திக்குவேரே, பாத்தேரா வே போத்தி, பாச்சாவைப் போட்டு உப்புமா கிண்டியிருக்கிறதை’ன்னு லேசா குரலை உசத்திருக்காரு. ”இங்க பாருங்க என்னவோ மிஷ்டேக் நடந்திருக்கு, தப்பு ஒப்புக் கொள்ளு, அது அது மன்னிக்கணும், கண்டிப்பா விசாரிக்கிறேன், நீங்க பெரியவா யார்ட்டயும் ஸொல்லிராதீங்கோ… எப்ப வேணும்ன்னாலும் நீங்க வந்து போலாம் சாப்பிடலாம்..” என்று உப்புமாவை இலையோடு எடுத்துட்டு உள்ளே போய் காஃபியோட வந்து சமாதானப் படுத்தினாராம்.  சாப்பிட வருகிறவர்களிடம் கூட அதுவரை அப்படி தாட் பூட் ன்னு அதிகாரம் செய்பவர், எப்படி அடங்கிப் போயிட்டாருன்னு கடையில வேலை பாக்கிற உள்ளூர் ஐயருங்களுக்கெல்லாம் ஒரே கள்ளக் கொண்டாட்டமாம். ‘வேயன்னா   உம்ம பாட்டுக்கு வாரும், சாப்பிடும் காப்பியக் குடியும் போய்க்கிட்டே இரும்” என்று குசுகுசுத்தார்களாம். வேயன்னா ஓசியில என்ன எழவு காப்பி வேண்டிக் கெடக்குன்னு சொன்னதும் அவருக்கு ஒரு சிட்டை நோட்டுப் போட்டு அதில பற்று வரவு எழுதிக்குவாரு போத்தி. ஆனா பற்றுதான் இருக்கும் வரவை அவரே செய்துக்குவாரு. இது சிலருக்கு லேசாத் தெரியும். முக்கியமா இப்படி தினமும் பற்று எழுதி மொத்தமா அறுவடைக்கு அறுவடை நெல் அளந்து வரவு வைக்கிற ‘நிலக்கிழார்’களான ஆடியபாதம், இன்னோரன்ன பெரிய பணக்காரங்களுக்கு அரசல் புரசலா செய்தி காதுக்கு எட்டியிருக்கு. ஆனா அவங்களுக்குள்ள ஆச்சரியம், ”என்னய்யா நாம, ஏதோ பெருமாள் குபேரனுக்குப்  பட்ட கடன் மாதிரி, பத்து வரவு வச்சு சாப்பிடுதோம், ஆனா இவருக்கு எப்படி சிட்டை போட விட்டாருவே, சரியான பளுவம்லா போத்தி” என்று அவர்கள் ஒரு நாள் துருவ ஆரம்பிக்கையில் ’சேச்சே அவரு முதலாளி கணக்கில் சாப்பிடுதாரு’, என்று சமாளித்து விட்டார் போத்தி. ஆனால் உண்மை தெரியாமலும் போகவில்லை,அது தெரிந்த பின் யாரும் அங்கே சாப்பிடாமலும் இல்லை. அவங்க மனசு வாதிச்ச்சாலும் நாக்கு கேக்காதுல்லா, பெல் அடிச்ச மாதிரி டயத்துக்கு ஓட்டலுக்கு கூப்ட்ரும்லா.

ஆடியபாதம்தான் கேட்டார், ” அண்ணாச்சி இன்னக்கி ஒங்க பையன் கடைக்குப் போகலையா… இப்ப அவனும் இன்னொரு பையனும் பெரிய தூக்குப் பாத்திரத்தில் ஏதோ கிரஷ்ஷும் கிளாசும் வாங்கிட்டுப் போறாங்களே, என்ன விசேஷம்.” ”தளவாய்ப் பண்ணை மகன் வீட்டில், அவ்வோ கட்சிக்காரரு அன்பழகன் வந்திருக்காராம்..அதுக்காக் கண்டா இருக்கும், எக்கங்க கேக்கான்.. வேலை எது உண்டுமோ அதைப் பாருடான்னா, நீங்க ஒங்க சோலியைப் பாருங்கம்பான்…தோளுக்கு மிஞ்சினவண்ட பேசாம இருக்கறதுதான் நமக்கு மரியாதை.” சொல்லிக் கொண்டே கிளம்பினார் வேயன்னா.  மெதுவாகக் கடைக்கு நடக்கத் தொடங்கினார்.

பல கடைகளிலும் வேனல் பந்தலை பிரித்துக் கொண்டிருந்தார்கள். கோடை எட்டிப் பார்க்கத் தொடங்கியதுமே கடைகளுக்கு முன்னால் வெயில் தெரியாமல் இருக்க பனை ஓலையில் பந்தல் போடுவார்கள். பச்சை ஓலை போட்ட புதுசில கம்முன்னு பனங்கிழங்கு மணத்தோட குளிர்ச்சியா இருக்கும். சில கடைகள் முன்னால் கரம்பை வெட்டி வந்து பாத்தி போல வைத்து உள்ளே மணல்  அடித்துப் போட்டிருப்பார்கள். சித்திரை வெயிலில் நடந்து வருபவர்களுக்கு  அந்த வேனலுக்கு இந்த நிழல் இன்னும் இதமாக இருக்கும். தேரோட்டம் வரும் போது எல்லாவற்றையும் எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் தேர் வரும்போது அகலம் காணாது. கடைக்கு வரும்போது லச்சுமணன் பந்தலை இழுத்து மாடிச் சுவரோடு கட்டியிருந்தான். அங்கே இருந்த ஜன்னலை அது மறைத்திருந்தது. ” போ, பொண்டாட்டி ஓளி ஜன்னலை மறைச்சுட்டானா… செத்த நேரம் மேல போய் சுதந்திரமா ரோட்டை வேடிக்கை பாக்கலாம்..அது சரி தேரோட்டம் முடியற வரைதானே.. “ அவரே பேசி அவரே சமாதானம் சொல்லிக் கொண்டார். கடையில் பையன் மட்டும் இருந்தான். ’ஐயா எங்கல’ என்றார். ”வண்டி அமர்த்திட்டு வந்தேன்லா ரெண்டு பேரும் ஆச்சியை பார்க்கப் போயிருக்காங்க,”என்றான்.  ” எங்க சிவஞானத்து ஆச்சி வீட்டுக்கா.. ஐயா போக மாட்டாகளே …எப்பம்லா வருவேன்னாக சாப்பிடக் கொள்ளப் போக வேண்டாமா.”   ’அதெல்லாம் தெரியாது நீங்க வரந்தன்னியும் கடை பத்திரம்ன்னு  சொன்னாக. யாவாரம் வந்தா லச்சுமண அண்ணன்ட்ட சொல்லி ஒங்களை கூட்டியாரச் சொன்னாக.’ “ யாரும் வந்தாகளா..” ’இல்லை’.பேச்சு முடிந்து அமைதியாக இருந்தது கொஞ்சநேரம்.

கை தன்னால் கால் பக்கம் போக சிந்தனை பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பையன் அவ்வப்போது அவரைப் பார்த்து மனசுக்குள் சோக்கா ஃபிடில் வாசிக்காரே என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான். ‘அண்ணாச்சி இந்தச் சிரங்குக்கு அப்பளம் பொரிச்ச எண்ணெய் போட்டா நால்லாக் கேக்கும்,’ ‘ ஆமா ஓங்கிட்டதான் ரோசனை கேக்கணும்..சோலியைப் பாப்பியா.’ அப்பளம் பொரிச்ச எண்ணையா இவ எங்க அப்பளம் பொரிக்கா, சோத்தைப் பொங்கி வச்சிட்டுப் போயிருதா கடையில இருந்து ரசமோ குழம்பு கறியோ  வாங்கிட்டு வாரா, அம்புட்டுதான். இல்லேன்னு சொல்லாம ஒதயத்திலையும் ராத்திரிலயும் இட்லி தோசை போட்ருதா. வீட்டு ஞாவகம் வந்துட்டா. ச்சேய் வெளங்குமா. படப்போட திங்கிற மாட்டுக்கு புடுங்கிப் போட்டா காணுமாங்கிற கதை மாதிரி வாழ்க்கைல எம்புட்டு சம்பாரிச்சாலும் காணாது போல்ருக்கே. துணி வித்தாலும் விக்கட்டாலும் மகராசன் மாசம் முப்பது படியளந்துருதாரு. இந்த நெல்லையப்பனுக்கு என்னமும் கல்யாணம் காட்சின்னு பண்ணாண்டாமா…அவனுக்கு என்ன குடுக்காக கடையில என்னமும் அம்பது ரூபா குடுப்பகளா. எங்க சொல்லுதான்.

மனசுக்குள் மாளாத யோசனைகள். வேறு என்ன செய்யும் மனசு. ஒன்னு செத்தவனுக்கு ஜாதகம் பாத்துப் பாத்து ஓயும். இல்லேன்னா கனவு கனவாக் காணும். வேலைன்னு இருந்தா ஒழுங்கா அதைப் பாக்கும். எத்தனை சனங்க பஜார்ல   போது வருது. ஒன்னொன்னும் ஒவ்வொரு யோசனையோடதான போகும். யோசிக்காதவன்னு யாராவது இருப்பானா. பொம்பளைக இப்படி ரொம்ப யோசிக்க மாட்டாளுகளோ. அவளுகளுக்கு வீட்டுச்சோலியே சரியாப் போயிருதோ. என்னத்தை அவங்களுக்கு ஆயிரம் நொம்பலம். மாத விலக்குன்னா மூனு நாளைக்கு தோசைக்கு அரைக்கப் போக முடியாது. ஒரு நாள் தீட்டுப் படப் பிந்திட்டு, வேலைக்குப் போனா. கல்லூர் ஆச்சி “ஏழா இன்னக்கி குளிச்சிட்டுத்தான் வந்தியான்னு கேக்காளாம். இவ தீட்டை அவ கணக்கு வச்சிருக்கா.. யோசிச்சுப் பாத்தா படுக்காளித்தனமாத்தான் இருக்கு. என்ன செய்யறது. இங்கன யார்ட்டயாவது பேச முடியுதா. தானாப் பேசி தலைக் கிறுக்குப் பிடிக்கப் போவுது ஒரு நாளு.

லச்சுமணன், ”வேலையை முடிச்சுட்டேன், ஐயா என்னமும் சொன்னாகளா.” ” ஏண்ட்ட ஒன்னும் சொல்ல்லை உனக்கு வேணுங்கிறதை வாங்கிட்டுப் போ அவுக என்ன இல்லேன்னா சொல்லிரப் போறாக, எட்டணா போறுமாடே.. “ “ குடுங்க ஐயா கூடக்குறைன்னா வாங்கிக்கிடறது.” ஆமா ஆமா நீதான் செல்லப் புள்ளையாச்சே, சரி வீட்டில மூட்டைப் பூச்சி தொந்தரவு தாங்கலை, என்னமும் ரோசனையிருக்காடே.. ஏற்கெனவே இவ கேட்டை நட்சத்திரம், ‘கேட்டைக்கு மூட்டை கோட்டை கோட்டையாப் பத்தும்’பாக, இவ சினிமாக் கொட்டகை மூட்டையப் பூரா வேற கொண்டாந்துருதா…” சுவர்ல பொந்து பொடையெல்லாம் அடைச்சிட்டு மூட்டைப் பூச்சிப் பொடிய சுண்ணாம்புத் தண்ணில கலக்கி வெள்ளை அடிச்சிருவோம் ஐயா, சப்ஜாடா போயிரும்..’ என்னத்தப்பா சவம் மோட்டு வளையில இருந்துல்லா தொப்புத் தொப்புன்னு சரஞ்சரமா விழுது… கடிச்சுட்டு மேல போயிருது.சரி, என்னமும் ஆகுது இந்த ஞாயித்துக் கிழமை வாரியா’ என்றபடியே எட்டணாவை எடுத்துக் கொடுத்தார். அவன் உத்தரவு வாங்கிக் கொண்டான். ச்சேய் பந்தலை எடுத்ததும் வெக்கை என்னமா அடிக்கு…என்று சொல்லியபடியே நீ போய்ட்டு வா என்றார். அழைப்புக்காரச் செட்டியார் சுண்டல் விற்றுக் கொண்டு போனார். என்னது இன்னக்கி கல்யாணம் கருமாதின்னு வீடு அழைக்கிற சோலி ஒன்னுமில்லையோ செட்டியாருக்கு. ’வே செட்டியாரே இங்க வாரும் அரையணாவுக்கு சுண்டல் குடும்.’ அரையணாவுக்கு வாங்கி பையனும் அவரும் ஆளுக்குப் பாதியாக எடுத்துக் கொண்டார்கள்.’என்னவே ஒன்னும் விசேஷமில்லையா வேகாத வெயிலில் போணியைத் தூக்கீட்டு சுண்டல் விக்கக் கிளம்பிட்டேரு.’ ‘ஆமா இந்த ஆனியில ரெண்டு அமாவாசை வருதுல்லா.. முளுத்தம்(முகூர்த்தம்) நிறைய இருக்காது. அவர் யாவாரத்துக்கு  கிளம்பினார்.  வாடகை வண்டிக்காரன் ராமையா  வந்து சொன்னான். ஐயா வரமாட்டாகளாம் நீங்க கடையைப் பூட்டிட்டு சாப்பிட்டுட்டு வருவேளாம்.’அப்படியா எங்க, கொட்டகை வீட்டுக்கா போயிருக்காக, சரி, ஏல இவனே, தண்ணி வாளியை எடுத்து உள்ள வையி, கால் மிதியடி கிடக்கட்டுமா எடுத்து வைக்கியா..சரி சவம் கிடக்கட்டும், யாரு தூக்கப் போறா இதை.ஆனா கொச்சில இருந்து வந்த கால்மிதிலெ நயம் சரக்கு…அதான்… சாப்பிட்டுட்டு வந்திரலாம்லே…” அவரே கேட்டு அவரே பதில் சொல்லிக் கொண்டார்.கடையைப் பூட்டி சாவியை வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்கு நடந்தார்.

பேச்சு பேச்சு. ஊர் பூராவும் எல்லாருக்கும் இடையில் எப்பவும் பேச்சுதான். கேலி கிண்டல்,பொரணி, ஆணைப் பற்றி பெண்ணைப் பற்றி ஆண் பெண் உறவு பற்றி.. நல்ல உறவு கள்ள உறவு பற்றி. ஆறு, வாய்க்கால் படித்துறை, கோயில், நயினார் குளம்,தெப்பக்குளம், ரயில்ரோடு, ரதவீதி தெருக்காடு,தெருமுனை எங்கேயும் பேச்சு. ’கழுதைக்கி காமம் கத்தினாத் தீரும்’ங்கிற மாதிரி பேசிப் பேசியே அரிச்சல்களை மனிதர்கள் தீர்த்துக் கொள்கிறார்களோ.ஊர்ல நாலாவதா ஒரு சினிமாக் கொட்டகை, முனஞ்சிப்பட்டி ரெட்டியார் கெட்டுதாராம்லா.சீக்கிரமே திறக்கப் போறாங்களாம்லா…தனக்குள் பேசிக் கொண்டே வீட்டுக்கருகே வந்தார். வாசலில் நாலைந்து பிரப்பந் தட்டிகள் இருந்தது. புள்ளிக்காரரு  என்னமோ மீட்டிங் ஏற்பாடு பண்ணுதாரு போல. எங்க ரயில்வே ஃபீடர் ரோட்லயா.. யார் பேசுதா அன்பழகன் தானா. ஆனா அருமையாப் பேசுதாங்கப்பா. எல்லாம் பேச்சுத்தான் ஒரே பேச்சுத்தான்.காலைக் கழுவி விட்டு உள்ளே போனார். வெயிலில் வந்த களைப்பு. வீட்டுக்குள்ளும் ஓட்டு வெக்கை தீயாக இறங்கிக் கொண்டிருந்தது.நெல்லையப்பன் உள்ளே வந்து, ’சோறு, பானையில இருக்கு.ரசமும் துவையலுமிருக்காம்.நான் ஒரு பொட்டலம் காராச்சேவு வாங்கி வச்சிருக்கேன், மோர்ச் சோத்துக்கு எடுத்துக்குங்க.’  ’நீ இன்னக்கி கடைக்கிப் போகலியா’’  பதில் சொல்லாமல் சைக்கிளில் தட்டிகளை ஏற்றிக் கட்டிக் கொண்டிருந்தான்.கழுத்தில் சிறியதாக ஒரு கறுப்பு சிகப்பு துண்டு கிடந்தது. இவர் கக்கூஸ் செம்பில் தண்ணீர்  எடுத்துக் கொண்டு தோட்டத்துப் பக்கம் போனார். அது அன்றாட வழக்கம். சாப்பிடும் முன்னால் கொல்லைக்குப் போவது.

 

3.

கொல்லைப்புறம் நீண்டு கிடந்தது. தென்னை மரங்களும் முருங்கை மரங்களும் எந்த வரிசையுமில்லாமல் வளர்ந்து கிடந்தது. அதற்கு அடுத்து, செங்கல் எல்லாம் உப்புப் பொரிந்து உதிர்ந்து, அநேகமாக சிதைந்து விழும் நிலையில் காம்பவுண்ட் சுவர்.  அதையொட்டி மரங்களுக்கிடையில் வரிசையாய் கக்கூஸ்கள். எல்லாமே எடுப்புக் கக்கூஸ்கள். அதன் உப்புத்தான் சுவர்களை அரிக்கிறது. அப்பப்ப கொத்திப் பூசுனா, இப்படி உப்புப் பொரிந்து ஓட்டை விழவோ சுவர் கீழே விழவோ விழாது. வளவின் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொன்று என்று ஏற்பட்டவை. நாலு சுவர் மட்டுமே இருக்கும்.அதில் கதவில்லாத இரண்டரை அடி அகல வாசல். கதவுக்குப் பதிலாய் கொண்டு போகிற தண்ணீர்ச் செம்பை வாசலில் தெரியும்படி வைத்து விட்டால், தார்மீகக் கதவு ஆகிவிடும் அது. சமயத்தில் தார்மீகம் தவறிப் போய் சில காதல் உறவுகள் ’காதலுக்கு மூக்கில்லை’ என்று ‘அசிங்கத்திற்குள்ளேயே அசிங்கமாக’ அரங்கேறும்.  சிலவை அம்பலத்திற்கு வரும். கல்யாணம் வரை கூட போயிருக்கிறது சில. ஒன்றை வேயன்னாவே கண்டு பிடித்து நடத்தியிருக்கிறார்.எல்லாம் சினிமா செய்யற வேலை. முன்னால ராஜாராணி சினிமாதான் வரும். அதைப் பாத்துட்டு வெறும் கனவு காணறதோட விட்டு விடும் சனங்க. இப்ப என்ன்ன்னா டவுசரும் சட்டையும் போட்டுக்கிட்டு ஆடிப் பாடறதைப் பார்க்கும் போது இதுகளுக்கு தான் தான் அதுன்னு நெனப்போ என்னவோ.

”மனிதனுக்கு கக்கூஸ்லயும், பார்பர் ஷாப்பிலையும் யோசிக்கறதைத் தவிர வேற என்ன செய்ய முடியும்’. இதையும் யோசித்துக் கொள்வார், வேயன்னா அடிக்கடி. அவரது வீட்டுக்காரி ’உமையாள்’ என்கிற உமைய பார்வதி  சொல்லுவா ‘ அது என்னன்னுய்யா சாப்பிடற நேரத்துல கக்கூஸ் போறிய,போய்ட்டு வந்தா சாப்பாடு எறங்க வேண்டாமா…ச்சேய் எனக்கு ஒரே அக்யானியமா இருக்கு, உடம்பே நழுக்குது?’,என்று உடலை உலுக்கிக் கொள்வாள். புறவாசலிலிருந்து வீட்டுக்குள் நுழைகையில் மறுபடி கை கால் முகமெல்லாம் கழுவிக் கொண்டார். ’என்னழ்ழா படுத்திருக்கெ, உடலுக்கு கொணமில்லையா.’ என்று பாயைப் போட்டு சுவரோரமாகப் படுத்திருக்கும் மனைவியிடம் கேட்டார். சவம் என்னதான் ஒருத்தருக்கொருத்தர் ’ஆகலை போகலை’ன்னாலும் நேரா நேரமில்லாம இப்படி சுருண்டு போய் படுத்திருந்தா யாருக்குத்தான் மனசு கேக்கும். இப்பவும் மனசு கேக்காமத்தான் உண்மையான ஆதங்கத்தோட கேட்டார். ‘நீங்க எடுத்துப் போட்டுச் சாப்பிடுங்க,நான் செத்த நேரம் படுத்திருக்கேன், தோள்ப் பட்டைக்கு கீழ கையி ரொம்ப வலிக்கி’

’ஆமா, பொறவு எப்பவும் ஆட்டுஉரலே கதின்னு கிடந்தா,இன்னா உள்ளங்கை விரலு பூராவும் மாவு ஒதுக்கி ஒதுக்கி சுருக்கு விழுந்து கெடக்கு.’ நாலு உரலு அரைக்கா,அஞ்சு உரலு அரைக்கான்னு..எல்லாவளும் கந்தட்டி (கண் திருஷ்டி) வேற. கொஞ்சம் வெண்ணி வைக்கேன் கையில ஊத்துதியான்னு’ கேட்டபடியே  ஒரு ஈயப்பானையில் குடத்திலிருந்து தண்ணீர் சரித்தார் வேயன்னா. அடுப்பு சுத்தமாக அணைந்து கிடந்தது. பக்கத்தில் ஓலை, தாள் எதுவுமே இல்லை. உடை விறகு பொடிக்கம்பாகத்தான் இருக்கு. பத்த வச்சா புடிக்குமோ, ஈரமாக் கிடக்கொ என்னவோ… மொத்தமா வாங்கி காயப்போட்டு வச்சுக்கற மாதிரியா இருக்கு….’ பத்த வைக்கத் தடுமாறினார். ‘செரி செரி,நீங்க தூரப் போங்க, நீங்க அடுப்புச் சோலி பாத்துட்டாலும் ’என்று செல்லமாய் சலித்துக் கொண்டே தலையை முடிந்து கோடாலிக் கொணடை போட்ட படியே எழுந்தாள். ’ரெண்டு வாய் சாப்பிட்டுட்டு நான் சாயந்தரமா வெண்ணி போட்டு குளிச்சிக்கிடுதேன்.’ என்று இரண்டு தட்டுகளை எடுத்துவைத்து சோறு, ரசம்,மோர் தண்ணீர் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவரும் உட்காரப் போனார். ’அந்தா கலவடையில்- இடுப்பிலிருந்து தண்ணீர் இறக்க, பாத்திரம் அடுக்க வசதியாய் இடுப்பு உயரத்துக்கு ஒரு பலகை போட்டு இருக்கும் சுவரையொட்டி அதுதான் கலவடை- காராச் சேவு வச்சிருக்கு பாருங்க.. எடுத்திக்கிட்டு உக்காருங்க.’  ஒரு திடீர் அந்நியோன்யம் பரவிற்று இருவர் மத்தியிலும். ‘ கிளப்புக்கடை ஆச்சி ரெண்டு பருப்பு வடை குடுத்தா என்னடா தாராளம் தண்ணி பட்ட பாடாருக்கேன்னு, ஆச்சரியத்தோட வாயில பிச்சுப் போட்டேன் ஒரே உப்பு, கொண்டு வந்து மோரைத் தாளிச்சு ஊறப்போட்டா உப்பை எடுத்திரும். வீட்டுக்கு எடுத்திட்டு, வந்திரலாம்ன்னு வச்சேன் அங்கெயே உரலுக்குப் பக்கத்தில அப்படியே மறந்துட்டேன்,எழவு இந்தக் கைவலில்லா படுத்துது.’ சொல்லிக் கொண்டே கையை ஓங்கி உதறினாள். ரசத்தை விட்டுப் பிசைந்து கொண்டே சரி சாப்பிடு, மாணிக்கம் பிள்ளை கம்பவுண்டர் வந்திருப்பாரு, காட்டிட்டு, என்னத்தையும் களிம்போ, பொடியோ தருவாரு, வாங்கிட்டு வரலாம்.’ ’என்னத்துக்கு  அந்தா ’பெப்பர்மிண்ட் ஆயில்’ இருக்கு தடவிக்கிட்டா சரியாப் போயிரும்,அவருக்கு வேற என்னத்தையும் ஒத்த ரூவா குடுக்கனும் எதுக்கு.’ ’ஏட்டி, செலவழிக்கிறதுக்கு செலவழிச்சு தானட்டி ஆகணும்..ஒத்த ரூவாயை கொண்டுட்டா போப்போறோம், அருணாக் கயித்தைக் கூட அத்துட்டுதான் கருப்பந்துறையில் கட்டையில வைக்கப் போறான்.’ சொல்லிக் கொண்டே பலமாக ஏப்பம் விட்டபடி எழுந்தார்.’ஏயப்பா கல்யாணச் சாப்பாடு கெட்டுது போல இருக்கே, இம்புட்டுப் பெரிய  ஏப்பமா…’ ‘ பொறவு இன்னக்கி ஓங்கூட உக்காந்துல்லாட்டி சாப்பிட்டுருக்கேன், தொடுகறிக்குப் பதிலா ஒன்னையில்லா தொட்டுக்கிட்டேன்’ . சரசத்தின் அற்புதமான வார்த்தைக் கொடி இதமாகப் படர்ந்தது.

ஜம்பரைக் கழட்டி விட்டு சேலை முந்தானையை மார்புக்கு மேலாகச் சுற்றிய படி பாயில் அமர்ந்தாள். பெப்பர்மிண்ட் ஆயிலைக் கையில் எடுத்தபடி அவரும் அருகே உட்கார்ந்தார். இடது உள்ளங்கையில் எண்ணெயை விட்டுக் கொண்டு பாட்டிலை ஞாவகமாகத் தள்ளி வைத்தார். உமையாள் பார்த்துச் சிரித்துக்கொண்டாள்,’சாக்கிரதைக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் கிடையாது.’  சூடன் வில்லையின் மணம் குச்சு வீடு பூராவும் பரவியது. யாராவது குழந்தைகள் இருந்தால், ’எனக்கு மிட்டாய்…’ என்று கேட்டிருக்கும். பேர்தான் பெப்பெர்மிண்ட் ஆயில், உண்மையில் அது பெப்பெர்மிண்ட் எசன்ஸ்தான், வில்லைகள் தயாரிக்கும் போது பயன் படுத்துவார்கள். அதை கை,கால் வலி, குடைச்சலுக்கெல்லாம் தடவலாம். சட்டையைக் கழட்டியதும் வெயில் படாத தோள்ப் பட்டை மஞ்சளாய்ப் பளீரிட்டது. வெளியே பார்க்கையில்  மாநிறம்தான் உமையாள் என்றாலும் உண்மையான நிறத்தைக் காட்டியது சட்டையில்லாத பகுதி. சூடு பரக்கத் தேய்த்தார் எண்ணெயை. கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்தபடி இருந்தாள். வலிக்கு இதமா அல்லது…என்று வேயன்னா யோசிக்கும் போதே,’தோள்ப் பட்டைலதான் வலின்னேன்… கையி, எங்க நெஞ்சுப் பக்கம் போகுது..போதும், கையைக் கழுவுங்க,’ .  பாயில் எண்ணெய் ஆகாமலிருக்க இடது பக்கமாகச் சாய்ந்து சுவரைப் பர்க்க படுத்தாள். முதுகின் மஞ்சள் வேயன்னவை அழைத்தது…மூதேவிக்கு முடி ஒன்னு கூட கருக்கலையே….கதவைச் சாத்தி விட்டு,அதே பாயில் ஒட்டிப் படுத்தார். லேசாக வீசிக்கொண்டிருந்த காற்றும் அடை பட்டது. திறந்த முதுகிலும் அக்குளிலும் வேர்வை அரும்பியது உமையாளுக்கு. பானையை மூடியிருந்த காலண்டர் அட்டையை,எட்டி எடுத்து விசிறினார்,இரண்டு பேருக்கும் பொதுவாக. ’வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே கோவணத்தை அவுத்து கொடியில போட்ருவீகளோ..’ சிரித்த படியே திரும்பி நெருங்கினாள். அசந்தர்ப்பமாய் கால் ஊறல் எடுத்தது. அடக்கிக் கொண்டார்.

வியர்வையையும் வெக்கையையும் மீறிப் பிணைந்தபடியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட இருவரையும்,  ஏதோ பாத்திரம் உருளுகிற சத்தம் இந்த உலகிற்கு மீட்டு வந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தார் வேயன்னா. கொஞ்சம் நிதானமாகவே எழுந்தாள் உமையாள். தொய்ந்த மார்பை ஜம்பருக்குள் அடக்கியபடியே…’அப்படியே, அந்த அங்கணாக்குழில நின்னு ஒரு செம்புத் தண்ணிய தலைல ஊத்திக்கிட்டு கடைக்கிப் போங்க…’ ‘ நீயி ..? ‘ ஆமா நானுந்தான்.. வெண்ணிய வச்சு வெயில்த் தாழ குளிச்சிக்கிடுதேன்.அப்படியே சுவரைப்பாக்க நின்னுகிட்டே குளிச்சிட்டுப் போங்க கோவணத்தைக் கொண்டா அதைக் கொண்டான்னு கேக்காதிய, வேட்டியை நான் நனைச்சுக்கிடுதேன். இந்த அகாலத்துல ஈர வேட்டியை தார்சாலில் எவளும் பார்த்தா ரொம்ப மானமா இருக்கும். ’

குளித்து முடிந்ததும், பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பாட்டு ஒன்றை முனுமுனுத்த படியே சம்புடத்தில் இருந்து திருநீரை அள்ளி நெற்றி நிறையப் பூசினார். ‘ நீங்களே எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு காமிச்சிருவீக போல இருக்கே… இப்ப என்னத்துக்கு இம்புட்டு விபூதி…விடியக்காலம்ன்னா சரி’என்றாள். அவர் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போனார். ‘போகும் போது, ’ நெல்லெயப்பன் வந்தான்னா கம்பவுண்டர்ட்ட காட்டு…’ ‘சரி சரி என்ன பண்ணித் தொலைச்சீங்களோ, எள்ளும் கருப்படியும் திங்கணுமோ, இஞ்சியத் திங்கணுமோ, என்ன கருமத்தையெல்லாம் தின்னு அழணுமோ…பொறவாசல்ல ஒரு பப்பாளி பழுக்கிற மாதிரி கிடந்ததே, கிடக்கோ நம்மள மாதிரி திருட்டு மூதி யாரும் பரிச்சிட்டுதுகளோ என்னவோ.. எட்டினாப்புல இருந்துதே, யாரும் பாக்காமல்லா பறிக்கணும்…ச்சேய்’ அலுத்துக் கொண்டாள்.

வேயன்னாவுக்கும் கொஞ்சம் ஏதோ போல இருந்தது. பொம்பளை பாடுங்கிறது திண்டாட்டம்தான். சிவஞானத்து ஆச்சி குடும்பத்தைக் கொண்டு செலுத்த எம்புட்டு கஷ்டப்படுதாக. எப்படி ராணி மாதிரி இருந்தவுக. சேரகுளம் ஊர்ல சொந்தமா பெரிய கோயிலைக் கட்டி வாழ்ந்த குடும்பமாம். தெய்வு சொல்லுவாக எப்பவாவது. சந்தேகம் வந்தது, தான் இதையெல்லாம் நினைக்கிறோமா இல்லை வாய் விட்டே பேசுகிறோமா. யாரும் வேடிக்கை பார்க்கிறார்களா ரத வீதியில்,என்று.பஜார் தன் பாட்டுக்கு மூன்றரை மணி வெயிலில் லேசான மேற்குக் காற்று புழுதியை வாரி உருட்டி அடங்கியது. ரதவீதி புறண்டு படுப்பது போல் இருந்தது. வாகையடி முக்கிற்கு வந்திருந்தார். எப்போதும் வாகையடி அம்மன் கோயிலின் முன் நின்று செருப்பைக் கழற்றிப் போட்டு  கண்ணை மூடிக் கும்பிட்டே வருவார். இன்று அங்கு நிற்கவே அக்கியாணியமாய்,உடலில் ஒரு கூச்சம், இருந்தது.செருப்பைப் பாதி கழற்றியவாறே அரைக் கும்பிடு போட்டார். அடைத்த அழிக்கதவு வழியே பார்த்தார். எத்தனை பொணம் என்னை தெனமும் கடந்து போகுது, எத்தனை முளியா மூஞ்சிக காலையில என் நடைல உக்காந்து பீடி குடிக்க்கிக என்று சொல்லி அம்மன் சிரிப்பது போலிருந்தது.  வேயன்னாவுக்குள்,  ’அது வேறவே  சமைஞ்ச புள்ளைகளோ நெல்லெயப்பனோ   அந்த நேரம் வந்திருந்தா….” என்று.ஆனாலும் சிரிப்பு மாறாம இருந்தா வாகையடி முக்குக்கு அதிகாரி. அதைப் பார்க்கையில் சாந்தா ஆச்சி நினைவு வந்தது.

 

4

வண்டிக்கார ராமையா பிள்ளை சாந்தா ஆச்சி ஏறியதும் வண்டியின் பின் படுதாவை இறக்கி விட்டிருந்தார்.வழக்கமாக வண்டிக்குள் கிடக்கும் ஒரு வைக்கோல் அடைத்த சாக்கு மெத்தைக்கு மேல் ஒரு லேசான சமுக்காளத்தை விரித்திருந்தார். அதை எப்போதும் விரிப்பதில்லை முன்னால் இருக்கும் ’கோஸ் பெட்டி’யில் வைத்திருப்பார். இப்படி யாராவது  முக்கியஸ்தர் வந்தால் எடுத்து விரித்து வைப்பார். சிலர் அவர் அப்படியெல்லாம் செய்யட்டும் என்று வீட்டுக்குள்ளேயே காத்திருப்பார்கள்.வாடகை  வண்டிகள் எல்லாம் சந்திப்பிள்ளையார் கோயிலுக்கு அடுத்த காலி இடத்தில்தான் நிற்கும். முன்னால் அதற்கு வண்டிப் பிறை என்று தான் பெயராம். இபோது காந்தி சிலை வைத்த பிறகு காந்தி சவுக்கம் என்று ஆயிற்று. வேயான்னா யாரோ சொல்லக் கேட்டு அவரும் சொல்லப் பழகியிருந்தார்,’ நல்ல தீர்க்கமான சிலை இது..” ராமைய்யாவின் வண்டியும் அங்கேதான் நிற்கும். வண்டிக்கு வரிசை முறை உண்டு. ஆனாலும் அவரவர்க்கு வேண்டிய ஆட்களைக் கூப்பிட்டுக் கொள்வார்கள். பாப்பு பிள்ளை வண்டின்னா அதுக்குன்னு சில பேர். பழனிக் கோனார் வண்டின்னா அதுக்குன்னு சில வாடிக்கை. ராமையா வண்டிக்கு எப்பவுமே பிரிசாலம் ஜாஸ்தி. கொஞ்சம் நீக்குப் போக்கா வாடகை வாங்கிக்கிடுவார். காத்திருக்கிறதைப் பத்தி ரொம்ப ஆவலாதி சொல்ல மாட்டார். தெய்வு  வண்டி  அமத்திட்டு வான்னு  சொன்னா ராமையா பிள்ளை வண்டிதான். அவர் இல்லேன்னாத்தான் வேற வண்டி. அடுத்த தேர்வு ’கும்பகோணத்தான்’ வண்டி. கும்பகோணத்தானிடம் ஒரு தொந்தரவு பேசியே கொன்னுருவான்.

ராமைய்யா  சிவஞானத்து ஆச்சிக்குச் சொந்தமான ஒரு குச்சில்தான் குடியிருக்கிறார், மனைவி தாயம்மாளுடன். ஊதினால் பறந்து விடக்கூடிய மாதிரி ஒல்லி தாயம்மா அக்கா. ஆனா வண்டி மாட்டையும் சரி, இரண்டு பால் மாடுகளையும் சரி, ஒத்தை ஆளாகப் பார்த்துக் கொள்ளுவாள். தேவைப்பட்டால் ஒரு உலக்கையை  ஜாக்கி மாதிரி அடை கொடுத்து ஒவ்வொரு சக்கரமாகக் கழற்றி வண்டி மை போட்டு வைப்பாள். பெரும்பாலும் ராமைய்யாவே மசி போட்டு விடுவார்.  அந்த மாதிரி சமயத்துல ராமையாவுக்கு உதவியாய்  வைக்கோலை எரித்து விளக்கெண்ணெயில் கலந்து  வண்டி மசி ரெடி பண்ணுவாள். யாரின் .புது மாட்டுக்கு சரடு பூண வேண்டுமென்றாலும் அவளையே கூப்பிடுவார்கள்.  துணிச்சலாய் ஒரு கருப்பட்டித் துண்டைக் கொடுத்து முகத்தைத் தடவுவாள், அது சொகமா குடுத்துக்கிட்டே இருக்கும் போது,  அதன் முகத்தை  இறுகப் பிடித்துக் கொண்டு கோணி ஊசியால் மூக்கில் துளை போட்டு புதுக்கயிற்றை லாவகமாக நுழைத்து விடுவாள். அப்போது எங்கிருந்து அப்படி ஒரு பலம் அவளுக்கு வரும் என்று யாருக்குமே புரியவில்லை. மாடு இவளால நமக்கு என்ன தொந்தரவு வந்திரப்போதுன்னு முகத்தைக் குடுத்து மாட்டிக்கிடுதோ என்னவோன்னு வெளையாட்டாகச் சொல்லுவார்கள்.

ரெண்டு பேருக்குமே ஊர் கரந்தாநேரிப் பக்கம். அவர்கள் இங்கு அந்தத் தெருவிலுள்ள மில்லுக்காரர் வீட்டுக்கு வண்டி ஓட்டவும் வீட்டு வேலை செய்யவுமே வந்தார்கள். மில்லுக்காரர்,கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறியவர்.முதலில் நூல்க் கடையில் வேலை. அப்புறம் ஏஜண்ட் மாதிரி அப்புறம், பத்து பதினஞ்சு ’கதிர்’ வச்சு சின்ன மில்,ஸ்பிண்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி  பெரிய மில்லு என்று வளர்ந்தவர். தெருவில் குட்டித் தெப்பம் போலக் கிடந்த பெரிய கல் கிடங்கொன்றை வாங்கி அதை நிரப்பி வீடு கட்டிக் கொண்டார். எல்லோரும் ‘யோவ் என்னய்யா மனுசன் துட்டைக் கொண்டு போய் கிடங்கில போடுதாரு’ என்று கேலி பேசினார்கள், அவர்களுக்குள்ளேயே ’யோவ் மண்ணுலதானய்யா போடுதாரு, யாரையும் மாதிரி மலையாளத்தா மடில கொண்டா போடுதாரு…’ என்று சொல்லிக் கொள்ளுவார்கள்.வீடு மளமளவென்று வளர்ந்தது. காணாததுக்கு அவரு வீட்டுக்கு வேண்டிய இரும்புச் சாமான்கள் எல்லாம் மொத்தமா, நிறைய வாங்கிப் போட்டதும், ‘ஒர்ல்டு வார்’ வந்து விட்டது. விலைகள் எல்லாம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு ஏறியது, பாதியை விற்றதில் அவருக்கு வீடு கட்டும் செலவே சரியாகப்  போய் விட்டது.

அப்போது   பழைய வாக்ஸ் ஹால் காருக்குத் துணையாக லேண்ட் மாஸ்டர் கார் ஒன்றும் வாங்கினார். அதை வாங்கியதும் வீட்டுப்பெண்கள் உபயோகத்துக்கு என்று இருந்த ரெட்டை மாட்டு வண்டியைக் கொடுத்து விட்டார்கள். ராமையாவுக்கு, வண்டிக் ’காடினா’வில் கேட்பாரற்றுக் கிடந்த  ஒரு ஒத்தை மாட்டு வண்டியைத் தந்து இதை ’ஒக்கிட்டு’ வைத்துக் கொள் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். ராமைய்யாவுக்கு வேலை போனது கூடக் கவலையில்லை, அப்படி அலங்கரிச்சு வச்சிருந்த ரெட்டைமாட்டு வண்டியவும், அழகு பண்ணி அழகு பண்ணிப் பார்த்த ஒட்டாங் காளைகளையும் குடுத்துதான் ரொம்ப வருத்தம்.’ அதை புதுக்குளம் பண்ணையார் வீட்டுக்கு குடுத்தாகளே, ’முதலாளி’ அந்த மட்டுக்கும் நல்லது மாடு சேமமாருக்கும். நாமளும் போய் எப்பவாவது பாத்துட்டு வரலாம், இன்னா தச்சநல்லூர் தாண்டினா புதுக்குளம், என்னட்டி தாயம்மா’ன்னு, அவர் சொல்றப்ப, கைப்பாகச் சிரித்தாள் தாயம்மா. மூக்குத்தியை அடகு வைத்து விட்டு, இரண்டு மூக்கிலும் சிறிய ஈர்க்குச்சியைச் சொருகி இருந்தாள். அது வேறு அவளின் வழக்கமான சோபையை அழித்திருந்தது.

அவளை வேலைக்கு வேண்டாம் என்று  சொன்னதற்கு ராமையாவுக்குக் கூடத் தெரியாத காரணம்தான் ரொம்ப வாதிச்சுது அவளை. முதலாளிக்குப் பிள்ளைகள் கிடையாது. அதற்காக  அவர் பார்க்காத மந்திரமாயம், பூஜை புனஸ்காரமில்லை. இரண்டாம் தாரமாக, leenலேண்ட் மாஸ்டரில் ஏறிப்போய், தாயம்மாவுக்கு தூரத்து உறவான ஒரு சின்னப் பெண்ணைக் கட்டியும் பிரயோஜனமில்லை. இரண்டாம் தாரத்துக்குப் புது இடத்துல தாயம்மாதான் துணை. அப்போதுதான் ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். ஒரு மண்டலம் பூஜை பண்ணனும் அது இதுன்னு பல கண்டிஷன் போட்டார். மாடியில் ஒரு பெரிய யாக சாலை, அப்புறம் வீட்டில் சிற்சில மாற்றங்கள். எல்லாமும் நடந்து கொண்டிருக்கையில் அவர் பார்வை தாயம்மா மேல பட்டது. இவ பயிராகாதவா, இவ இங்க இருந்தா பூசை பலிக்காது. அதிலயும் அவ சின்ன முதலாளியம்மா கூடவே இருந்தா ஒண்ணுமே வெளங்காது என்று சொல்லி விட்டார். அதுதான் தாயம்மாவுக்கு மனசை அறுத்துக் கொண்டே இருந்தது. பெரிய முதலாளியம்மா ஏதோ நாலு நல்ல வார்த்தை சொன்னா. அதனாலதான் இந்த வண்டி மாடு கிடைச்சுது. அப்பவும் தாயம்மா ’நல்ல வேளை நம்மளச் சொன்னதோட விட்டாரே, பெரியம்மாவைச் சொல்லியிருந்தா அவுக கதி என்னவாயிருக்கும், அவுக பொறந்த வீட்டில இப்ப யாருமே இல்லையாம்,’என்று நினைத்துக் கொண்டாள்.

திக்கில்லாம நின்ற தாயம்மா விஷயங்களை அரசல் புரசலாகக் கேள்விப்பட்டு அந்தத்  தெருவில் எல்லாருக்கும் படியளக்கிற சிவஞானத்து ஆச்சிக்கு , ச்சே இது அநியாம்ல்லான்னு தாயம்மா மேல் பச்சாதாபம் தோணுச்சு. ஒரு குச்சு வீட்டையும் அதையொட்டிய சிறு தோட்டத்தையும் கொடுத்தாள். நல்ல வேளை அவர்களுக்குப் பிள்ளை இல்லை என்று வளவுச்சனம் கொட்டகையில் வச்சுப் பேசியபோது ஆச்சி, ’அவளுக்கு என்ன வயசா இல்லை, இன்னம பெத்துகிட்டாப் போச்சு,’ என்று ஆறுதலும் சொன்னாள். ஆச்சி ’பேச்சை நிறுத்துங்கட்டி’ன்னு சொல்ற உத்தரவான வார்த்தை அது. அன்று ராமையா உட்பட எல்லாரும் அதைக் கேட்டு நகர்ந்த பின்  ஆச்சியின் காலடியில்  உட்கார்ந்திருந்த தாயம்மா  கண்ணீர் விட்டு ஆச்சியின் காலைப் பிடித்துக் கொண்டாள். ”ஆச்சி” என்று சத்தம் மட்டும் கொடுத்தாள். ஆச்சி, ’இருக்கட்டுண்டி பொட்டச்சிக்கு மணல் மாதிரி கெடக்கவும் முடியும்டி…கைட்டே தோண்டினா சுரக்கவும் முடியும்ட்டி...” , ஆச்சிக்கு அதிகமாப் பேசின மாதிரி தோணிட்டுன்னா, எழுந்திருச்சி பூசை அறைக்குள்ள போய்ருவா. அன்றும் போய் விட்டாள்.

ராமைய்யாவுக்கு தெய்வு ஐயா வண்டி கேக்காருன்னா சந்தோஷமா வந்தாரு.வண்டி பூட்டும் போதே சகல ஏற்பாடும் பண்ணி விட்டார்..இத்தனைக்கும் அதிகம் போனால் நூறு கஜம் தூரம் தான், சாந்தா வீடும் சிவஞானத்தாச்சி வீடும். தெய்வு நடக்க விடமாட்டார். சிவஞானத்து ஆச்சிக்கு அவளை ரொம்பப் பிடித்து விட்ட பின் , ’நீ வண்டிலெயேதான்  போகணும் வரணும் என்று சொல்லி விட்டாள். அந்தக்காலம்ன்னா ஒனக்குன்னு ஒரு வில் வண்டியக் குடுத்திருப்பாக எங்க வீட்டய்யா. நல்ல சமயமாப் போய்ச் சேர்ந்துட்டாக..பூசை பூசைன்னு மூனு நேரமும் ஒரு சாங்கியம் சடங்கு விடாமப் பண்ணிருவாக, பூசை முடிக்குந் தன்னியும் பச்சைத் தண்ணி வாயில படாது. லேசா ஒரு படியா வருதுழ்ழா மீனான்னு, தண்ணி குடுக்க வந்த மாறாந்தையா…..மடில சாஞ்சாக அம்புட்டுத்தான்…எனக்கு நான் பக்கத்துல இல்லையேங்கிற ஆத்தாமை இன்னும் தீரலை… சாந்தா, அந்த நேரம் பாத்தா தோட்டத்தில தேங்கா பறிக்கிறதைப் பார்க்கப் போவேன்…என்னமோ சிவ..சிவன்னாகளாம், என்னயத்தான் கூப்பிட்டாகளோ, என்னவோ அந்த சிவனுக்குத்தான் வெளிச்சம்’ என்று அடிக்கடிச் சொல்லுவாள்.’எனக்கு ஒரு ஆசைட்டி ஓன் மடில செத்துப் போகணும்ன்னு…’சொல்லி விட்டு சத்தமா சிரித்துக் கொள்ளுவாள். ’எக்கா இது என்ன வார்த்தைன்னு பேசுதீங்கன்னு….’ சொல்ல நெனச்ச சாந்தாவும் சிரித்து விடுவாள். சாந்தா சிரித்தால் முகம் சிவந்து விடும்.ஆச்சி அப்படியே நெட்டி முறிப்பாள்.. ‘ஒன்னையப் போய் ஒதுக்கி வச்சிருந்தமே..‘என்பாள். பர்வதத்துக்கு மாப்பிள்ளை சீரில்லாம இருக்கான்னதும்  வோம் ஞாவகம் வந்துது பாத்தியா அதுதாண்டி அவுக பண்ணின பூசைக்கி பலன்… அப்படிப் பாத்தா அப்படில்லாம் நடந்திருக்கவே வேண்டாமே’,அதையும்சொல்லிக் கொண்டாள். ஆச்சி எம்புட்டோ பார்த்து விட்டாள், எதுக்கும் அதிகம் குறைப் பட்டுக் கொண்டதில்லை. இது ஒண்ணுதான், மீனாவுக்கு சித்தசுவாதீனமாப் போனதுதான், பெரிய துயரம். இப்படி ஒரு நிலை வர்ற அளவுக்கு அவ ஒரு பாவமும் பண்ணலியே, திரவியம்  செஞ்ச சில்லரைத் தனங்களுக்கு இந்தப் புள்ளை இந்தாப் பாடு படுதோ…” என்று சிலரிடம் மாய்ந்து போவாள்.

ஆச்சியின் கொட்டகை வீட்டுக்கு அருகில் தெருவின் அகலம் அதிகரித்து விடும். அதனால் அங்கேதான் வண்டி அவிழ்த்துப் போடும் காடினாக்களும் மில்லுக்காரர் வீட்டு கார் ஷெட்டும் இருக்கும். சாந்தா வண்டியிலிருந்து இறங்கியபோது பட்டுநூல்க்காரி, அகலத் தெருவின் ஒரு ஓரமாக அரப்பு வெந்து காயப் போட்டு அதற்கு காவல் இருந்தாள்.அதனுடன் கொஞ்சம் சம்பங்கி விதையையும் போட்டுத் திரித்து, வீடு வீடாகச் சென்று விற்பாள். தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடிக்கும் நல்லது, சொட்டு எண்ணெய் தலையில் தங்காது. விரும்பிக் கேட்பவர்களுக்கு சீயக்காயையும் வெந்து காயப்போட்டுத் திரித்துக் கொடுப்பாள். அது விலை சாஸ்தி. ஒரு மூடை, இரண்டு மூடை நெல் அவித்துக் குத்தி அரிசி, நெல்லை ஊறப்போட்டு வறுத்து தகடாக இடித்து அவல், வியாபாரம் செய்வாள். சாந்தாவுக்கு சீயக்காயும் அரப்பும் கொண்டு கொடுப்பது அவளின் வாடிக்கை. போகும் போதெல்லாம், ’என்னன்னுதான் முடியைப் பேணுவீகளோ…என்னமா இருக்கும்மா, தழையத்தழைய கெண்டைக்கால் வரை, ஒங்க ஊரு, காடுன்னா கரை நெரம்பி ஆறு ஓடும் குளிக்கக் கொள்ளச் சவுரியம், இங்க என்ன செய்தீக அம்மா, வாய்க்காலில் குளிச்சா ஊரேல்லா திரண்டிரும்.. எம்மா, உங்க தலையிலிருந்து கழியற முடியச் சேத்து வச்சு தாங்கம்மா ஒரு மயிர்க் கொடியாவது பின்னி வச்சுக்கிடுதேன்,’ என்பாள். சிரித்துக்கொள்வாள் சாந்தா.

இதையெல்லாம்,பூக்காரி, வீடு பெருக்குபவள், அழுக்கு எடுக்க வருகிற வண்ணாத்தி என்று அவளுடன் பேசுகிற யார்தான் சொல்லவில்லை. பொதுவாக அரிசிக்கு, அரைக்கீரையும் கருவேப்பிலையும் விற்கிற கீரைக்காரி இவளுக்கென்று மருதாணி பறித்து வருவாள்.’ வாங்கி ஈரத்துணில சுத்தி வையுங்க நானே யாவாரமெல்லாம் முடிச்சுட்டு வந்து அரைச்சு, வச்சு விடுதேன், இது பகல் மருதாணிதான் மத்தியானம் வந்து சுண்ணாம்புல அழகா கொடில்லாம் போட்டு வச்சு விடுதேன், சுண்ணாம்ப்பு படாத இடமெல்லாம் அழகாப் புடிச்சி கோலம் மாதிரி இருக்கும்.பாருங்களேன்,  நான் அரைச்சு வச்சு விட்டாலும் எங்கையில கரியா ஆனாலும் ஆகும், துளி செகப்பு ஏறாது.’  சொல்லிச் சொல்லி மாளாது. இதில் குரூர வேடிக்கை என்னன்னா கீரைக்கார கிழவிக்கு எங்கே இருந்து வந்ததோ, விரல்லாம் பழுத்து புண்ணு மாதிரி ஆயிட்டு.அவளிடம் யாரும் கீரையோ கறி வேப்பிலையோ வாங்குவதில்லை. சாந்தா,வழக்கத்துக்கு அதிகமாக இரண்டு குத்து அரிசி கொடுத்து அவளிடமே கீரையை வாங்கிக் கொள்வாள்.தெய்வு கூடச் சத்தம்போட்டார்,ஏய் இவளே அது என்ன ஒட்டுவாரொட்டி வியாதியோ என்னவோ, வேணும்ன்னா அரிசி போட்டு அனுப்பு, வேற கீரையா இல்லை ஊர்ல நாட்டில,’என்பார். ’ஏயப்பா, இப்பல்லாம் எம்பேரைக் கூடச் சொல்ல மாட்டேங்கேளே.. நீங்க தாலி கட்டி இருக்கேளா, நான் தாலி கட்டிருக்கேனா தெரியலையே,’சிரித்தபடியே சொல்லி மழுப்பி விடுவாள். அவளுக்கு ஒரு குப்பி மருந்தும், சில கஷாயப் பொடிகள், ஒரு லப்பமும்(களிம்பு) மலையாளத்துக்குச்  சொல்லி விட்டு வாங்கித் தந்தாள். ரெண்டு மாசம் போனதும், புண்ணெல்லாம் சுக்காக  ஒணந்து போயி கை பழைய மாதிரி ஆயிட்டு. கீரைக்காரிக்கு சாந்தாவை நெட்டி முறித்து, திருஷ்டி கழிச்சு முடியலை. ‘எம் பொழப்பையே காப்பாத்துனவவுகள்ளா…’ என்று தெய்வுவைப் பார்த்தும் கும்பிட்டாள். அவள் போனதும், ’ஏட்டி சாந்தா அது என்னடி மலையாளத்து மருந்து மாயம் வச்சு கொணமாக்கின?’ என்று கள்ளச் சிரிப்புடன் கேட்டார். ‘ஆமா ஒங்களுக்கு வச்ச மாயம் தான் அதுவும்’ என்று சிரித்தாள். அவர்களின் சினேகம் ஆரம்பித்த காலத்தில் நிறையப்பேர் சொன்ன வார்த்தைகளவை.

அந்த ’விசம்பப் பேச்சுகளை’ எல்லாம் ’வைய்ய ’வைய்ய வைரக்கல்லு’ என்று நல்ல தனமாகவே எடுத்துக் கொண்டாள் சாந்தா. ’பாவைக்காய்ன்னா பத்தியம் முறிஞ்சாப் போயிரும்.சொல்றவங்க சொல்லிகிட்டே இருப்பாங்க, சரி, இப்ப மருந்து போடவா மாயம் பண்ணவா என்று கண்ணைச் சிமிட்டுவாள், கட்டிலில் அவர் அருகே அமர்ந்தபடி. ’ஆமா சந்தன சோப்பு கேட்டேல்லா வாங்கிட்டு வந்திருக்கேன்…’ எழுந்திருப்பவரை இழுத்துக் கொள்வாள். ‘சந்தனம் எல்லாம் இங்கேயே இருக்கு… ஏலக்காய் கூட இருக்கு போலயே மடியில்..’ ’ஆமா இருக்கு கொஞ்சம் போல கேசரி கிண்டினேன் அதுக்கு ஏலக்காய் நசுக்கிப் போட்டேன் அந்த வாசம், துரைக்கி என்ன தான் மூக்கோ, உடனே வாசமடிச்சிருமே, இன்ஸ்பெக்டர் வேஷங் கட்றதுன்னாத்தான நாடகமே நடிப்பீக….’ வினயமாய்த்  தொடங்கி கிண்டலும் கொஞ்சலுமாய் கூடலுக்கு நகரும் விளையாட்டு. ‘மூதேவி குடுக்கறதையெல்லாம் குடுத்துட்டு நானா தந்தேங்கிற மாதிரி,தோமராக்கட்டிலோடா கட்டிலாக் கெடக்கறதைப் பாரேன்..’ ‘ ஆமாய்யா அது என்ன உங்க வீட்டுகள்ல்ல இப்படி செக்குச் செக்கா கட்டிலு செஞ்சு போட்ருக்கே.. இதுதான் தோமராக் கட்டிலா… நல்ல ஈட்டி மரம் போலிருக்கு,வழு வழுன்னு இருக்கே’. ’ஆமா தச்சன் இளைச்சது பாதி நாம இளைச்சது பாதி…’ மீண்டும் இழைவார் தெய்வு..’ சோர்வின்றி ஆத்துத்தண்ணி போல அள்ளிக் கொள்வாள் சாந்தா.

வண்டியிலிருந்து இறங்கும் சாந்தாவைப் பார்த்ததும்,  அந்த உச்சி வெயிலில் பட்டு நூல்க்காரி என்கிற சௌராஷ்டிரத்து துளசி பாய்க்கு அடி வயித்துல ஒரு குளிர்ச்சி பரவியது. ’எம்மா வாங்க கொட்டகை வீட்டு ஆச்சியைப் பார்க்க வந்தீங்களா, இருப்பீகள்ளா இதை அள்ளி வச்சுட்டு வந்துருதேன்’ என்று பரபரத்தாள். ’இருப்பேன், மெதுவா வாங்க…அவல் இருந்தாலும் ஒரு பக்கா கொண்டுட்டு வாங்க,’ என்றாள். ஆச்சி குழம்பு கூட்டிக் கொண்டிருந்தாள், ” ஆச்சி, புளி கரைக்கும் போதே சாம்பார் வாசம் மணக்கே..இந்தப் பக்குவத்தை மட்டும் சொல்ல மாட்டீங்களே, ’ என்றபடியே அடுக்களைக்குள் வந்தாள். ‘ஆமா கொத்தமல்லிப் பொடி, வாசம் அடிக்காமலா இருக்கும், இதுல என்ன சீமையில இல்லாத பக்குவம் இருக்கு, வான்னு கூட சொல்ல விடாம வரும் போதே வாயை அடைச்சிருதியே அது எப்படிழ்ழா.’ பதிலேதும் சொல்லாமல் லேசான சிரிப்புடன் சாந்தா, வீட்டைப் பார்த்தாள். சிரிப்பு மறைந்தது. அடுக்களை பாதியாகி இருந்தது. ’அறை வீட்டு’ வாசலை செங்கல் வைத்து அடைத்து  அதை ஒரு குச்சு போல ஆக்கி இருப்பதைப் புரிந்து கொண்டாள். அறை வீட்டின் சாமான்கள் எல்லாம் அடுக்களையை அடைத்திருந்தன. சுண்டெலி வாசனை மூக்கை நெருடியது. போன முறை வந்த போது கூட இப்படி வாசனை அடிக்கவில்லை. சவம் மூஞ்ச்சூறு கண்டா அடுக்களை அங்கணாக் குழி வழியா வருது போல இருக்கு. எல்லாம் பழைய  பீங்கான் ஜாடிகளும்,  பிஸ்கட் டின்களும். அநேகமானவை காலி என்று சாந்தாவுக்குத் தெரியும். அவள் இந்த வீட்டிற்குள் தயங்கித் தயங்கி முதலில் நுழைந்த அன்று கூட வீடு எவ்வளவோ விசாலமாக இருந்தது.

5

சில தெருக்களின் சில வீடுகள் எப்பவுமே பிரபலமானவை. சில வீடுகள் இயல்பாகவே பிரம்மாண்டமாகக் கட்டப் பட்டிருக்கும். சிலது போட்டிக்காக கட்டப் பட்டிருக்கும்.நாட்டுக் கோட்டைச் செட்டியார் வீடுகள் அங்குள்ள ‘மோஸ்தரில்’ இங்கே கட்டப்பட்டிருக்கும். அவையெல்லாம் தரையிலிருந்து பத்து படி உயரத்தில் இருக்கும். ஒரே கிராமத்தின் இரண்டு ஜமீன் வீடுகள் எதிர் எதிரே இருக்கும். ஒருவருக்கு கிராமத்தில் மூன்றில் இரண்டு பங்கும் இன்னொருவருக்கு மூன்றில் ஒரு பங்கும் சொத்துக்கள். ஒன்னுக்கு மூனு ஜமீன் வீட்டுக்கு இரண்டு மாடி வைத்து வீடு கட்டினால்,ரெண்டுக்கு மூனு ஜமீன் மூனு மாடி வீடு கட்டினார். ஒன்னுக்கு மூனு ஜமீன் வீடு ரெண்டுக்கு மூனு ஜமீன் வீடு என்று பெயர் நிலைத்து விட்டது. மேல ரத வீதியில் தளவாய் அரண்மனை. அது இரண்டு பாகமாக ஆகி விட்ட்து இரண்டு தலைமுறைகளாக .மேல அரண்மனை,கீழ அரண்மனை.

ஒரு தெருவில் 32 ஜன்னல்கள் உள்ள வீட்டுக்கு, ஜன்னல் வைத்த வீடுன்னு பேர்.. கடிகாரம்poola simi வைத்த வீடு,  தலை வாசலின் இரண்டு புறமும் அழகான, சமச்சீரான இரண்டு  வளைவுகளை யானைத் தலைபோல கருப்புக் கலரில் பெயின்ட் அடித்து வைத்திருக்கும் வீட்டுக்கு ஆனை வச்ச வீடு, மான் வைத்த வீடு என்று வசதியானவர்களின் பெரிய வீடுkaLகளுக்கு ஒரு பேர் அமைந்துவிடும். அவர்களின் வீட்டிலேயே வேறு பெயர் பொறித்திருந்தாலும் இப்படி வழங்கு பெயரொன்று அமைந்து விடும். கொட்டகை வீட்டின் தலைவாசல் நிலைப்படியில்  ‘சிவமயம்’ என்று எழுதி கீழே ’றா. சி இல்லம்’ என்று மரத்தில் பொரித்திருக்கும். நிலையின்  உள்புறம் சற்றே பெரிதான மாடப் பிறை, ஒரு அலமாரியின் தட்டுப் போல, அதில் கஜ லக்‌ஷ்மி சிலை.  நல்ல கருந்தேக்கு மரத்தில செஞ்ச நிலையா, சிற்பம் கருகரு வென்று லட்சணமாய் இருக்கும். அம்மாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி என நல்ல நாள் தோறும் அதற்கு சந்தனப் பொட்டு, அரளி மாலை என சகல அலங்காரமும் உண்டு. அந்தப் புடைப்புச் சிலைக்கு  முன்னால், நடுத்தரமான அளவில் நார்ப்பெட்டி. அதில் எப்போதும் அரைப்பக்கா அரிசி.  வாசலில் யார் பிச்சை கேட்டு வந்தாலும் வீட்டில் உள்ள யாரும் ஒரு குத்து எடுத்துப் போடலாம்.

ஆனால் றா. சி. இல்லத்திற்கு ‘கொட்டகை வீடு’என்றே பெயர் நிலைத்து விட்டது. வீட்டின் நடுவில் நான்கு  கல்த் தூண்களின் மேல் உயரமாக பிரமிட் வடிவில் கட்டப்பட்ட ஓட்டுச் சாய்ப்பு, நான்கு புறமும் சரியும். ஓட்டுச் சாய்ப்பின் கீழ் மூன்றடி உயரத்தில் செங்கல் கட்டி சுண்ணாம்பு பூசி, கலர் கண்ணாடிகள் பொருத்தியிருக்கும். காலையிலும் மாலையிலும் அதன் வழியாக விழும் சூரிய ஒளி கொட்டகையின் கீழ் உள்ள கூடத்தில் அழகாகப்  படியும்.தெருவின் பிள்ளைகள் ஒன்றுக்கொன்று அதைக் காட்டி விளையாட அடிக்கடி வரும். நான்கு தூண்கள் பின்னால் ஒளிந்தும் விளையாடுவார்கள். யாரும் ஒன்றும் சொல்லுவதில்லை. சாயந்தரம் விளக்குப்பூசை ஆகும் போது பிள்ளைகளுக்கு கல்கண்டோ, கிஸ்மிஸ் பழமோ கொடுப்பாள் ஆச்சி. பௌர்ணமின்னா சக்கரைப்பொங்கல். எல்லாம் ரெடியாக தோட்டத்தில் போய் வாழையில பறித்து வந்து ரெடியாக நிற்கும். மணி அடித்துப் பூசை முடியும் போது ’ரொக்கப் புள்ளியா’, வரிசையா உட்கார்ந்து கொள்ளும். சூடு பறக்க பொங்கலை வச்சதும், வாய் பொத்துப் போனாலும் பரவாயில்லைன்னு வாயால் ஊதி ஊதி  ’அவுக் அவுக்கு’ன்னு தின்று விட்டு இலையைக் கூடமெங்கும் இரைத்துப் போட்டுவிட்டு அல்லது தூணில் ஒட்டி வைத்து விட்டு, ’ஹேய்…’ என்ற ஓலத்துடன் ஓட்டமாய்  ஓடி விடும். வீடு பெருக்கும் ஆவுடைக்கு வேலை மேல் வேலை. ‘புள்ளகளா,வானரங்களா ஆத்தா அம்மாக்கள்ளாம் என்ன பாடு படுதாகளோன்னு’ சத்தம்போடுவாள். ஆச்சி  அடக்கிவிடுவாள்,’புள்ளைகள்ன்னா அப்பட்டித்தான், இந்தப் பூசையே புள்ளைக வேண்டி ஆரம்பிச்ச பௌர்ணமி விரதம்தான், அன்னா பாரு எம்புட்டுக் காலமா பெரிய பண்ணை வீட்டில செம்பகம் இந்தப் பூசை பண்ணி புள்ளைகளுக்கெல்லாம் பொங்கல் படைக்கா, ஆம்பிளைக வீட்டுக்கு அடங்கி இருந்தால்லா..என்னமும் நடக்கும், என்ன செய்ய…  சரி வேலையைப் பாரு”, சட்டென்று ஆச்சி தன்னைத் திருத்திக் கொள்வாள்.

கல்யாணம் எல்லாம் கூடத்தில்தான் நடக்கும். கூடத்தைச் சுற்றி நான்குபுறமும், பாவூர் செங்கல் பாவிய  தார்சால் என்கிற தாழ்வாரம். தாராளமாக இரு நூறு இலை போடலாம். மேற்குப் பார்த்த தலைவாசலை ஒட்டிய தாழ்வாரத்தில்தான் எல்லா கணக்கு வழக்குகளும் நடக்கும். கணக்கு வழக்குகள் நடக்காத சமயத்தில் ஆச்சியின் சம்பிரமம். தெருக்காரர்கள், வேலைக்காரர்கள் எல்லோருடனும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பாள் ஆச்சி. மீனாவும் அவள் மகள் பார்வதியும்   கூட இருப்பார்கள். மகன், பேர் சிவராமன் சமயத்தில் இருப்பான்,இல்லாவிட்டால் படித்துக் கொண்டிருப்பான்,அல்லது அண்ணன் துரையுடன் போராடிக் கொண்டிருப்பான்.

தலைவாசலுக்கு  எதிர் புறம் உள்ள தார்சாலை ஒட்டி நான்கு அறைகள். பெரும்பாலும் நெல், தானியங்கள் போட்டு வைத்திருக்கும்.கூடத்தின் வட புறமும் தென் புறமும் இரண்டு பெரிய வீடுகள். இரண்டு பெரிய குடித்தனங்கள் இருக்கலாம். வட புறத்து வீட்டில்தான் சிவஞானத்து ஆச்சி இருந்தாள். அங்கேதான் பூசை அறையும். தெற்கு வீட்டில் திரவியம் தன் குடும்பத்துடனிருந்தார். குடும்பம் என்றால் இரவில் மட்டும் தனியே போய்க் கொள்ள வேண்டியது. மற்றப்படி சமையல் சாப்பாடு எல்லாம் வடக்கு வீட்டில்தான், எப்போதும் சமையலுக்கு வேலையாள் உண்டு.வீட்டிற்குப் பின்னால் தோட்டம், மாட்டுத் தொழு, சில குச்சுகள். பெரும்பாலும் அவற்றில் வீட்டில் வேலை பார்ப்பவர்கள்தான் இருப்பார்கள். வாடகை ஒன்றும் கிடையாது. தோட்டத்தின் கடைசியில் வாய்க்கால் ஓடும். அழகான படித்துறையும்  சாமி வைத்து நீராட்டி பூசை செய்ய ஒரு மாடமும் உண்டு. தெருவில் பலரும் வாய்க்காலுக்கு வந்து துவைக்கவும் குளிக்கவும் செய்வார்கள்.

குழம்பு கூட்டி லேசாக நாக்கில் விட்டுப் பார்த்தாள். ஈரக் கையின் இரண்டு விரலை உப்பு மரவையில் பட்டும்படாமலும் வைத்து எடுத்தாள்.கொஞ்சம் உப்புக்கல் ஒட்டிக் கொண்டு வந்தது. அதைக் குழம்பில் கரைத்தாள். ‘இன்னா உப்பு உறைப்பு சரியா இருக்கான்னு பாரு சாந்தா..’ என்று குழம்பு கூட்டும் சட்டியை அவளைப் பார்த்து நகர்த்தினாள். ’அது சரி நீங்க கூட்டின குழம்பை நான் உப்புப் பாக்கவா.. ‘ சொல்லியபடியே ஒரு சொட்டு வாயில் விட்டுப்பார்த்தாள். ’ஆச்சி அப்படியே விட்டுச் சாப்பிட்ரலாம்,கொதிக்க வைக்கக் கூட வேண்டாம் அம்புட்டு ருசி,’ என்றாள். ‘ஆச்சின்னு கூப்பிடாதேன்னு..சொல்லிருக்கேன்லா.’ என்றதும், சமாதானமான பாவனையில்,   ‘மருமக எப்படி இருக்கா,’என்று கேட்டாள். ’அதுக்குத்தாம்ழா ஒன்னையக் கூட்டிட்டு வரச் சொன்னேன்.’ ரெண்டு நாளா முகம் நல்லத் தெளிச்சியா இருக்கு, கொழுக்கட்டை வேணும்ன்னு ஆவுடைகிட்ட கேட்டாளாம். இவ அவசர அவசரமா செஞ்சு குடுத்திருக்கா. ’நல்லால்லைன்னு அப்படியே வச்சுட்டு அத்தைய எங்கே’ன்னாளாம். நான் கொஞ்சம் கண்ணசந்திட்டேன். முழிச்சப்புறம்தான் ஆவுடை சேதியைச் சொன்னா, அவளுக்கே ஆத்தாமை தாங்கல, எம்புட்டு நாளா அறைக்குள்ளேயே இருக்காக, பெரியாஸ்பத்திரின்னால்லாம் பாளையங்கோட்டைல வந்துட்டாம்லா, யார்ட்டயாவது காமிங்க ஆச்சிங்கா.  அதான் என்னமும் சரியாயிருக்கா நாமதான் அடைச்சு வச்சுருக்கோமான்னு சங்கடமாருக்கு. வாயேன் செத்த நேரம் பாத்துட்டு வந்திருவோம்,நீ இருந்தேனாக்க கொஞ்சம் தெம்பா இருக்கும், என்ன சொல்லுதே…’என்றாள். ” இருக்கும் ஆச்சி, கோயிலில கொடி ஏறி இருக்குல்லா, இந்த துர்த் தேவதைகளையெல்லாம்  கொடிமரத்தில கட்டி வச்சிருப்பாங்க. அதுக சேட்டை ஒன்னும் திருவிழா முடியும் தன்னியும் எடுபடாது..அதனாலயும் தெளிவு வந்திருக்கும், இருந்தாலும் வேலைக்காரிக்கு தோனறது நம்ம புத்திக்கு எட்டலையே. பேய்க்கும் பாக்கணும் நோய்க்கும் பாக்கணும்ன்னு சொல்லுங்கள்ளா, நாம அங்க இருந்து பெரிய வைத்தியரா கூட்டியாந்து காமிப்போம்,” என்றாள் சாந்தா. சொல்லியபடியே மீனாவை அடைத்து வைத்திருந்த அறையை நோக்கிப் போனாள்.  ‘திடீர்ன்னு வெளிச்சம் வந்தா சமயத்தில் லேசான முனகல் வரும், அதனால், மெதுவாகக் கதவைத் திறந்தாள் சாந்தா. ஆவுடை சொன்னது சரிதான். மீனா சித்தப் பிரமை பிடிச்சவ மாதிரி இல்லை.