கனவுகளின் சுமை – ஹெர்சாக்கிற்கு எட்டியதும் கிட்டியதும்Gokul
கோகுல் பிரசாத்

Image 1

 

1950 களின் இறுதியில் ஃபிரான்ஸில்  சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த புதிய அலை சினிமா 1960 களின் இறுதியில் ஜெர்மனியையும் தொற்றியது. ஃபிரான்ஸை போலன்றி ஜெர்மனியில் R.W.ஃபாஸ்பைண்டர், ஹெல்மா சாண்டர்ஸ், எட்கர் ரூட்ஸ் ஆகிய அசலான கலைஞர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். நமது சூழலில், நான் அறிந்தவரை, பத்தில் ஐந்து நபர்கள் சிறந்த இயக்குநராக கருதும் வெர்னர் ஹெர்சாக் – ஜெர்மனியின் அப்புதிய அலை துப்பிய பெருந்துளி. தனது பத்தொன்பதாவது வயதிலேயே படம் எடுக்கத் துவங்கிவிட்ட ஹெர்சாக், ஃபிரான்ஸின் புதிய அலை சினிமா இயக்குநர்களுள் ஒருவரான கோதார்ட் அளவிற்கு மோசமான இயக்குநராகவில்லை என்பதே முதல் ஆறுதல்.

முழு நீளத் திரைப்படங்களுக்கு இணையாக ஆவணப்படங்களையும் தொடர்ந்து இயக்கும் ஹெர்சாக், சாமானிய மக்களின் யதார்த்த வாழ்வை சித்தரிப்பதைக் காட்டிலும் பொதுமைப் பண்புகளிலிருந்து விலகி வாழும் அதீத இலட்சிய வெறி கொண்ட மனித மனங்களின் பைத்தியக்காரத்தனத்தையே தனது திரைப்படங்களுக்கான கருவாக சுவீகரித்துக் கொள்பவர். அதன் காரணமாகவே  Signs Of Life தொடங்கி My Son My Son What Have Ye Done வரை மனித மனத்தின் நுட்பத்தினை ஹெர்சாக்கினால் நெருங்க முடியவில்லை. தொடர் குற்றச் சம்பவங்களின் பின்னணியில் அமைந்திருந்தாலும் மைய கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை நோக்கியே குவியும் The Bad Lieutenant படத்தின் இறுதி விளைவு ஏமாற்றத்தையே அளித்தது. கோபயாஷியும் டிசிகாவும் ஆழ்மனத்தின் கதவுகளை உடைத்தெறிந்து அதன் மேடு பள்ளங்களை அவற்றின் நுண்மைகளுடன் காட்சிப்படுத்திவிட்ட நிலையில், ஹெர்சாக் அகத்தின் வெளியே நின்று கொண்டு கதவை ஓங்கி அறைபவராக மட்டுமே எஞ்சி நிற்கிறார்.

ஹெர்சாக்கின் புகழ்பெற்ற Aguirre, The Wrath Of God திரைப்படத்தின் அபாரமான ஒளிப்பதிவு, படத்தை காணத் தகுந்ததாக எண்ணச் செய்கிறதேயன்றி சிறந்த படங்களின் பட்டியலில் வைக்க மனம் ஒப்பவில்லை. ஹெர்சாக் இயக்கிய முழுநீளத் திரைப்படங்களில் Stroszek-ஐ  மட்டுமே ஒரு நல்ல  படமாகக் குறிப்பிட முடியும். எத்தகைய முயற்சிகளுக்குப் பின்னரும் வாழ்க்கை எந்தவித பெரிய மாற்றங்களுமின்றி சலிப்பூட்டக் கூடியதாகவும் வலி மிகுந்ததாகவுமே இருக்க முடியும் என்பதன் குறைபட்ட அனுபவத்தையே இப்படமும் தர வல்லது. மேற்கூறிய இதே கருப்பொருளைக் கொண்ட பேலா தாரின் The Turin Horse படத்தோடு ஒப்பிடுகையில் Stroszek அடையும் வீழ்ச்சி வெளிப்படையானது. பேலா தார் உருவாக்கி அளிக்கும் நம்பகத்தன்மையோடும் தரிசனத்தோடும் ஹெர்சாக் பரிதாபமாக தோற்றுப் போகிறார்.

Fitzcarraldo-வை சிறந்த படமாகக் குறிப்பிடுபவர்கள் – அதற்கான காராணமாக அது ஐந்து வருடங்கள் அடர்ந்த காட்டிற்குள் மிகுந்த சிரமங்களுக்கிடையே எடுக்கப்பட்ட படம் என்பதையே பிரதானமாக சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு திரைப்படத்தின் தயாரிப்பின் போது அக்குழு எதிர்கொண்ட சிக்கல்கள் எல்லாம் அப்படத்தினை நல்ல படமாகத் Image 2தோற்றுவிக்கும் காரணிகளா என்ன? ஃபிட்ஸ்கரல்டோ திரைப்படத்தைக் காட்டிலும் அப்படம் உருவான விதம் குறித்து லே ப்ளான்க் இயக்கிய ஆவணப்படமான Burden of Dreams  மேலதிக விவரணைகளோடு சுவாரஸ்யமாகவும் சிறப்பாகவும்  இருந்தது. 2000-த்திற்குப் பிறகு ஹெர்சாக் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் அபத்தமானவை. Invincible மற்றும் The Wild Blue Yonder ஆகியன ஹெர்சாக்  எனும் கலைஞனின் கலையுலக வாழ்வில் விழுந்துவிட்ட கறுப்புத் துளைகள். அது வழி ஊடுருவி அதன் மறுபுறத்தை ஹெர்சாக்கால் இன்றுவரை அடைய முடியவில்லை.

ஹெர்சாக்கின் ஆளுமை மீது நிலைபெற்றிருக்கும் கவர்ச்சியும் பிரியமும் அவரது தனிப்பட்ட வாழ்வு சார்ந்து உருவானது. சளைக்காத தன் முனைப்பும் உலகின் எந்த மூலைக்கும் சென்று படம் பிடிக்கும் சாகசமும் துணிச்சலும் வேறெந்த இயக்குநருக்கும் இல்லாதது. ஒரு பெரும் படகை செங்குத்தான மலை மீது ஏற்றத் துடிக்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்கும் போதும் ‘இந்தக்  கனவு தான் நான். இது இல்லாமல் என்னால் வாழ முடியாது’ எனக் கூறும் ஹெர்சாக், முனிச் நகரத்திலிருந்து பாரீஸ் வரை நடந்தே செல்லவும் தயங்குவதில்லை. ‘வாழ்வின் பாடலை நீங்கள் கேட்டதுண்டா?’ என நம்மை வினவும் ஹெர்சாக், நாமறியாத வாழ்க்கையை நம்மை அறியச் செய்ய தன்னைப் போன்ற சாகச மனிதர்களின் கதைகளையே தனது ஆவணப் படங்களின் மூலம் விவரிக்கிறார். அம்மனிதர்களின் கதைகளைக் கூட ஹெர்சாக் முக்கியமானவையாகக் கருதுவதில்லை. அவற்றின் வாயிலாக திரண்டு எழும் கருத்தும் காட்சிப்படுத்தப்படும் புதிய நிலப்பரப்புமே ஹெர்சாக்கிற்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. இதனாலேயே ஹெர்சாக்கின் முழுநீளத் திரைப்படங்களை விட சில ஆவணப்படங்கள் (அனைத்தும் அல்ல!) சிறந்த கலைப்படைப்புகளாக அமைந்திருக்கின்றன.

Lessons Of Darkness படத்தின் தொடக்கத்தில் பாஸ்கலின் வரிகளாக இடம்பெறுபவை உண்மையில் ஹெர்சாக்கெ புனைந்தது. ‘இவை ஏமாற்றுவதற்காக அல்ல. மக்கள் உயரிய பார்வைக் கொண்டு இப்படத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமரசம்’ என சப்பைக்கட்டு கட்டும் ஹெர்சாக், இத்தகைய ஜோடனைகள் ஏதும் புனையாமலேயே Land Of Silence And Darkness-இல் தொடுதலின் Image 3மொழியை அதன் உச்சபட்ச அழகியலின் சாத்தியங்களோடு பதிவு செய்கிறார். Lessons Of Darkness வளைகுடா போர் குறித்த நேரடிச் சித்திரம் அல்ல. ஹெர்சாக்கின் பார்வையும் திணிக்கப்பட்டிருக்கிறது. அதில் இடம்பெறும் மனிதர்களிடம் கேள்விகள் எழுப்பி, தான் விரும்பும் பதிவு செய்ய நினைக்கும் பதில்களையே சாமர்த்தியமாக பெறுகிறார். இவை போலன்றி 2000-த்திற்குப் பிறகு, The White Diamond(2004), Grizzly Man(2005), Encounters At The End Of The World(2007), Into The Abyss(2010) போன்ற சொல்லிக்கொள்ளும்படியான நல்ல ஆவணப்படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றுள் Grizzly Man-ஐ கடந்த பத்து ஆண்டுகளில் வெளியான சிறந்த ஆவணப்படங்களுள் ஒன்றாகத் தயக்கமின்றி சொல்லலாம்.

ஒரு மனிதன் தனது உச்சகட்டக் கணங்களில் மட்டுமே அதுவரை அவன் மனம் அறிந்திராத உணர்வுகளை கீழ்மைகளை நல்லியல்புகளை வெளிப்படுத்துகிறான் என்பதையே இப்படத்திலும் ஆதாரமாக கொள்ளும் ஹெர்சாக், டிமோதி த்ரெட்வெலின் கடைசி ஐந்து வருடங்களை வெவ்வேறு பருவங்களில் பதிவு செய்யப்பட்ட காட்சித் துணுக்குகள் வழியாக விவரிக்கிறார். தன்னை ஒரு விலங்காகவே கருதும், மாற்றிக் கொள்ள முயற்சிக்கும் டிமோதி, தான் கரடிகளின் நன்மதிப்பை பெற்றுவிட்டதாகவும் நம்பத் தொடங்குகிறார். எவற்றிற்காக போராடினாரோ எவற்றை காப்பதாக எண்ணிக் கொண்டிருந்தாரோ அம்மிருகத்தாலேயே கொல்லவும்படுகிறார். பிரமிப்பூட்டும் ஒளிப்பதிவும் அதன் பின்புலமும் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஒரே வகை மாதிரி காட்சிகளை சலிப்பின்றி கடக்க உதவுகின்றன.   மனிதனாக இருப்பதன் குறித்த பெருமையையும் விலங்குகளின் கட்டுப்பாடற்ற மகிழ்ச்சியை கண்டு பொறாமையையும் ஒருசேர நம்மை உணரச் செய்வதில் அடங்கியிருக்கிறது இப்படத்தின் வெற்றி.

பல சிறந்த ஆவணப்படங்களை இயக்கியவரான எர்ரொல் மோரிஸ் போல தனக்கென தனித்துவமான திரை மொழியை ஹெர்சாக் கையாளாவிடினும், கவித்துவமான காட்சிகளாலும் தேர்ந்த கூறல் முறையாலும் பார்ப்பதற்கும் உணர்வதற்கும் இடையேயான திரைக்கோட்டினை அனாயாசமாக அழித்து  சர்ரியல் அனுபவத்தை, அவை நமக்கு தரத் தவறுவதில்லை. (ஆவணப்படங்களில் மட்டும்). பால் க்ரோனின் எடுத்த நீண்ட பேட்டியில் (Herzog On Herzog), தனது பெயர் இல்லாவிட்டாலும் பார்த்த மாத்திரத்திலேயே ‘இது ஹெர்சாக் படம்தான்’ என பார்வையாளர்களால் கண்டுகொள்ள முடியுமென கூறும் ஹெர்சாக் நூல் முழுதும் தான் ஒரு சாதாரண இயக்குநர் போன்ற தொனியிலேயே உரையாடுகிறார். நாம் இதை அவையடக்கமாக புரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ஹெர்சாக் தன்னை அறிந்தவர்.